என்றும் வாழும் ஏந்தல் அவர்!
தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்கள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய தோழர்களில், தொண்டர்களில் அன்பர்களில் மிகவும் அணுக்கமானவர் ஆவார். தந்தை பெரியார் அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர், நேசிக்கப்பட்டவர்.
தந்தை பெரியார் அவர்களது சுயமரியாதை இயக்கக் கொள்கைகளால் சமூக சீர்த்திருத்தக் கோட்பாடுகளால் மிகவும் ஈர்க்கப்பட்டவர்.
மலாயா (அப்போது அப்படித்தானே அழைக்கப்பட்டது அந்த நாடு). சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளிலும் தந்தை பெரியார் தம் சுயமரியாதை இயக்கம் ஆழமாக இன்றும் வேரூன்றி நிற்கிறது, பரவியுள்ளது என்றால் அதற்கு ஆரம்பகாலப்பணிகளைச் செய்தவர்களில் தமிழவேள் கோ.சா. அவர்கள் முன்னிலையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர் ஆவார்கள்.
தந்தை பெரியார் அவர்களிடம் தனிப்பட்ட முறையிலும் மிகுந்த மரியாதை உள்ளவர்கள். தந்தை பெரியார் அவர்கள் மிகுந்த பாசத்தோடு அவர்களிடம் இருப்பார்கள்.
சுயமரியாதை இயக்க ஆரம்ப காலத்தில் அவர்கள் “குடிஅரசு” ஏட்டினை மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் முகவராக இருந்து விற்பனை செய்து பாப்பிடவும். தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வழிபட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் மலாயா மண்ணிலும், சிங்கப்பூரிலும் தோன்றிடவும் மிகவும் கடுமையாக உழைத்தவர் ஆவார்.
“விடுதலை”யின் துணைத் தலையங்கம்
தந்தை பெரியார் அவர்கள்பால் நீங்காப் பற்றுக் கொண்டவரும், சுயமரியாதை இயக்கத்தை ஆரம்ப நாள்களில் சிங்கப்பூர், மலேசியாவில் பரப்புவதற்கு பணியாற்றிய முக்கிய முன்னோடிகளில் ஒருவரும், சிங்கைத் தமிழர்களுக்கு ஒரு தக்க பாதுகாவல ராகவும் இருந்த நம்முடைய பேரன்புமிக்க தமிழவேள் ‘தமிழ் முரசு’ நிறுவனர் ஆசிரியர் திரு. கோ. சாரங்கபாணி அவர்கள் தமது 71-ஆம் வயதில், சிங்கப்பூரில் காலமானார் என்ற செய்தி நம் நெஞ்சங்களைத் தாக்கிய பேரிடி போன்ற செய்தியாகும்.
ஆற்றல் வாய்ந்த அவரது எழுத்துகளும், அமைப்பு வன்மையும் அடிநாளில் நமது இயக்கம் அங்கு பரவுவ தற்கு மிகவும் பயன்பட்டன என்பது மறக்க முடியாத உண்மை,
தந்தை பெரியார் அவர்கள், சிங்கப்பூர், மலேசிய பயணம் செய்தபோது, அவரது உதவி மிகவும் நினைவுகூரத்தக்க ஒன்று.
தமிழ்நாட்டுத் தலைவர்கள், பெருமக்கள் எவர் சென்றாலும் வரவேற்று உபசரிக்கும் சீரிய பண்பாளர் அவர்! உழைப்பால் உயர்ந்த உத்தமர் அவர்!