மதுராந்தகம் மருத்துவமனை கட்டடத்தை சீரமைக்க
தமிழ்நாடு அரசு ரூ.12 கோடி ஒதுக்கீடு
மதுராந்தகம், பிப். 2- மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு தமிழ்நாடுஅரசு ரூ.12 கோடி நிதி அறிவித்து, உடனடியாகப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நேற்று (1.2.2026) வெளியான ‘‘மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடம் மூடல் – மருத்துவப் பயனாளிகளை செங்கல்பட்டுக்கு அனுப்பும் அவலம்” என்ற தலைப்பில் நாளிதழில் செய்தி வெளியானது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள அரசு வட்டார தலைமை மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை வசதி இல்லாததால், மருத்துவப் பயனாளிகளை 30 கி.மீ. தொலைவில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை இருந்தது. 55 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் செயல்பட்டு வந்தது. கட்டடத்தின் அஸ்திவாரம் பலவீனமடைந்ததால், பாதுகாப்பு கருதி கட்டடம் மூடப்பட்டது.
இதனால் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு, மருத்துவப் பயனாளிகள் செங்கல்பட்டுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். ‘புதிய கட்டடம் அமைக்க நிதி ஒதுக்கி, விரைவாகக் கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்தச் செய்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தமிழ்நாடுசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
“மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடம் மூடல் என்ற செய்தி பிப். 1ஆம் தேதி நாளிதழில் வெளிவந்தது. இதைப் பார்த்தவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னிடம் கேட்டறிந்து, உடனடியாகத் தீர்வு காண உத்தரவிட்டார். நானும், சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமாரும் இது குறித்து விசாரித்தோம்.
ரூ.12 கோடி ஒதுக்கீடு
இதையடுத்து, தேசிய நலவாழ்வுக் குழும நிதியிலிருந்து மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்குக் கட்டடத்திற்கு ரூ.10 கோடி, மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.2 கோடி என மொத்தம் ரூ.12 கோடி நிதி உடனடியாக அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பான கல்வி
தொண்டு செய்த சுவிட்சர்லாந்து நிறுவனத்திற்கு பாராட்டு!
சென்னை, பிப். 2- கல்வித் துறையில் சிறப்பாகச் சேவை புரிந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தினர், செங்கல்பட்டு மாவட்ட கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் கவுரவிக்கப் பட்டனர்.
ஹார்ட் ஃபார் இந்தியா ஃபவுண்டேசன் (Heart for India Foundation) என்னும் இந்த நிறுவனம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் செயல்படும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் கல்வி, ஊட்டச்சத்து, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் குழந்தைகளுக்கான திட்டங்களை ஊக்குவிப்பது, ஆதரிப்பது மற்றும் மேம்படுத்துவது போன்ற சமூகப் பணிகளைக் கடந்த 20 ஆண்டுகளாகச் செய்து வருகிறது.
குறிப்பாக, இந்நிறுவனத்தினர் அங்கன்வாடி மய்யங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, காலை மற்றும் மாலை சிற்றுண்டி வழங்குதல், சீருடை, காலணி, நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை அளித்தல் போன்ற பணிகளைச் செய்கின்றனர். மேலும், ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்தல், தூய்மைப் பணியாளர்களை நியமித்தல் மற்றும் தொழிற்கல்வி வழங்குதல் போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், 20 ஆண்டுகளாகச் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் சார்பில், அதன் பணிகளுக்கு உதவியவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் விழா நேற்று முன்தினம் (31.1.2026) செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் ஹார்ட் ஃபார் இந்தியா ஃபவுண்டேசன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கவுரவத் தலைவர் இளவரசி ஃபிராங்கோயிஸ் ஸ்டர்ட்ஸா, தலைவர் இளவரசி கிறிஸ்டின் ஸ்டர்ட்ஸா ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் நிறுவனத்தின் செயல் பாட்டுக்கு உதவிய மேனாள் மற்றும் இந்நாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலருக்குச் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்ட கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளைப் பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்டப் பள்ளித் துணை ஆய்வாளர் கிருபாகரன், பள்ளித் தலைமை ஆசிரியர் சக்திசிவம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவின் நிறைவாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாநில மனித உரிமை ஆணையத்தில் நிலுவையில் 11,385 மனுக்கள்
மதுரை, பிப்.2–- தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் 6 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் 11,385 மனுக்கள் நிலுவையில் இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 1997இல் மாநில மனித உரிமை ஆணையம் துவக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி, 2 உறுப்பினர்களை கொண்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் இந்த ஆணையம், மனித உரிமை மீறல் குறித்து தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அனுப்பும் புகார்கள் குறித்தும் விசாரித்து வருகிறது. விசாரணைக்கு பின் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்கிறது.
ஆனால் 6 ஆண்டுகளாக 11,385 மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அச்சட்டத்தில் கேட்ட மதுரை சமூக ஆர்வலர் கார்த்திக் கூறியதாவது: தேசிய அளவில் மாநில மனித உரிமை ஆணையம் உருவாக்கப்பட்டதில் 5ஆவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மாநில ஆணையம் 6 ஆண்டுகளில் பெற்ற மனுக்களின் எண்ணிக்கை 76,830. இதில் தீர்வு காணப்பட்டது 65,445 மனுக்கள்.
அதிகபட்சமாக 2022இல் 15,374 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஆணையம் அமைக்கப்பட்டு 27 ஆண்டுகளான நிலையில் அதன் செயல்பாடுகள், வழக்குகளின் தீர்ப்புகள் எவ்வாறு அமைந்துள்ளது போன்றவை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். நிறை, குறைகளை பகுப்பாய்வு செய்தால் மட்டுமே ஆணையம் அமைத்ததற்கான நோக்கம் நிறைவேறும் என்றார்.
