திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் செங்காத்துக்குளம், மேல்மாளிகைப்பட்டு மற்றும் ஏனாம்பாக்கம் கிராமத்தில் 872 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் அறிவுசார் நகரத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார் (29.1.2026). இது மிகவும் வியந்து பாராட்டத்தக்க முயற்சியும், செயல்பாடுமாகும்.
சிறந்த பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் திறன்மிகு மய்யங்கள் அறிவுசார் தொழிலகங்கள் உருவாகும்.
வெளிநாட்டுப் பல்கலைக் கழகக் கிளைகள், வேளாண் தொழில் நுட்பம், கட்டட தொழில் நுட்பம் போன்றவை இணைக்கப்படும்.
பசுமை வாழ்விட சூழல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பன்னாட்டுத் தரக் கல்வி வழங்கப்படும்.
இந்நகரம் தனித்தனி நிறுவனங்களின் தொகுப்பாக இல்லாமல், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் நிறுவனங்கள் தடையின்றி ஒன்றிணையும்.
வரும் ஆண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மய்யங்கள் மற்றும் புத்தாக்கக் குழுக்களுடன் இணைந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கற்பவர்களை இது உருவாக்கும் என்று கணிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா மெல்போர்ன் பல்கலைக் கழகம், குவாண்டம் கணினி மற்றும் வேளாண் தொழில் நுட்ப ஆராய்ச்சி மய்யம் (20 ஆயிரம் சதுர அடி ரூ.35 கோடி முதலீடு), சென்னை அய்.அய்.டி. மேம்பட்ட ஆட்டோ மோட்டிவ் ஆராய்ச்சி மய்யம் மற்றும் சோதனை ஆய்வகம் (40 ஆயிரம் சதுர அடி ரூ.200 கோடி முதலீடு) ஆர்கலி கார்பன் படிப்பு மற்றும் நிலைத் தன்மைத்துறை ஆராய்ச்சி ஆய்வகம் (10 ஆயிரம் சதுர அடி) உயிரின அறிவியல், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, நகர் திறன், நிதி தொழில் நுட்பம், தொலைத் தொடர்புகள் போன்றவற்றில் ஆராய்ச்சி மய்யங்கள் உருவாக்கப்படும்.
பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் நடைபெறும் ரூ.355 கோடி முதலீட்டை உள்ளடக்கியவை இவை.
இந்த ‘அறிவுசார் நகரம்’ உருவாகும்போது 12,000க்கும் அதிகமான பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இது ‘தமிழ்நாட்டை உலகளவில் உற்று நோக்க வைக்கக் கூடிய ஒன்றாக ஒளிரும்’ என்பதில் அய்யமில்லை.
இந்தியாவுக்குள் – தெலங்கானாவில் அய்தராபாத், குஜராத்தில் காந்தி நகர், கருநாடகாவில் பெங்களூரு, மகாராட்டிராவில் புனே, உத்தரப்பிரதேசத்தில் நொய்டா, அரியானாவில் குருகிராம், கேரளாவில் திருவனந்தபுரம், ஆந்திரப்பிரதேசத்தில் அமராவதி, மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் ஆகிய இடங்களில் ‘அறிவுசார் நகரங்கள்’ உள்ளன.
மற்ற நகரங்களைவிட தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் ‘அறிவுசார்நகரம்’ தனித் தன்மை வாய்ந்தது. அதற்குக் காரணம் – உயர் கல்வியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. ஆராய்ச்சி நிறுவனங்களும் இங்கு அதிகம்.
மாணவர்கள் வெளிநாட்டுக்குச் சென்றுதான் உலகக் கல்வி பெற வேண்டும் என்ற நிலையை இந்த ‘அறிவுசார் நகரம்’ மாற்றி அமைக்கும்.
கோயில்களைக் கட்டுவதும், புதுப்பிப்பதும் மக்களை மடையர்களாக்கத்தான் பயன்படும் – வெகு மக்களின் உழைப்பைச் சுரண்டும் கூடாரமாகத் தானிருக்கும்.
‘மண்டையில் தேங்காய் உடைத்தால் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் என்ற முட்டாள்தனம்’, ‘எச்சில் இலைகளில் உருளும் கேவலமான ஆன்மிக பக்தி’, ‘மாட்டு மூத்திரத்தைக் குடித்தால் நோய்கள் தீரும்’ போன்ற இவ்வகை ஆபத்தான நம்பிக்கைகளை மாற்றியமைப்பதோடு, இவ்வறிவு சார் நகரங்கள் எதிலும் அறிவியல் நுண் பார்வையை வருங்கால தலைமுறையினருக்கு ஊட்டும் என்பது எவ்வளவுப் பெரிய கருத்தாக்கம்!
பன்னாட்டுப் பல்கலைக் கழகங்களும் இணைந்து செயல்படுவதால் புதுப்புது ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் கிடைக்கக் கூடிய வாய்ப்புப் பிரகாசமாக இருக்கும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) (42ஆவது திருத்தம்) – ‘அறிவியல் சிந்தனை அறிவியல் ரீதியான அணுகுமுறை, மனிதநேயம், சீர்திருத்த உணர்வு ஆகியவற்றை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்’ என்பது வெறும் ஏட்டளவில் இல்லாமல், மனிதனின் சிந்தனை ரீதியான செயல்பாட்டுக்கு இது வழி வகுக்கும்.
திராவிட மாடல் அரசின் சாதனைகளின் மகுடத்தில் இந்த ‘அறிவுசார் நகரம்’ மேலும் ஒரு வைரக் கல்லாக ஒளிரும்! என்பதில் அய்யமில்லை.
இந்தியாவின் வேறு பல மாநிலங்களில் இந்த ‘அறிவுசார் நகரம்’ இருந்தாலும் – தமிழ்நாட்டில் திருவள்ளுவர் மாவட்டத்தில் உருவாக்கப்படும் இந்த நகரம் தனித் தன்மை உடையதாக இருக்கும். காரணம் – ஒரு நூற்றாண்டு காலம் பகுத்தறிவு, சுயமரியாதை, ஆண் – பெண் சமத்துவம், சமூகநீதி சிந்தனைகள் ஊன்றப்பட்டு, அறிவு நீர்ப்பாய்ச்சப்பட்ட பூமியாகும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ‘அறிவுசார் நகரம்’ அமைந்தாலும், தமிழ்நாட்டிற்கே உரித்தான பொதுச் சொத்தாகும். திருவள்ளூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார மாவட்டங்கள் புதுப் பொலிவோடு சிறப்பான பொருளாதாரக் கட்டமைப்புடன் ஒளிவீசும் வாய்ப்பு ஏற்படும். இது ‘திராவிட மாடல்’ ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி அரியணை ஏறி, இந்த அறிவுசார் நகரத் திறப்பு விழாவையும் நடத்தும் என்பதில் சிறதும் அய்யமில்லை!
