சென்னை, ஜன.31 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நூற்றாண்டு நிறைவு விழா
“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1925-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதியன்று கான்பூரில் (உத்தர பிரதேசம்) நடைபெற்ற மாநாட்டில் நிறுவப்பட்டது. இந்த மாநாட்டிற்கு தென் னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமை ஏற்க அழைக்கப்பட்டிருந்தார். அவரது தலைமை உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
இந்தியாவில் வர்க்கங் களற்ற, மதச்சார்பற்ற, ஜாதி களற்ற, சுரண்டலற்ற சோசலிச சமூகத்தை படைப்பதுதான், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம் என சிங்காரவேலர் தனது உரையில் பிரகடனம் செய்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது முதல் நாட்டின் பரிபூரண விடுதலைக்காக போராடியது. விடுதலைப் போரில் அளப்பரிய தியாகங்களைச் செய்தது.உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும், வர்க்கங்களற்ற, மதச்சார்பற்ற, ஜாதிகளற்ற, சுரண்டலற்ற சோசலிச சமூக அமைப்பை உருவாக்குவதற்காகவும், உலக சமாதானத்திற்காகவும் தொடர்ந்து போராடி வருகிறது. இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்காகவும், பல்வேறுமொழி பேசும் மக்களின் மொழி, பண்பாடு மற்றும் உரிமைகளை பாதுகாக்கவும், வங்கிகளை நாட்டுடைமையாக்கிடவும், மன்னர் மானியத்தை ஒழித்திடவும், நிலப்பிரபுத்துவ – ஜாதிய கொடுமைளை ஒழித்திடவும் வீரம் நிறைந்த போராட்டங்களை நடத்தி யுள்ளது.
நாட்டின் முன்னேற்றத்திற் காகவும், இறையாண்மையை பாதுகாப்பதற்காகவும், ஒற்றுமைக்காகவும், ஒருமைப் பாட்டிற்காகவும் உறுதியோடு போராடி வருகிறது. இந்தி யாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசியல் சட்டம், மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாடு போன்றவற்றை பாதுகாப்பதற்காக போராடி வருகிறது.
அளப்பரிய தியாகங்களை செய்துள்ள, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நூறாவது ஆண்டு நிறைவு விழா சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நாளை பிப்ரவரி 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமை தாங்குகிறார். தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் ராமகிருஷ்ண பாண்டா, ஆனி ராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் தோழர் கோ.பழனிச்சாமி கட்சியின் கொடியை ஏற்றி வைக்கிறார். கட்சியின் வரலாற்று நிகழ்வுகள் ஒளிப்பட கண்காட்சியை, மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் தோழர் ரா.முத்த ரசன் திறந்து வைக்கிறார். மாநில துணைச் செயலாளர் தோழர் நா.பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்துகிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் மற்றும் மக் களவை உறுப்பினர் தோழர் கே.சுப்பராயன் எம்.பி. துவக்க உரையாற்றுகிறார். இவ்விழாவில், ஏராளமான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யினரும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
