தமிழ்நாடு அரசின் ஸ்கிரிப்ட் திட்டம்:
பக்கவாத சிகிச்சையில்
ஓர் புரட்சிகர மைல்கல்
பக்கவாத சிகிச்சையில்
ஓர் புரட்சிகர மைல்கல்
தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறையில் “திராவிட மாடல்” என்று புகழப்படும் சாதனைகளில் மிக முக்கியமானவை ஸ்கிரிப்ட் ஆங்கிலத்தில் SCRIPT (Stroke Care and Rapid Intervention with Plasminogen Activator and Thrombectomy) மற்றும் TAEI (Tamil Nadu Accident and Emergency Care Initiative) திட்டங்கள். இவை பக்கவாதம் (Stroke) போன்ற அவசர நிலைகளில் சாமானிய மக்களுக்கு உயர்தர சிகிச்சையை இலவசமாகவும் விரைவாகவும் வழங்குவதன் மூலம் பல உயிர்களைக் காப்பாற்றி வருகின்றன.
SCRIPT திட்டம் என்றால் என்ன?
SCRIPT என்பது Stroke Care and Rapid Intervention with Plasminogen Activator and Thrombectomy என்று விரிவாக்கப்படும் திட்டம். இது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரித கால சிகிச்சை (Rapid Intervention) வழங்குவதற்காக தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்ட ஒரு முன்மாதிரித் திட்டமாகும்.
பக்கவாதம் ஏற்பட்ட கோல்டன் ஹவர் (Golden Hour) எனப்படும் முதல் 4.5 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு நோயாளி கொண்டு வரப்பட்டால், மூளை செல்கள் நிரந்தரமாக பாதிப்படைவதை தடுக்க முடியும். இதற்கு மிக முக்கியமான சிகிச்சை Thrombolysis ஆகும். இதில் Alteplase என்ற ஊசி மருந்து (தனியார் மருத்துவமனைகளில் சுமார் ரூ.38,000 முதல் ரூ.50,000 வரை விலை) இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை உடைத்து இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கும்.
தமிழ்நாடு அரசு இந்த விலை உயர்ந்த Alteplase ஊசியை அரசு மருத்துவமனைகளில் முற்றிலும் இலவசமாக வழங்கி வருகிறது. இதன்மூலம் லட்சக்கணக்கான செலவு செய்ய வேண்டிய சிகிச்சையை சாமானிய மக்களும் பெற முடிகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஹப் அண்டு ஸ்போக்
(Hub and Spoke) மாதிரி பின்பற்றப்படுகிறது:
(Hub and Spoke) மாதிரி பின்பற்றப்படுகிறது:
ஹப் மய்யங்கள்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் (Thrombolysis மற்றும் Thrombectomy வசதிகள் உள்ளன).
ஸ்போக் மய்யங்கள்: மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் போன்றவை.
இதனால் தலைநகரத்திலிருந்து தொலைவில் உள்ள மாவட்டங்களிலும் கூட உயர்தர பக்கவாத சிகிச்சை கிடைக்கிறது – இது தமிழ்நாடு முழுவதும் சமமான மருத்துவ வசதிகளை உறுதிப்படுத்தும் சிறந்த எடுத்துக்காட்டு.
டிஏஇஅய் திட்டத்தின் பங்கு
TAEI (Tamil Nadu Accident and Emergency Care Initiative) என்பது தமிழ்நாட்டில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைத் துறையை மாற்றியமைத்த ஒரு பெரும் திட்டம். இதன் கீழ் ஸ்கிரிப்ட் திட்டமும் ஒரு முக்கிய அங்கமாக இயங்குகிறது. டிஏஇஅய்-யின் மூலம் அரசு மருத்துவமனைகளில் ரெட் சோன் மற்றும் தனி அவசர சிகிச்சைப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், Pre-hospital care, In-hospital care ஆகியவை வலுப்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் தொழில்நுட்பக் குழுத் தலைவர் (Technical Team Leader) ஆக மருத்துவர் ஜெ.மரியானோ ஆண்ட்டோ புருனோ மஸ்கரனஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு சிறப்பான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் (Neurosurgeon). அவரைப் போன்ற நிபுணர்களின் பங்களிப்பால் இத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.
ஸ்கிரிப்ட்-ன் முக்கிய சாதனைகள்
இலவச சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் செலவாகும் Alteplase ஊசி மற்றும் Thrombectomy சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் முற்றிலும் இலவசம்.
விரைவான செயல்பாடு: அவசர சிகிச்சைப் பிரிவுகள், தனி ரெட் சோன் வசதிகள் மூலம் மருத்துவப் பயனாளிகள் உடனடியாக சிகிச்சை பெறுகின்றனர்.
மறுவாழ்வு வசதிகள்: சிகிச்சைக்குப் பிறகு இயன்முறை மருத்துவம் (Physiotherapy) உள்ளிட்ட மறுவாழ்வு சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.
மாவட்ட அளவிலான வெற்றி: தலைநகரத்திலிருந்து தொலைவில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளிலும் கூட இத்தகைய உயர்தர அறுவை சிகிச்சைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பக்கவாத அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள் – ஃபாஸ்ட் (FAST) பக்கவாதம் ஏற்படும்போது உடனடியாக அடையாளம் காண ஃபாஸ்ட் (FAST) முறையைப் பயன்படுத்துங்கள்:
பேஸ் (Face) – முகம் கோணுதல் ஆர்ம்ஸ் (Arms) – கை அல்லது கைகள் பலவீனமடைதல் ஸ்பீச் (Speech) – பேச்சு மாறுதல் அல்லது தடுமாறுதல் டைம் (Time) – உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் (108 ஆம்புலன்ஸ்)
சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வந்தால் ஸ்கிரிப்ட் (SCRIPT) திட்டத்தின் மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
திராவிட மாடலின் சிறப்பு – மற்ற மாநிலங்களுடன் ஒப்பீடு
தமிழ்நாட்டில் நீட் இல்லாமல் சாமானிய குடும்பங்களில் இருந்து வந்த மாணவர்கள் மருத்துவர்களாகி, இன்று இத்தகைய சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு நீட் மூலம் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சிதைக்க முயல்வது கொடுமையானது. துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் கொண்டு வரப்பட்டுள்ளது.
“டப்பா எஞ்சின் ஆட்சி” செய்யும் மாநிலங்கள் நூறு ஆண்டுகள் கழிந்தாலும் தமிழ்நாட்டின் இத்தகைய மருத்துவ சாதனைகளை எட்ட முடியாது. திராவிட மாடல் அரசின் இந்த சாதனை தமிழ்நாடு மக்களின் உயிர் காப்பு மற்றும் சமத்துவத்திற்கான அர்ப்பணிப்பை உலகிற்கு உணர்த்துகிறது.
இத்திட்டங்கள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் – ஏனெனில் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது!
