மாமல்லபுரம், பிப். 3- உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை மாமல்ல புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சுற்றுலா துறையில் ரூ.22,795 கோடிக்கான முதலீடு, 66 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பன்னாட்டு சுற்றுலா மாநாடு
தமிழ்நாடு சுற்றுலா துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா முதல் உச்சி மாநாடு – 2026’ மாமல்லபுரத்தில் நேற்று (2.2.2026) தொடங்கியது. மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது, பூம்புகாரில் ரூ.23.60 லட்சத்தில் கலைக்கூடம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள், சிதம்பரத்தில் ரூ.8.65 கோடியில் புதிய தமிழ்நாடு ஓட்டல், மாமல்லபுரம் மரகத பூங்காவில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.8 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் பூங்கா ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
திருக்கடையூரில் ரூ.5 கோடியில் தமிழ்நாடு ஓட்டல், தரங்கம்பாடியில் ரூ.3 கோடியில் நடைபாதை, வாகன நிறுத்துமிடம், மின்சார அறை, சுகாதார வளாகம் உள்ளிட்ட சுற்றுலா வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டில் முதல்முறையாக சுற்றுலா மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சி, பெருமிதம் அளிப்பதுடன், பொறுப்புணர்வையும் வழங்குகிறது. தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலா துறை மேம்பாட்டுக்கு ரூ.612.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த 5 ஆண்டுகளில் 128.97 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகள், 45 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு வந்துள்ளனர். இன்னும் அதிக அளவிலான பயணிகள் வரவேண்டும்.
தமிழ்நாட்டில் 12 முன்னுரிமை சுற்றுலா பிரிவுகளின் வளர்ச்சியை மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலா கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து தகுதியான சுற்றுலா திட்டங்களுக்கும், ஒற்றைச் சாளர அனுமதியுடன் கூடிய, நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறை மேற்கொள்ளப்படும்.
23 ஆயிரம் கோடிக்கு முதலீடு ஒப்பந்தம்
தனியார் முதலீட்டை ஊக்குவிக்க, சுற்றுலா சார்ந்த 13 தகுதியான திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. திட்டங்களின் அடிப்படையில் முதலீட்டு மானியம் – கூடுதல் முதலீட்டு மானியம் – கட்டமைப்பு ஊக்கத்தொகை, மின் பயன்பாட்டில் கட்டணச் சலுகை போன்ற சலுகைகள் வழங்கப்படும். முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவுச் சேவைகளையும் அரசு நிச்சயம் வழங்கும்.
இந்த மாநாட்டில் பல்வேறு சுற்றுலா பிரிவுகளில், ரூ.22,794.78 கோடிக்கான உறுதியளிக்கப்பட்ட முதலீடு, 65,937 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
உலக சுற்றுலா வரைபடத்தில் கலை, பண்பாட்டு சுற்றுலா தலமாக தமிழ்நாடு இடம்பெற, முதன்முறையாக, 2027 ஜனவரியில் ‘தமிழ் பினாலே’ நடத்தப்படும். மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த, மாமல்லபுரத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையம் அமைத்து, அதன்மூலம், ரூ.100 கோடியில் உலகத் தரத்தில், நவீன சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். 2023ஆம் ஆண்டு சுற்றுலா கொள்கை அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு, சிப்காட் நிறுவனம் சுற்றுலா தலங்களை கண்டறிந்து, முதலீடுகளை ஈர்த்து, புதிய சுற்றுலா வசதிகளை உருவாக்க உள்ளது.
இதன் முதல்கட்டமாக, கன்னியா குமரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, தூத்துக்குடி மாவட்டங்களில் 4 சிறப்பு சுற்றுலா இடங்கள் அடையாளம் காணப்பட்டு, முதலீடுகளை ஈர்க்க விருப்பப் பதிவு கோரிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2ஆம் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 31 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவை, நகர்ப்புற சுற்றுலா, சிறப்பு அனுபவ சுற்றுலா, பெரிய சுற்றுலா மய்யங்கள் என்று பிரிக்கப்பட்டு, தங்கும் இடம், தீம் பார்க், கேம்ப்பிங் சைட்ஸ் (Camping Sites), இயற்கை அனுபவத் தங்கும் இடங்கள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் தமிழ்நாட்டில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர்.ராஜேந்திரன், டிஆர்பி.ராஜா, தலைமைச் செயலர்
நா.முருகானந்தம், சுற்றுலா துறை செயலர் மணிவாசன், சுற்றுலா துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா, தொழில் துறை செயலர் அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2 நாள் மாநாடு இன்று (3.2.2026) நிறைவடைகிறது.
