ரூ.20 கோடி சொத்து குவித்த லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர் கைது
விஜயநகரம், ஜன.31 லஞ்ச ஒழிப்பு துறையாரின் சோதனை திட்டத்தை அரசியல்வாதிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து ரூ.20 கோடி சொத்துக் குவித்த லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர் கைது செய்யப்பட்டார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆந்திராவில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய ஊர்க்காவல் படை வீரருக்கு ரூ.20 கோடி சொத்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர்
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், நடிபூரு கிராமத்தை சேர்ந்தவர் சிறீநிவாச ராவ் (43). இவர் 2010-இல் ஊர்க்காவல் படை வீரராக பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறையில் 15 ஆண்டுகளாக வேலைசெய்து வந்தார்.
பத்திரப்பதிவு அலுவலக சப்-ரிஜிஸ்டர்கள், தாசில்தார்கள், மண்டல அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள், அலுவலகங்களுக்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்த கிளம்பும் திட்டத்தை அவர்களுக்கு முன் கூட்டியே கூறி, அதன் மூலம் லட்சம், லட்சமாக சம்பாதிக்க தொடங்கினார்.கடந்த ஆண்டு நவம்பரில், ஆந்திர மாநிலம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சில அலுவலகங்களுக்கு முன் கூட்டியே இந்த தகவல் கிடைத்து விட்டதால் அவர்கள் உஷாராகி விட்டனர். இதனால் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு சந்தேகமும் வந்தது.
சொத்துக் குவிப்பு
அப்போது பலரிடம் நடத்திய விசாரணை யில், சிறீநிவாச ராவ் தான் பலருக்கு இந்த தகவல்களை ரகசியமாக கூறியது என்பது தெரியவந்தது. மேலும் அவர் மீது சொத்து குவிப்பு புகார்களும் வந்தன.
இதையடுத்து சிறீநிவாசராவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், விஜயநகரம் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ரம்யா, இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் தலைமையில் 5 குழுவினர் சிறீநிவாச ராவின் வீடு உட்பட அவரின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, 2 அடுக்கு மாடிகள், ஒரு ஓட்டு வீடு, 4 வீட்டு மனைப் பட்டாக்கள், 23 சென்ட் விவசாய நிலம், 166 கிராம் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.60,000 பணம், ரூ.7.07 லட்சம் வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மதிப்பு ரூ. 20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, சிறீநிவாச ராவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
