திருவாங்கூர் சமஸ்தானம் (19) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

நாடார்களை மனித உயிர்களாக மதித்து, அவர்களின் மறைக்கப்பட்ட மரபுகளையும், வழக்கங்களையும் புதுப்பித்து அவர்களை சமூகத்தின் பழம்புகழை மீட்டுக் கொடுத்தவர் வைகுண்டசாமி. அதேபோல் “ஈழவர்’ என்றழைக்கப்பட்ட மற்றொரு கொடுமைக்குள்ளான உழைக்கும் மக்களின் வாழ்வை உயர்த்தத் தோன்றியவர் தான் சிறீ நாராயணகுரு அவர்கள்.

நம்பூதிரிப் பார்ப்பனர்கள் அரசர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு ஜாதியச் சட்டங்கள் போட்டதோடு நில்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஜாதி வேற்றுமைகளையும், பிரிவினையையும் ஆழமாகத் திணித்தனர்.

நாடார்களை, ‘சாணார்கள்’ என்று கேவலமாக அழைத்ததுபோல், மற்றொரு உழைக்கும் மக்களை, உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்டிருந்த உழவர்களை, ‘ஈழவர்கள்’ என்றாக்கிவிட்டனர்.

வர்ண பேதத்தையே மதத்தின் தர்மம் என்றும், அதுவே, “அரச தர்மம்” என்றும் கூறி உழைக்கின்ற அனைத்து மக்களையும், நாடார்களைப் போல உழைக்கின்ற அனைத்து மக்களையும், நாடார்களைப் போலவே “சூத்திரர்” என்ற வருணப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று நிலைநாட்டினர். ஜாதிய வருணப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று நிலைநாட்டினர்.

ஜாதிய அடுக்கில் அவர்களுக்கு அடுத்தத் தட்டில் இருந்து, அவர்கள் இட்ட ஜாதியச் சட்டங்களையெல்லாம் செயல்படுத்த அவர்களுக்கு உறு துணையாக இருந்து மற்ற மக்களைக் கொடுமைப்படுத்திய நாயர்களையும் அவர்கள் “சூத்திரர்கள்” என்ற வருணப் பிரிவிலேயே வைத்திருந்தனர்.

ஆனால், அவர்களுக்கு எந்தவித உயர்ஜாதி, தகுதி நிலையும் கொடுக்காமல் கோயில்களின் எடுபிடியாகவே வைத்திருந்தனர். ‘சூத்திரன் சொத்து வைத்துக் கொள்ளக் கூடாது’ என்ற மனுதர்மக் கோட்பாட்டைக் காட்டி உழவுத் தொழில் செய்கின்ற அந்த மக்களிடமிருந்து பறித்துக் கொண்டனர். அதே நிலங்களில் ஈழவர்கள் கூலிகளாக மாற்றப்பட்ட சமூகக் கொடுமை நிகழ்ந்தது. நாளடைவில் அந்த சூத்திரப் பட்டமும் போய் அவர்கள் பஞ்சமர்களாக ‘அவர்ணஸ்தர்’களாக மாற்றப்பட்ட கொடுமையும் நிகழ்ந்தது.

அவர்கள் ‘தீண்டப்படாதவர்கள்’ என்ற சமூக இழிவுக்குத் தள்ளப்பட்டனர். நாடார்களைப் போலவே நல்ல பெயர்களை அவர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. நம்பூதிரிப் பார்ப்பனர்களின் கடவுள்களை அவர்கள் தொழக் கூடாது. உயர்ந்த ஆடை, அணிகலன்களைப் பயன்படுத்தக் கூடாது. நாட்டுத் தெய்வங்களை மட்டுமே தொழ வேண்டும். நம்பூதிரிப் பார்ப்பனர்களிடமிருந்து, ஈழவர்கள் 12 அடி தள்ளித்தான் நிற்க முடியும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு உண்டான அனைத்து ஜாதியச் சட்டங்கள் அனைத்தும், ஈழவர்கள்  மேல் திணிக்கப்பட்டன.

ஞாயிறு மலர்ஞாயிறு மலர்

அய்யா வைகுண்டர்                              நாராயண குரு

திருவாங்கூர் மக்கள் தொகையில், அந்தக் காலக்கட்டத்தில் ஈழவர்கள் 20 சதம் பேர். அவர்களை 3 சதவீதத்திற்கும் குறைவான நம்பூதிரிப் பார்ப்பனர்கள் ஆட்டி வைத்தனர்.

திருவாங்கூர் நாட்டில் தோன்றிய சீர்திருத்தக்காரர்களில் “சட்டம்பி சுவாமிகள் என்றழைக்கப்பட்ட குஞ்ஞன் பிள்ளையும் ஒருவர். திருவாங்கூர் நாட்டின் ஜாதியப் பிரிவுகளுக்கும், ஜாதியக் கொடுமைகளுக்கும் காரணம் நம்பூதிரிப் பார்ப்பனர்களே என்று கடுமையாகச் சாடியவர் இவர்.

வைகுண்டசாமி மறைந்து மற்றொரு பெரும் சீர்திருத்தவாதி திருவாங்கூர் நாட்டில் பிறந்தார். அவர்தான் சிறீ நாராயணகுரு. திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஈழவர்கள் மட்டுமின்றி, பெரும்பாலான மக்களும் கீழ் ஜாதியினர்களாகவும், தாழ்த்தப்பட்டவர்களாகவும ஆக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவது கண்டு மனம் வருந்திய அவர் அந்த அவலங்களை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். இவர் சட்டம்பி சுவாமிகளின் நெருங்கிய நண்பர் என்பதும், அவரிடம் புரட்சிகர திட்டங்களையும், அவற்றை செயலாக்கும் முறைகளைப் பற்றி பலமுறை விவாதித்தார்.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றிணைத்துப் போராடினால்தான் நம்பூதிரிப் பார்ப்பனர்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும் என்று முடிவு செய்த அவர் “மக்கள் முன்னணி” என்ற அமைப்பை உருவாக்கினார்.

ஜாதிக் கொடுமைகளால் அன்றாடம் அல்லல்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் பெருந்திரளாக அந்த முன்னணியில் இணைந்தனர். இந்த முன்னணி மக்களிடையே பெரும் விழிப்புணர்வையும், எழுச்சியையும் உண்டாக்கியது. மக்கள் அனைவரும் சமம் என்ற கருத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நாராயண குரு தன் கருத்துகளை 100 பாடல்களாக எழுதி அதற்கு “ஆத்ம உபதேச சதகம்” என்று பெயரிட்டு வெளியிட்டார். “மதக் கருத்துகளை உபதேசிப்பதாலோ, லோகத் தத்துவங்களை விளக்குவதாலோ மனிதர்களின் துயரங்கள் தீராது.

மாறாக, அவர்களை நேரில்  தேடிச் சென்று, அவர்களின் துயரங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைய வேண்டும் என்ற அவரின் எண்ணங்களை ‘ஆத்ம உபதேச சதகம்’ மூலம் வெளிப்படுத்தினர். சொன்னதோடு நில்லாமல் அதை முழுமையாகச் செயல்படுத்தினர். அதனால் மக்கள் ஆதரவு பெருகியது.

திருவாங்கூர் சமஸ்தானத்தில், திருவனந்தபுரம் அருகே நெய்யாறு என்று ஓர் ஆறு ஓடுகிறது. காடுகளும், மரங்களும் சூழ்ந்த அழகான இயற்கை வளம் கொழிக்கும் பகுதி. கரையில் “அருவிப்புரம்” என்ற ஒரு சிறிய கிராமம். நாராயண குரு, நெய்யாற்றிலிருந்து ஒரு நீண்ட, உருண்டைக் கல்லை எடுத்து வந்து அதை ‘சிவன்’ என்று கூறி பிரதிஷ்டைப் பண்ணினார்.

தன் சீடர்கள் உதவியுடன், அந்தக் கல்லிற்கு மேல் தென்னை ஓலைகளாலும், மாவிலைகளாலும் கூரை அமைத்தார். பின்னாளில் “அருவிப்புரம் சிவன் கோயில்” என்று புகழடைந்தது அந்தக் கோயில். சூத்திரர்களும், பஞ்சமர்களும் கடவுளைப் பார்க்கவோ, நேரடியாக தொழுது வணங்கவோ, அக்கோயில் இருக்கும் தெருக்களைப் பயன்படுத்தவோ எந்த விதத் தடைகளும் இல்லை என்ற நிலைநாட்டினார். அந்த நாட்டில் கோயில்கள் இருக்கும் தெருக்களில் கூட நழைய முடியாத ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் விதிக்காத இந்தக் கோயில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

நிர்வாக வசதிக்காக திருவனந்தபுரம் 245 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றிற்குப் ‘பிடாகை’கள் என்று பெயர். அவைகளை நிர்வகிக்க நாயர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை “பிடாகைக்காரர்”கள்  என்றழைக்கப் படுவது வழக்கம். கீழ் ஜாதியினர் ஜாதியச் சட்டங்களை ஒழுங்காகக் கடைப்பிடிப்பதைக் கண்காணிக்கும் வேலைதான் இவர்களின் முக்கியப் பணி. திருவாங்கூர் நாட்டில் 200 பிடாகைக்காரர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

நம்பூதிரிப் பார்ப்பனர்களின் ஆலோசனையின்படி அரசர் இவர்களை நியமிப்பார். ஒவ்வோர் ஆண்டும் (டிசம்பர்) மார்கழி மாதம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் இவர்கள் கூட்டம் நடைபெறும். நாட்டின் அனைத்துப் பிடாகைக்காரர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். அந்த மாதம் சுசீந்தரம் கோயில் தேர்த் திருவிழா நடக்கும். அது முடிந்த உடன் பிடாகைக்காரர்கள் கூட்டம். அப்பொழுது ஒவ்வொரு பிடாகையிலும் ஜாதியச் சட்டங்களை முறிய கீழ்ஜாதிக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்ட, கொடுக்க வேண்டிய தண்டனைகள் பற்றி விவாதிக்கப்படும்.

புதிய ஜாதியச் சட்டங்களும் நிறைவேற்றப்படும். இப்படி நிறைவேற்றப்பட்ட ஜாதியச் சட்டங்கள் உடனடியாக அமலுக்கு வரும். இவை அனைத்தும் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் கண்காணிப்பிலும், ஆலோசனையின் பேரிலுமே நடைபெறும். அருவிப்புரத்தில் நாராயணகுரு சிவன் கோயிலை அமைத்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்தவர்கள் இந்தப் பிடாகைக்காரர்கள். நாராயண குருவின் அருவிப்புர சிவன் கோயில், நம்பூதிரிகளின் கடும் கோபத்தித்றகு ஆளானது. நாயர்களுக்கும், நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கும் மட்டுமே வணங்க உரிமையுள்ள சிவனைத் தொழ, ஈழவ நாராயண குரு மற்ற கீழ்ஜாதிக்காரர்களைத் தூண்டுவதாகக் கோபமடைந்தனர் மேல் ஜாதிப் பார்ப்பனர்கள்.

நாயர்களுக்கு அருவிப்புரம் சிவன் கோயிலைத் தாக்க ஆணையிடப்பட்டது. கோயிலைத் தாக்கிய நாயர்கள் “எங்கள் கடவுள் சிவன் அதை எப்படி நீ வணங்கலாம்?” என்று கூறி கோயிலைத் தாக்கினர். கோயிலின் கூரைகள் பிய்த்து எரியப்பட்டது. நாராயண குருவின் சீடர்கள் கோயிலில் வந்து குவிந்துவிட்டனர்.

தாக்க வந்தவர்களிடம், நாராயண குரு, “இது உங்கள் சிவனில்லை. உங்கள் சிவனை நீங்கள் கும்பிடுங்கள். இது எங்கள் சிவன். நாங்கள் சிவனைத் தொழுகிறோம்” என்று கூற, பிடாகைக்காரர்களின் கூலிப்படையை நாராயண குருவின் சீடர்கள் விரட்டியடித்தனர். கோயிலில் “அனைவரும் சமம். தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லா மக்களும் சிவனைத் தொழலாம்” என்று நாராயண குரு எழுதி வைத்தார்.

ஆரம்பத்தில் மேல் ஜாதிக் கடவுள்களை ஜாதி, வேறுபாடின்றி தொழும் ஏற்பாட்டைச் செய்தாலும், நாளடைவில் அதையும் மாற்றினார். களவங்கோடு என்ற ஊரில் கடவுள் சிலைக்குப் பதில் ஒரு பெரிய நிலைக் கண்ணாடியைப் பொருத்தினார். அவரவர் சொந்த உருவத்தை வழிபடச் செய்தார். “கோயில் ஒரு பொது அடையாளம். அதில் கல் இருந்தால் என்ன கண்ணாடி இருந்தால் என்ன? என்று கேட்டவர்களுக்குப் பதில் அளித்தார் நாராயண குரு.

(சான்றுகள்: “திருவாங்கூர் அடிமைகள்” – முனைவர் சா.குமரேசன். “மறைக்கப்பட்ட மாமனிதர்கள்” – மஞ்சை வசந்தன். tn.m.wikipedia.org)

(தொடருவேன்…)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *