பெண்களைக் காக்கும் தடுப்பூசி: பாராட்டுக்குரிய முன்னெடுப்பு!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘இந்து தமிழ்திசை’ தலையங்கம்

கருப்பைவாய்ப் புற்றுநோயைத் தடுக்க இந்தியாவிலேயே முதல் முறையாக ஹெச்.பி.வி. தடுப்பூசி வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தொடங்கியிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பாகும். உலகளவில் பெண்களை அதிகம் பாதிக்கும் நான்காவது உயிர்க்கொல்லிப் புற்றுநோயாகக் கருப்பைவாய்ப் புற்றுநோய் கருதப்படுகிறது. இந்தியாவில்ஆண்டுதோறும் 1.2 லட்சம் பெண்களுக்குக் கருப்பைவாய்ப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஹெச்.பி.வி. வைரஸ் தொற்றினால் ஏற்படும் புற்றுநோய் இது. பாலுறவின் மூலம் பரவக்கூடிய இந்த வைரஸ் ஆண், பெண் இருவரையுமே பாதிக்கக்கூடும். சொல்லப்போனால், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் இந்தத் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்கின்றனர் மருத்துவர்கள்.

அதேநேரம், இந்த வைரஸை எதிர்கொள்ளும் எதிர்ப்பாற்றல் இயற்கையிலேயே மனிதர்களுக்கு உண்டு. சில நேரம் கொடிய வகை ஹெச்.பி.வி. வைரஸ் தொற்று தாக்கக்கூடும். அப்படி நேர்ந்தால் இந்த வைரஸ் பல ஆண்டுகளுக்கு உடலில் மெல்லப் பரவும். குறிப்பாகப் பெண்களுக்குக் கருப்பைவாய்ப் புற்றுநோய் ஏற்படுத்தலாம். முற்றிய நிலையில் மட்டுமே இதன் அறிகுறி வெளியில் தெரியவரும் என்பதால்,பாதிக்கப்பட்டவரை மருத்துவ சிகிச்சை மூலம் மீட்பது கடினம். இந்த வகைக் கருப்பைவாய்ப் புற்றுநோய் வராமல் தடுக்கும் வல்லமை கொண்டது ஹெச்.பி.வி. தடுப்பூசி.

9 வயதிலிருந்து 25 வயதுக்குள் பெண்களுக்கு ஹெச்.பி.வி. தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கருப்பைவாய்ப் புற்றுநோய் ஏற்படுவதைப் பெருமளவு தடுக்க முடியும் என நிரூபிக்கப் பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி 2006இலேயே ஆஸ்திரேலிய அறிவியலாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது. அமெரிக்கா,பிரிட்டன், கனடா போன்ற முதலாம் உலக நாடுகளில், கடந்த 20 ஆண்டுகளாகப் பெண்களுக்கு இது செலுத்தப்பட்டு வருகிறது. அதிலும் ஆஸ்திரேலியா பெருவாரியான பள்ளி மாணவிகளுக்கு ஹெச்.பி.வி.தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்திருக்கிறது. இதனிடையே, உலகச்சுகாதார நிறுவனம், ‘கருப்பைவாய்ப் புற்றுநோய் ஒழிப்புக்கான உலகளாவிய உத்தியை வேகப்படுத்துதல்’ திட்டத்தை 2020இல் அறிவித்தது. பொருளாதாரரீதியில் பின்தங்கிய நாடுகளின் 15 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளில் 90% பேருக்கு 2030க்குள் ஹெச்.பி.வி. தடுப்பூசி செலுத்தும் இலக்கை இது நிர்ணயித்தது.

இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பூசியைச் செலுத்த ரூ.28,000 வரை செலவாகும். எனவே, நாட்டிலேயே முதல் முறையாக ஹெச்.பி.வி. தடுப்பூசியை இலவசமாக வழங்கத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்து, 2025 ஏப்ரல் 4ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இதற்கென 2025-2026 நிதியாண்டில் ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்நோயை அறவே அகற்றும் நோக்கில் 14 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஹெச்.பி.வி. தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. முதல்கட்டமாக, 3,38,649 பெண் குழந்தைகள் பயன்பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் புற்றுநோய் பாதிப்பு அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ள தருமபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இந்தத் திட்டம் முதல்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு அந்தந்தப் பள்ளிகளிலேயே தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இப்படியான ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகள் தொடரட்டும்!

நன்றி: ‘இந்து தமிழ்திசை’ 2.2.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *