கல்லக்குடியில் தொடங்கி சென்னை பூங்கா நகர் வரை…
ஹிந்தித் திணிப்புக்கு
கனிமொழி எம்.பி. கண்டனம்
சென்னை, ஜன.31 சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் தமிழ் மொழியில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டிருந்ததை ஹிந்தி மொழி பெயர்ப் பலகைகளாக மாற்றப்பட்டுள்ளதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ‘‘கல்லக்குடியில் தொடங்கியது, சென்னை பூங்கா வரை தொடர்கிறது. அவர்கள் ஹிந்தித் திணிப்பதை நிறுத்தப் போவதுமில்லை. நாம் அதை எதிர்ப்பதில் ஓயப்போவதுமில்லை” என தெரிவித்துள்ளார்.
வங்கதேச மீனவர்கள் மீது காட்டும் இரக்கத்தை
இந்திய மீனவர்கள்மீது காட்ட மறுப்பது ஏன்?
பிரதமர் மோடிக்கு மீனவர் காங்கிரஸ் தலைவர் காட்டமான கேள்வி
சென்னை, ஜன.31 பிரதமர் மோடி வங்கதேச மீனவர்கள் மீது காட்டும் இரக்கத்தை இந்திய மீனவர்களின் மீதும் காட்ட வேண்டும் என்று, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
மீனவர்கள் கைது
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களின் மீன் பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, சிறையில் அடைத்து கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அத்துடன், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படுகிறது. இதை தடுக்கவும், மீனவர்களை மீட்கவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சிய போக்கை கடைப்பிடித்து வரும் பிரதமர் மோடி அரசு, இந்திய எல்லை தாண்டி மீன் பிடித்த வங்கதேச மீனவர்கள் 128 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 135 இந்திய மீவைர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, 41 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தொடங்கியது முதலே இலங்கை கடற்படை இதுவரை 16 இந்திய மீனவர்களை கைது செய்தும், 4 விசைப் படகுகளை கைப்பற்றியும் அராஜகம் செய்துள்ளது. தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வரும் ஒன்றிய வெளியுறவுத் துறையும், அதன் வெளியுறவுக் கொள்கையும் தோல்வியடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த போது மீட்பு நடவடிக்கைகள் மிகவும் துரிதமாக எடுக்கப்பட்டன. பிரதமர் மோடி வங்கதேச மீனவர்கள் மீது காட்டும் இரக்கத்தை நம் இந்திய மீனவர்களின் மீதும் காட்ட வேண்டும். இனிமேல் இந்திய மீனவர் ஒருவர் கூட இலங்கை கடற்படையால் கைது செய்யப்படாத வண்ணம் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலையில் மாடுகள் திரிவதைத் தடுக்க
மாடுகளுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்த முடிவு
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, ஜன.31 சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று (30.1.2026)நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய மாமன்ற பாஜக உறுப்பினர் உமா ஆனந்த், “எனது வார்டில் நான் கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றிவிட்டேன். எதிர்க்கட்சி வார்டு என்றும் பாராமல், திட்டங்களை செயல்படுத்த உதவியாக இருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு நன்றி” என்றார்.
சாலைகளில் சுற்றும் மாடுகளைக் கட்டுப்படுத்த…
சென்னையில் 22,875 மாடுகள் உரிமையாளர்களால் வளர்க்கப்படுகின்றன. இந்த மாடுகள் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிவதைத் தடுக்க ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் 4237 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.2.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில், 17 இடங்களில் மாட்டு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் மீறி, சாலையில் மாடுகள் திரிவதை தடுக்கவும், மாடுகள் வளர்ப்பை முறைப்படுத்தவும், இந்த மாடுகளை வளர்க்க அதன் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கவும், அப்போது, மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்தவும், அதற்காக 25 ஆயிரம் மைக்ரோசிப்கள் மற்றும் சிப் ரீடர்கள் வாங்கவும், உரிமம்பெற்று, மைக்ரோசிப் பொருத்த மார்ச் 18 வரை அவகாசம் வழங்கவும் மாமன்றத்தில் அனுமதி அளித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டலம், 12-ஆவது வார்டு, பாலகிருஷ்ணா காலனி 3-ஆவது தெருவுக்கு, முன்னாள் திருவொற்றியூர் நகராட்சித் தலைவர் தி.வ.விசுவநாதன் பெயரை சூட்டவும், ஜான்ட்ரவர் தெருவுக்கு மாமன்ற முன்னாள் உறுப்பினர் க.வீராசாமி பெயரை சூட்டவும், ராமாவரத்தில் அமைய இருக்கும் பூங்காவுக்கு சுதந்திரப் போராட்ட வீரர், தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் பெயரை சூட்டவும் அனுமதி அளிக்கப்பட்டது.மாநகராட்சி சேவைகளை ஒரே டிஜிட்டல் தளத்தில் ரூ.3.49 கோடியில் ஒருங்கிணைக்கவும், மாமன்ற உறுப்பினர்களது மேம்பாட்டு நிதியில் கண்காணிப்புக் கருவிகளை நிறுவவும், புளியந்தோப்பு இறைச்சி கூடத்தில் கூடுதல் பணிகளை ரூ.9.29 கோடியில் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. மொத்தம் 118 தீர்மானங்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன.
