சென்னை, ஜன. 31- ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளி தேர்வுகளுக்கு தகுதி மதிப்பெண் 40 சதவீதமாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில இணை பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை மாற்றுத்திறனாளி தேர்வுகளுக்கு 40 சதவீதமாக குறைத்து அரசாணையை திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது அரசாணை எண் 23,28.01. 2026 இல் பொது பிரிவினருக்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 55 லிருந்து 50ஆகவும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவிற்கு 40 சதவீதமாகவும் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ளது போல மாற்றுத்திறனாளிகள் தேர்வுகளுக்கும் 40 சதவீத மதிப்பெண்ணை நிர்ணயம் செய்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட வேண்டுமென உரிமையோடு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் துறை அமைச்சர் முதலமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடும், உரிமையோடும் காத்துக் கொண்டுள்ளோம்.
