ஆறுமுகனார் படத்தைத் திறந்து கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நினைவேந்தல் உரை!


திருமழப்பாடி. பிப்,3 ‘‘‘கொள்கை ஆலமரமாக பழு தில்லாத விழுதுகளைத் தந்துள்ள ஆறுமுகனாருக்கு நல்ல அறக்கட்டளை அமைக்க வேண்டும்! பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உறுதுணையாக இருக்கும்!” என்று முனைவர் அ.ஆறுமுகனார் படத்திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வீரவணக்க உரையாற்றினார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றியம் திருமழப்பாடி ஊராட்சித் தொடக்கப்பள்ளி வளாகத்தில் 1.2.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், குறள் ஞாயிறு தமிழ்ச் செம்மல் திருமழப்பாடி முனைவர் அ.ஆறுமுகனார் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி அவரது குடும்பத்தார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு கலைமாமணி முனைவர் மருத்துவர் தஞ்சை சு.நரேந்திரன் தலைமை ஏற்க, ஆறுமுகனார் மகள் கண்ணகி திருவள்ளுவன் அனைவரையும் வரவேற்றார்.
ஆ.சாரதாம்பாள் ஆறுமுகம், அண்ணாமலை பல்க லைக்கழகப் பேராசிரியர் அரங்க பாரி, தோழர் வாலாசா வல்லவன், அரியலூர் கழக மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், சிதம்பரம் மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்டக் காப்பாளர் மணிவண்ணன், தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் கென்னடி, அசோக் சக்கரவர்த்தி, கழக ஒன்றியச் செயலாளர் கோபி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, அ.ஆறுமுகம் அவர்களின் குடும்பத்தி னராகிய மருத்துவர் ஆ.திருவள்ளுவன், தலைமை ஆசிரியர் ஆ.அல்லி, ஆ.இளங்கோவன், பா.தேவி இளங்கோவன், மருத்துவர் ஆ.பரவேந்தன், மருத்துவர் தி.அன்புச்செல்வி பாவேந்தன், பொறிஞர் ஆ.எழிலரசன், நா.சாணக்யா எழிலரசன், திட்ட அலுவலர் சோ.ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். தொடர்ந்து, தமிழர் தலைவர் அவர்கள், அ.ஆறுமுகம் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து அவரின் நினைவு மலரை வெளியிட்டார். தொடர்ந்து, கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்குச் செல்லவேண்டிய கட்டாயம் உள்ளதால் முதலில் பேசிவிட்டு விடைபெறுவார் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து கழகத் தலைவர் உரையாற்றினார்.
அவர் தமது உரையின் தொடக்கத்தில், “திரும ழப்பாடி என்பது பக்திக்கு பெயர் பெற்ற இடம். அந்த இடத்தில் தந்தை பெரியார் கொள்கைகளை கடை பிடித்து, அதன்படியே வாழ்ந்து, குடும்பத்தையும் கொள்கை வழி ஆக்கி, இன்று படமாகவும், பாட மாகவும் திகழ்கின்றார்” என்றும், “ஆறுமுகம் என்ற கொள்கை ஆலமரம் பழுதில்லாத விழுதுகளையும் கொடுத்துள்ளது” என்றும் அ.ஆறுமுகம் அவர்களுக்கு புகழாரம் சூட்டினார். தொடர்ந்து, படத்தை திறந்து வைக்கும் போது ஒன்றை கவனித்ததாகச் சொல்லி உரையாற்றினார். அதாவது, “பொதுவாக ‘பிறப்பு – இறப்பு’ என்றுதான் போட்டிருப்பார்கள். ஆனால், இங்கே ‘புவியில் – புகழில்’ என்று போட்டிருந்தார்கள். புதிதாகக் கற்றுக்கொண்டேன். பெற்றுக்கொண்டேன்” என்றதும் மற்றவர்களும், ‘அடடே…’ என்று அ.ஆறுமுகம் அவர்களுடைய பிள்ளைகளின் கொள்கைப் பற்றையும், உறுதியையும் வியந்தனர்.
மேலும் அவர், “பிள்ளைகளுக்கு சொத்து சுகம் சேர்க்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், சொத்துகளை விற்று படிக்க வைத்தவர். அதுவும் போதாமல் 5% வட்டிக்கு வாங்கி கல்விக்குச் செலவழித்துவிட்டு, கடனையும் உடனடியாகத் திருப்பிச் செலுத்தியவர்” என்றார். தொடர்ந்து, “ஒருவர் முன்னால் வந்துவிட்டால், மற்றவர்களுக்கு அது ஊக்கம் தரும். அப்படித்தான் இந்த மொத்தக் குடும்பமும் முன்னுக்கு வந்துள்ளது” என்றும், “இவ்வளவு தூரம் அவர் முன்னுக்கு வந்த தற்கு, அ.ஆறுமுகம் அவர்களின் வாழ்விணையர் ஆ.சாரதாம்பாள் தான் காரணம். அவருக்கு சிக்கனம், கருமித்தனம், ஊதாரித்தனம் ஆகியவைகளை பிரித்த றிந்து கொள்ளும் தன்மை இருப்பதால் இது சாத்திய மாயிற்று” என்று அவரைப் பாராட்டினார். தொடர்ந்து, “ஆறுமுகனார் இங்கே படிப்பகம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். அந்த படிப்பகத்திற்கு சுயமரியாதை இயக்கப் புத்தகங்களை நாங்கள் அனுப்பி வைக்கிறோம்” என்றும், “ஆறுமுகனார் – சாரதாம்பாள் பெயரில் ஒரு நல்ல அறக்கட்டளையை உருவாக்கி, அதில் மாணவர்களுக்கு பரிசுத்தொகை, உதவித்தொகை ஆகியவற்றுக்கு பயன்படுத்தும்படியாக குடும்பத்தினர் அனைவரும் ஆலோசித்துச் செய்யுங்கள். அதற்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் – நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உறுதுணை யாக இருக்கும்” என்று கூறி, “வாழ்க அ.ஆறுமுகனார் புகழ்” என்று கூறி, தமது உரையை நிறைவு செய்துகொண்டார். தொடர்ந்து சாரதாம்மாள் அவர்களுக்கு கழகத் தலைவர் பொன்னாடை அணிவித்து மரியாதை செயதார்.
நிகழ்ச்சியில், குடந்தை வய்.மு.கும்பலிங்கன், நெய்வேலி ஞானசேகரன், மருத்துவர் தனித்தமிழ் கொற்றன், வழக்குரைஞர்கள் பகுத்தறிவாளன், பழனியாண்டி ராசா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ராஜேந்திரன், பிரபாகரன், விவசாய அணிச் செயலாளர் இளவழகன், இளைஞரணி தலை வர் மணிகண்டன், வீரமணி, செந்துறை ஒன்றியத் தலைவர் முத்தமிழ்செல்வன், அரியலூர் ஒன்றியத் தலைவர் சிவக்கொழுந்து, திருமானூர் ஒன்றியச் செயலாளர் கோபிநாதன், திருமானூர் நகரச் செயலாளர் அரங்கநாதன், பாரிவள்ளல், கீழ மாளிகை ரஜினி, திருமானூர் மணிகண்டன், விளாங்குடி விஜய், மறவனூர் மதியழகன், கீழப்பழுவூர் அன்பரசன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தனர்.
