ஒன்றிய பி.ஜே.பி. அரசின் பட்ஜெட் என்பது கடன் வாங்கி வட்டி கட்டும் பற்றாக்குறை பட்ஜெட்டே! புதிய வேலை வாய்ப்புக்கு வாய்ப்பு இல்லை. பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்க்குத் தாரை வார்க்கும் கார்ப்பரேட்டுகளுக்கான காவி பட்ஜெட் என்று கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ஒன்றிய நிதிநிலை அறிக்கைக் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
நேற்று (1.2.2026) நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்கள் 9 ஆவது முறையாக ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நாட்டுக்கு அளித்தார் என்பது பெருமையாகக் கருதப்பட்டு, ஊடகங்களின் தலைப்பாக்கப்பட்டு இருக்கின்றன.
முக்கிய கேள்வி, ஒவ்வோர் ஆண்டும், இந்த பட்ஜெட் மூலம் நாட்டில், பொருளாதார நிலை எப்படி இருக்கிறது? கடன் வாங்கி, வட்டி கட்டும் – பற்றாக்குறை பட்ஜெட் (Defecit Budget) என்ற நிலை தான் உள்ளது. 12 ஆண்டுகளாக (ஒரு மாமாங்கமாகியும்) வளர்ச்சி உள்ளதா? பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிப்பதாக உள்ளதா?
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்!
அரசுகளின் வரவு – செலவுத் திட்டங்களை வரை யறுக்கும் அமைப்பு; தொடரும் 12 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், ‘மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட்டு, அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியோடு உள்ளார்கள்’ என்று அறுதியிட்டு, ஆளும் (ஆர்.எஸ்.எஸ்.) பா.ஜ.க. அரசு, மார்தட்டும் நிலை ஏற்பட்டுள்ளதா? இல்லையே!
நாட்டில், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டு, மக்களும், இளைஞர்களும் மனக்குறையின்றி வாழும் நிலை உள்ளதா?
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்கிற ‘ஜூம்லா’வும், ஒப்பனைகளும் தான் ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட்டில் பெருகி வருகிறதே தவிர, உண்மை நிலவரத்தின் ‘ஸ்கேன்’ அறிக்கையாக வரவில்லை என்பது மறைக்க – மறுக்க முடியாததாக உள்ளது!
நடுத்தர மக்களும், ஏழை, எளியவர்களும் தங்களது வறுமையைப் போக்கி, ‘வளத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்வதாக இல்லையே’ என்று ஏமாற்றம் அடையும் நிலைதான் இன்றும் உள்ள எதார்த்தம்!
பங்கு சந்தைகள் வீழ்ச்சி!
பட்ஜெட் தாக்கல்பற்றிய செய்தியில், ஆளும் ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசின் ஆதரவு நாளேடான ‘தினமலரில்’கூட முதல் பக்கத்தில் பட்ஜெட் தாக்கல்பற்றி பெருமைப்படுத்திக் கூறி, கள நிலவரத்தை மறைத்துக் காட்ட முடியாததாக உள்ளது என்பதற்கு, அதன் தலைப்புகளே தக்க சாட்சியமாகும்!
‘‘கவர்ச்சி இ்லலை!
மத்திய அரசின் 2026–2027 பட்ஜெட்டில்!
உற்பத்தித் துறைக்கும் எதிர்பார்த்த ஆதரவில்லை!
பங்குச் சந்தைகள் வீழ்ந்தன!’’ என்ற தலைப்புகளே!
நாடாளுமன்றத்தில், நேற்று (1.2.2026) நிதி யமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், வெறும் வறண்ட பாலைவனத்தில் செய்யும் நிதிப் பயணம்! வரி கொடுக்கும் மக்கள் அங்கே ‘நீர்ச்சுனைகள்’ (ஒயாசிஸ்) எங்காவது கிடைக்குமா? என்று தேடித் தேடி ஏமாந்ததுதான் மிச்சம்!
வேலை வாய்ப்புக்கு வழி உண்டா?
படிப்பு முடித்து, நாளும் பெருகிவரும் இளை ஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிட்டாத நிலை மட்டுமல்ல; பார்த்த வேலைகளும் பறிபோகும் நிலைதானே உள்ளது?
எடுத்துக்காட்டாக,
ஜவுளித் தொழில், திருப்பூர் போன்ற பகுதியில் அமெரிக்காவின் விசித்திர அதிபர் – பிரபல நோபல் பரிசு வேட்கை வீரர் டொனால்ட் டிரம்பின், இந்திய இறக்குமதிகளுக்கு விதித்த 50 சதவிகிதம் கூடுதலான வரி விதிப்பில் – ரஷ்யாவில் எண்ணெய் வாங்க அவர் விதித்த நிபந்தனைகள் காரணமாக பெரும் பகுதி இறக்குமதியை நிறுத்திய பிறகும்கூட, என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டது?
அதனால், புதிய ஆர்டர்களுக்கான ஏற்றுமதி வளரும் நிலையா? தளறும் நிலையா?
ஓய்வூதியதாரர்கள் (பென்ஷன்), முதியவர்களுக்கு வருமான வரிச் சலுகை ஏதும் இல்லை என்பது அவர்களை ஏமாற்றத்தின் எல்லைக்குத் தள்ளிவிடவில்லையா?
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை பொருளாதார அடிமைகளாக நடத்துவதா?
திட்டங்கள் தீட்டி, அவ்வளர்ச்சிக்கு உரமூட்ட வேண்டிய ஒன்றிய அரசு, தமிழ்நாடு போன்ற வளர்ச்சி அடைந்து வரலாறு படைக்கும் மாநிலங்களில், எதிர்க்கட்சியினரின் ஆட்சி நடைபெறுகிறது என்ப தற்காக, வஞ்சனைகளையே தொடர்கிறது. அதன் ‘வரவாக’ அளித்து, பொருளாதார அடிமைகளாக மாநிலங்களை நடத்தும் நிலை தொடர்கிறது.
ரூபாய் நாணய மதிப்பு நாளும் அதலபாதாளத்திற்குச் செல்லுவதைத் தடுக்க ஏதாவது புதுத் திட்ட அறிவிப்பு உண்டா இந்த பட்ஜெட்டில்? இல்லையே!
எளிய, நடுத்தர மக்கள் தங்களுக்கு பழைமைச் சிந்த னைப்படி, தாலி அணிவித்து நடத்தும் திருமணங்களில், சில ‘கிராம்’களில்கூட தங்கம் வாங்க முடியவில்லையே!
தங்கத்தின் விலை விண்ணை வீழ்த்திடும் நிலைதானே!
இதனைக் கட்டுப்படுத்தும் திட்டம் இந்த ‘பட்ஜெட்’ உரையில் அறிவிப்பாக வரும் என்று ஆவலாக எதிர்பார்த்த குடும்பத் தலைவிகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் மிஞ்சியது உச்சக்கட்ட ஏமாற்றம்தானே!
பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம்
தனியார் மயம்!
தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ள, ‘‘தமிழ்நாட்டையே மறந்துவிட்டார்களே, ‘நீங்கள் அரிசி கொண்டு வரும் நிலையில், நாங்கள் உமி கொண்டு வந்து தருவோம்; இரண்டு பேரும் ஒற்றுமையாக ஊதி, ஊதித் தின்னலாம்’’ என்பதுபோன்ற தந்திரம் அல்லாமல் வேறு என்ன?
இந்த ஆர்.எஸ்.எஸ். பா.ஜக. ஒன்றிய ஆட்சியில், கடன் ஒருபுறம்; முன்பு பல ஆண்டுகளாகக் கட்டி வளர்க்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களையெல்லாம் தனியாருக்கு, குறிப்பாக அதானி, அம்பானி, டாடா, பிர்லா போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்றோ, அல்லது குறைந்த தொகை குத்தகைக்குக் கொடுத்தோ – அது நீண்ட காலக் குத்தகை தருவதுதான் 12 ஆண்டு பட்ஜெட்டின் தொடர் வளர்ச்சியா?
மக்கள் கேட்டது ‘ரொட்டி’; அவர்களுக்குக் கிடைப்பது ‘கல்’, வெறுங் கல் என்பது போன்ற ஒன்று; வெறும் கானல் நீர் வேட்டை.
அதுவும், வருங்காலத் தலைமுறையினர்மீதும், கடனும், வட்டியும்தான் என்பதால், பலதரப்பட்ட ஏமாற்றங்களின் மொத்தக் கூட்டுத் தொகையாக இந்த காவி ‘பட்ஜெட்’ அமைந்துள்ளது! என்பதை வேதனையுடன் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
‘‘தமிழ்நாட்டை மறந்ததா? அல்லது ‘துறந்த’ பட்ஜெட்டா’’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது கேள்வி நியாயமானது அல்லவா!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.2.2026
