அறிவியல் தகவல்கள்

Viduthalai
2 Min Read

 செயற்கை நுண்ணறிவும் வேலையும்

மனிதனின் படைப்புக்கு இணையாகப் படைக்கிறது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இதன் வருங்கால தாக்கம் குறித்து, ‘கோல்டுமேன்’ சாக்ஸ் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, செயற்கை நுண்ணறிவால் பல புதிய வேலைகள் உருவாகும். அதே சமயம், உலகெங்கும், 30 கோடி முழுநேரப் பணிகளை செயற்கை நுண்ணறிவு மென்பொருட் களே செய்யும். ஆனால், மனித கவனமும் படைப்பாற்றலும் தேவைப்படும் புதிய வேலைகளும் உருவாகும். உலகப் பொருட்கள் மற்றும் சேவை உற்பத்தியின் மதிப்பு திடீரென 7 சதவீதம் வரை உயரும் என, அந்த அறிக்கை கணித்துள்ளது.

பாக்டீரியா போடும் ஊசி

சில வைரஸ்களும் பாக்டீரியாக்களும் மனிதர்களை தொற்றிக் கொள்ள மூலக்கூறு அளவிலான நுண் ஊசி போன்ற உறுப்பைப் பயன்படுத்துகின்றன. அதே பாக்டீரிய நுண் ஊசி உறுப்புகளை திருத்தம் செய்து, ஆய்வுக் கிண்ணத்தில் வளர்க்கப்படும் மனித செல்களுக்குள் புரதங்களால் ஆன மருந்துகளைச் செலுத்தப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர் விஞ்ஞானிகள். இது புதிய புரத மருந்துகளை மனித செல்களில் செலுத்தும் சிகிச்சை முறைக்கு வழிவகுக்கக்கூடும். மேலும், ‘கேஸ்பர்’ மரபணு திருத்த சிகிச்சையை மனிதர்களுக்கு எளிதில் செய்யவும் உதவலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

கால்பந்தை உருட்டும் ‘ரோபோ’

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் விஞ்ஞானிகள், ‘டிரிப்பிள்போட்’ என்ற நான்கு கால் ரோபோவை உருவாக்கியுள்ளனர். அந்த ரோபோ, டிரிப்பிள் எனப்படும் கால்பந்தை உருட்டிச் செல்லும் உத்தியை தானாகவே கற்றுக் கொண்டு அசத்தியுள்ளது. கணினிக்குள் உருவாக்கப்பட்ட முப்பரிமாண டிஜிட்டல் உலகில், 4,000 டிஜிட்டல் டிரிப்பிள் போட்டுகள் ராப்பகலாக, கால்பந்தை உருட்டியபடி முன்னேறிச் செல்லும் உத்தியை ஒத்திகை செய்து, கற்றுக் கொண்டுள்ளன. அந்த கற்றல்களை, நிரல்களாக உலோகத்தாலான அசல் டிரிப்பிள் போட்டுக்கு தந்தபோது, அதுவும் அசத்தலாக கால் பந்தை உருட்டி விளையாட துவங்கிவிட்டது.

உருகும் பனியும் புரளும் கடலும்!

அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகுவதால், கடலில் புதிய வெதுவெதுப்பான நீர் கலக்கத் துவங்கிஉள்ளது. இதனால், கடலுக்கடியில் இயற்கையாக ஓடிக்கொண்டிருந்த உப்பும், ஆக் சிஜனும் செறிந்த நீரோட்டத்தின் போக்கு தடம் மாறியிருப்பதாக, விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நீரோட்டம் கடலுக்கடியிலிருந்து பல சத்துக்களை மேல் பகுதிக்கு கொண்டு வந்து, கடல் வாழ் உயிரினங்களுக்கு பயனாக இருந்தது. இப்போது, பனிப்பாறைகள் உருகுவதால் கலக்கும் புதிய நீரோட்டம், கடலடி நீரோட்டத்தின் வேகத்தை மட்டுப்படுத்தி. மேலும் பனிப்பாறை உருக வழிவகுத்து, மழைப்பொழிவை தாறுமாறாக்கிவிடும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *