சென்னை, பிப். 3- சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள நாவலூர் ஏரியில் ரூ.30 கோடி செலவில் தூர்வாரப்பட்டு அமைக்கப்பட்டுள்ள சிப்காட் சுற்றுச்சூழல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (2.2.2026) திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழ்நாடுஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
முதலீடுகள்
இந்தியாவிலேயே பெரிய பொருளாதார வளர்ச்சி மிக்க மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. தமிழ்நாடுதொழில் துறையானது அனைவருக்கும் பயனளிக்கும் சமச்சீரான வளர்ச்சியை உறுதிசெய்து, பரவலான முதலீடுகளை ஈர்ப்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறது.
லட்சம் பேருக்கு வேலை
அந்த வகையில், சிறுசேரி சிப்காட் தகவல் நுட்ப பூங்கா வளாகமானது 782.51 ஏக்கர் பரப்பளவில் 2002ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தத் தகவல் தொழில்நுட்பப் பூங்கா சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதுடன், சுமார் ரூ.14 ஆயிரம் கோடி முதலீட்டையும் ஈர்த்துள்ளது.
சுற்றுச்சூழல் பூங்கா
இந்த பூங்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் ஒரு முனைப்புடன், சிப்காட் நிறுவனம் 33.43 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நாவலூர் ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி புனரமைத்தும், பூங்காக்கள், புல்வெளிகளுடன் கூடிய நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டும் பாதைகளை அமைத்தும், ரூ.30 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கியுள்ளது.
இச்சுற்றுச்சூழல் பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமையப் பெற்றுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், பள்ளிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமையப் பெற்றுள்ளது.
இப்பூங்காவை நேற்று (2.2.2026) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழில்துறை செயலர் வி.அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில்
2026ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது
சென்னை, பிப். 3- தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான (ஜனவரி – டிசம்பர்) மாணவர் சேர்க்கை தொடங்கியது.
திறந்தநிலை பல்கலைக்கழகம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, மேலாண்மை, வர்த்தகம், சமூகவியல், சமூகப்பணி, பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 11 இளங்கலைப் படிப்புகளையும், 11 முதுகலைப் படிப்புகளையும் வழங்கி வருகிறது. இவை தவிர, பல்வேறு பாடங்களில் 11 டிப்ளமா படிப்புகள், 12 சான்றிதழ் படிப்புகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 2026-ஆம் ஆண்டுக்கான (ஜனவரி – டிசம்பர்) மாணவர் சேர்க்கை நேற்று (2.2.2026) தொடங்கியது. இச்சேர்க்கையைப் பல்கலைக்கழகப் பதிவாளர் கு. இரா. செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாணவர் சேர்க்கைப் பிரிவு இயக்குநர் ஆர். ஆறுமுகம், மாணவர் உதவி மற்றும் சேவைப் பிரிவு இயக்குநர் த. ரவிமாணிக்கம், பாடநூல் தயாரிப்பு மற்றும் விநியோகப் பிரிவு இயக்குநர் பா. பாண்டியவடிவு ஆகியோர் பங்கேற்றனர்.
வெவ்வேறு பாடப்பிரிவுகள், அவற்றுக்கான அடிப்படை கல்வித் தகுதிகள், மாணவர் சேர்க்கை விதிமுறைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) தெரிந்து கொள்ளலாம் எனப் பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை
தலைமைச் செயலர் எச்சரிக்கை!
சென்னை, பிப். 3- ஓய்வூதியத் திட்டம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை எனத் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அறிவித்துள்ளார்.
வேலைநிறுத்தம்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு அரசு ‘டேப்ஸ்’ (TAPS) எனப்படும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது. இதில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், ஓய்வுபெறும் சூழலில் பங்களிப்பு அல்லது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என அரசாணையில் கூறப்பட்டது.
இருப்பினும், தங்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டமே வேண்டும் என்று, பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் இணைந்து ‘ஆக்டோ ஜியோ’ என்ற கூட்டமைப்பை உருவாக்கியதுடன், இன்று பிப்ரவரி 3 முதல் காலவரையற்ற போராட்டத்தையும் அறிவித்தது. மேலும் சில அமைப்புகள் பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
இந்நிலையில், தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அனைத்துத் துறை செயலர்கள், துறைத் தலைவர் களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “அரசு ஊழியர் களுக்கான நடத்தை விதிகளை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் பணிக்கு வராவிட்டால், வராத நாட்களுக்குச் ஊதியம் இல்லை. போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு, மருத்துவ விடுப்பு தவிர்த்துத் தற்செயல் விடுப்பு அல்லது வேறு விடுப்புகள் அனுமதிக்கப்பட மாட்டாது” என்று கூறப்பட்டுள்ளது.
