கேள்வி 1 : சென்னையில் உலக மகளிர் உச்சிமாநாட்டைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. அரசின் நலத்திட்டங்களால் பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளதாகப் பேசியிருப்பது தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி எனலாமா?
– வெ.ஜமுனாராணி, ஜாபர்கான்பேட்டை.
பதில் 1 : அதில் என்ன அட்டி? பெருவெற்றி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கும் அதனால் கூடுதல் பெருமை – சிறப்பு.
- • •
கேள்வி 2 : கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்துக்கு இணையாகத் தமிழைப் பயன்படுத்த வேண்டும், ஓதுவார்களை யாகசாலைக்குள் உட்கார வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருப்பது ஏற்புடையதா?
– எஸ்.பாபு, மதுரை.
பதில் 2 : வரவேற்க வேண்டியதே என்பதில் உங்களுக்கு வியப்போ அல்லது திகைப்போ இருக்கிறதா?
வெறும் வடமொழி மந்திரங்களுக்குப் பதிலாக தமிழ் என்று இடம் பெறாவிட்டாலும் – மூடநம்பிக்கை என்பதெல்லாம் ஒருபுறம் தள்ளி, உரிமைப் பிரச்சினைக் கண்ணோட்டத்தில் ஓதுவார்களையும் உள்ளே உட்கார வைப்பது போன்ற ஆணைகள், சமூக உரிமைகளை மீட்டெடுப்பதில் முதல் கட்ட வெற்றியாகவே கருதப்பட வேண்டும். இதற்குக் காரணமான அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் முயற்சிகளுக்கு – வெற்றிக்கு அவருக்கும் பாராட்டு.
- • •
கேள்வி 3 : பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேச ராட்லம் மாவட்டத்தில் காதல் இணையரை ஊருக்குள் சேர்க்கமாட்டோம், பால் கூட கிடைக்காது என்று கிராம மக்கள் அறிவித்திருப்பது சட்டப்படி குற்றம் அல்லவா?
– அ.அப்துல்சமத், வேலூர்.
பதில் 3 : சட்டப்படி மட்டுமல்ல, இயற்கை நியதிப்படியும், நியாயப்படியும் குற்றமே! இரட்டை எஞ்சின் ஆட்சியின் யோக்கியதை – நிறம் – திறம் புரிகிறதா இதிலிருந்து?
- • •
கேள்வி 4 : மேற்கு வங்கத்தில் பாஜகவை முதலமைச்சர் மம்தா மீண்டும் தோற்கடிப்பார் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் பேசியிருப்பது எதன் அடிப்படையில்?
– மு.கவுதமன், பெங்களூரு.

பதில் 4 : மக்கள் ஆதரவு, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சிகள் – அமித்ஷாக்களின் அதீத வன்மந்தான்!
- • •
கேள்வி 5 : “துணை முதலமைச்சர் உதயநிதியின் ஸநாதனப் பேச்சு 80 சதவீத இந்துக்களுக்கு எதிரானது – கடந்த 10 ஆண்டுகளாக, திராவிடர் கழகத்தாலும், உதயநிதி சார்ந்த தி.மு.க.வாலும் இந்து மதத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது” என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– ஜெ.பாபுஜெனார்த்தனன், பொத்தேரி.

பதில் 5 : வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்ட கருத்து தேவையற்ற – திட்டமிட்ட கண்டனத்திற்குரியவை. வலிந்து கூறப்பட்டுள்ள சில விசயங்கள் வம்புக்குக்குரியனவாக அமைந்துள்ளன என்பது சட்ட நிபுணர்களின் கருத்தாகும்!
- • •
கேள்வி 6 : தேசிய கீதமான ‘ஜன கண மன’ வைப் போல் வந்தே மாதரம் தேசியப் பாடலுக்கும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவதை கட்டாயமாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பதை மக்கள் மன்றம் ஏற்றுக்கொள்ளுமா?
– ஏ.பாலகிருஷ்ணன், பாலக்காடு, கேரளா.
பதில் 6 : வந்தே மாதரப் பாடலில், சிறுபான்மை இஸ்லாமியர்களை மிகவும் கொச்சைப்படுத்தும் பகுதிகள் உள்ளதாலும், அதை மறைத்து அல்லது விட்டுவிட்டுப் பாடுவது – தேவையற்ற வம்பை உருவாக்குவது போன்றதாகும்!
- • •
கேள்வி 7 : திருப்பதியில் இனி சாமானிய ஏழை எளிய பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று திடீரென்று தற்போது தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறியுள்ளது ஏன்?
– அ.அப்துல் அகத், அய்தராபாத்.
பதில் 7 : திடீரென்று சாமானியர்கள் மீது வந்த கரிசனம் ஏனோ? புரியவில்லை!
- • •
கேள்வி 8 : பாஜக ஆளும் உத்தராகாண்டில் பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களில் இந்து அல்லாதோருக்குத் தடை விதிக்கப் புதிய தீர்மானம் கொண்டுவர இருப்பதாக நிர்வாகக் கமிட்டி கூறியுள்ளதே, இந்திய இறையாண்மை என்னாவது?
– பா.ஆகாஷ், புதுடில்லி.

பதில் 8 : இந்திய இறையாண்மை வெறும் ஏட்டுச் சுரைக்காயாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டதே!
- • •
கேள்வி 9 : மாநில ஆளுநர்கள் ஒன்றிய அரசுக்குப் பாலமாக இல்லாமல், அரசியலமைப்புச் சட்டத்தின் 176ஆவது பிரிவை மீறிச் செயல்படுவது சட்டத்தை மீறும் செயல் ஆகாதா? மாநில அரசுக்குத் தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தலாமா?
– இ.தனசேகரன், அரூர்.
பதில் 9 : மத்திய – ஒன்றிய அரசு கண்ஜாடை, பச்சைக் கொடியில்லாமல் ஆளுநர்கள் ஒருபோதும் இப்படி நடக்க மாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை!
- • •
கேள்வி 10 : “இந்தியாவில் டபுள் டிஜிட் வளர்ச்சியைப் பதிவு செய்த திராவிட மாடல் ஆட்சிக்கு, எதற்கு டபுள் இன்ஜின்” என்று பிரதமர் மோடிக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருப்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ளுமா?
– எஸ்.பத்ரா, வந்தவாசி.
பதில் 10 : உண்மையைச் சொல்லும் துணை முதலமைச்சர் உதயநிதி மீது எரிச்சல்தான் டில்லி “எஜமானர்களுக்கு” வருமே தவிர, உணர்ந்து செயல்படும் பெருமனம் ஒருபோதும் ஏற்படாது!
