11 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி தந்த நச்சு விதையின் விளைச்சலால் பலியாகும் சிறுபான்மையினர்: ஒரு கள நிலவரம்!

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பாணன்

நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி 11 ஆண்டுகளாக தூவிய நச்சுவிதை இன்று பரவி நாட்டில் சிறுபான்மையினரின் வாழ்க்கையைப் பாழாக்கி வருகிறது.

அகமதாபத்தில் இருந்து டில்லி செல்லும் விமானத்தில் பார்வை மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளி ஒருவரை அவரது இருக்கையை நோக்கி அழைத்துச்செல்ல விமானப் பணிப்பெண்கள் உதவிகொண்டு இருந்தனர். அப்போது அவரது கை உட்கார்ந்திருந்த நபர் ஒருவரின் தோளில் பட்டுவிட்டது. திரும்பிப்பார்த்த அந்த நபர் அந்த மாற்றுத் திறனாளியின் மத அடையாளமான தனது தொப்பி அணிந்திருப்பதைப் பார்த்ததும் அடுத்த நிமிடமே ஓங்கி ஓர் அறை விட்டார்.

சற்றும் எதிர்பார்க்காத இந்த நிகழ்வைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பணிப்பெண்களும், இதர பயணிகளும் திகைத்து நின்றனர்.

அதாவது, பார்வை மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளி இசுலாமிய அடையாளமான தொப்பியை அணிந்திருந்தார். அவ்வளவே! அதுவே உடன் பயணித்த நபருக்கு கடுங் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்! அதனால் அவர் பார்வை மாற்றுத்திறனாளி என்று தெரிந்தும் அவரைத் தாக்கி உள்ளார்.

ரயிலில் கடந்த சில ஆண்டுகளாக – தொடர்வண்டியில் குறிப்பாக, வட இந்தியாவில் மதிய, இரவு உணவு வேளைகளில் பயணிகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு கூட்டம் இதை வேலையாகவே வைத்துள்ளது.

நானே (பாணன்) இந்தக் கும்பலிடம் சிக்கி, வினாடியில் தப்பி உள்ளேன்.

2024ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் மும்பையில் இருந்து சென்னை திரும்பிக்கொண்டு இருந்தேன். அது மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் ஆகும். மதியம் 12.45  மணிக்கு சி.எஸ்.டி. ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அதில் ஏறிய பயணிகள் ‘கல்யாண்’ என்ற ரயில் நிலையத்தைத் தாண்டிய பிறகு சாப்பிட ஆரம்பிப்பார்கள். கல்யாணில் இருந்து புனேவரை யாருமே ஏறமாட்டார்கள்.

அப்படி நான் பயணம் செய்யும் போது உணவை சாப்பிடத் துவங்கினேன். இந்த நிலையில், மேலே மீசை தாடி மற்றும் ஹிந்துத்துவ அடையாளங்களுடன் நிறைய பேர் உட்கார்ந்திருந்தனர்.

எனது நண்பர் ஒருவர் கொடுத்த அசைவ உணவு மற்றும் ரொட்டியைச் சாப்பிடத் தயாரானபோது மேலே இருந்து ஒரு “க்காய் காத்தோஸ்?” (என்ன சாப்பிடுகிறாய்?) என்று மராட்டியில் கோபத்தோடு கேட்க, நான் அடுத்த வினாடியில், ஜன்னல் வழியாக உணவைத் தூக்கிப் போட்டுவிட்டேன். ரயில் மிக விரைவாக சென்றுகொண்டு இருந்தது.

நான் சாப்பிட்டது எருமை மாட்டிறைச்சியில் செய்யப்பட்ட ‘டால் கோஸ்த்’ எனப்படும் முகல் வகை உணவு. எனக்கு அது மிகவும் பிடிக்கும்; இருப்பினும், மேலே உள்ளவர்கள் இதை வைத்து பிரச்சினை செய்வார்கள்; கிழே கூட தள்ளிவிடும் ஆபத்துக்கூட நேரிடும். இதைப் பலமுறை வெவ்வேறு நிகழ்வுகளில் செய்துள்ளனர். ஆகவேதான் நான் உடனடியாக கீழே போட்டேன். “உடனே ஏன் வீசினாய்?” என்று அவர்கள் கேட்க, அது கெட்டுப்போன வாடை அடித்தது என்று சமாளித்தேன்.

அண்மையில் மும்பையில் இருந்து திரும்பும் போதும் அதே போல், பலர் உட்கார்ந்திருந்தனர். பயணச்சீட்டு பரிசோதகர் அவர்களிடம் மிகவும் சாதாரணமாக பேசிக்கொண்டே சென்றார். நான் இவர்கள் எல்லாம் யார் என்று கேட்க, ஒருவர் எச்.எம்.எஸ்.டி. என்று கூறினார்.

அதாவது, ரயில்வே யூனியனின் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொழிற்சங்க அமைப்பான  ‘ஹிந்து மஸ்தூர் சங்’ என்ற அமைப்பின் ஒரு பிரிவு. இவர்கள் வேலையே ரயிலில் உணவுத் தூய்மையைக் கண்காணிப்பதுதான், ஹிந்துவாக இருந்தால் மரக்கறி உணவை சாப்பிடவேண்டும். சிக்கன் சாப்பிடலாம், அதைவிட்டு வேறு ஏதேனும் சாப்பிட்டால் இவர்கள் தட்டிக் கேட்பார்கள். காரணம், ரயில் அவர்களுடைய அப்பன் வீட்டுச்சொத்தாம்!

ஹிந்து விரோதிகளே
பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்

31 ஜூலை 2023 அன்று அதிகாலை, ஜெய்பூரிலிருந்து மும்பை வந்து கொண்டிருந்த ரயிலில், சேத்தன் சிங் என்ற ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

அந்த விரைவு ரயில் மும்பை புறநகரை நெருங்கி  வந்துகொண்டு இருந்தபோது இசுலாமிய அடையாளம் உள்ளவர்களை தேடித்தேடிச் சென்று சுட்டுகொன்றார்.

அவர் சுட்டுக்கொல்லும் போது, “ஹிந்து விரோதிகளே… பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்! ஹிந்து என்றால் மோடிக்கு ஓட்டுப்போடுங்கள்… இல்லை என்றால் சாகடிக்கப்படுவீர்கள்” என்று சொல்லிச்சொல்லி முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் S-4லிருந்து S-10 வரை ஒவ்வொரு பெட்டியாக தேடிச்சென்று சுட்டுக்கொலை செய்தார்.

இப்படுபாதகச் செயலைச் செய்த நபரை ‘மனநோயாளி’ என்று கூறி, அவரைப் பணி இடைநீக்கம் செய்த ரயில்வே பாதுகாப்புப்படை அவருக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்ததாம். அத்தோடு தனது கடமையை முடித்துவிட்டது.

ஹிந்துக்கள் நிற்க,
நீ முஸ்லீம் உட்கார்ந்து பயணிப்பதா?

இதே போல் தான் டில்லி குர்காவ் ரயிலில் குல்லா அணிந்த சிறுவன் ரயிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது நின்றுகொண்டிருந்த நபர் “டேய் பாகிஸ்தானி உன்க்கு இந்தியாவிலேயே இடமில்லை. ரயிலில் எப்படி பயணிக்கிறாய்?” என்று கூறியதோடு, நில்லாமல் பழம் விற்றுக்கொண்டு இருந்த நபரின் கூடையில் இருந்த கத்தியை எடுத்து கழுத்திலும் நெஞ்சிலும் முகத்திலும் கொடூரமாக குத்தியுள்ளார். சிறுவன் நிகழ்விடத்திலேயே மரணமடைந்துவிட்டான்

அப்போது ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இருப்பினும் ஒருவர் கூட அதை தடுக்கச் செல்லவில்லை.

சோயாபீன்ஸ் (மீல்மேக்கர்) சமைத்துச் சாப்பிட்ட இசுலாமியரை மாட்டிறைச்சி உண்டார்
என்று கூறி படுகொலை!

அரியானாவில் மாட்டிறைச்சி உண்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த சபீர் மாலிக் (Sabir Malik) என்ற இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார்.

அரியானா மாநிலம், சார்க்கி தாத்ரியில் உள்ள பத்ரா என்ற கிராமத்தில்  27.08.2024 அன்று: மேற்குவங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த சபீர் மாலிக் (26). அங்கு பழைய பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளைச் சேகரிக்கும் தொழில் செய்து வந்த சபீர் மாலிக் மற்றும் அவரது நண்பர் அசீருதீன் ஆகியோர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக “பசுப் பாதுகாப்பு படை” (Gau Raksha Dal) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குச் சந்தேகம் எழுந்தது. பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை விற்பனைக்குத் தருவதாகக் கூறி, சபீர் மாலிக்கை ஒரு கடைக்கு அந்த கும்பல் வரவழைத்துள்ளது.

அங்கு வைத்து சபீர் மற்றும் அசாருதீனை அக்கும்பல் கடுமையாகத் தாக்கியது. பொதுமக்கள் தலையிட்டபோது, இருவரையும் மோட்டார் சைக்கிளில் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் தாக்கியுள்ளனர்.  இந்தத் தாக்குதலில் சபீர் மாலிக் உயிரிழந்தார். அவரது உடல் பாந்த்வா கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு கால்வாய் அருகே கண்டெடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சபீர் மாலிக் கொல்லப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு வெளியான தடயவியல் அறிக்கைதான். சபீர் மாலிக்கின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சி மாதிரிகள் ஆய்வகத்திற்கு  அனுப்பப்பட்டன.  அக்டோபர் 2024இல் வெளியான அந்த அறிக்கையில், வீட்டில் இருந்து பெற்ற மாதிரி இறைச்சியே அல்ல அது சோயாபீன் (மீல்மேக்கர்) என்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அவர் மீதான சந்தேகம் முற்றிலும் தவறானது என்பது நிரூபணமானது.

இதைச் செய்த பசுப்பாதுகாப்புப் படையினர் மீது பொதுவான வழக்குப் பதிவு செய்து பெயரளவிற்கு அவர்களை கைதுசெய்து, பின்னர் விடுதலை செய்துவிட்டனர்.

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரப் பிரதேசம் தாத்ரியில் முகமது அக்லாக் என்ற இஸ்லாமிய முதியவர் மாட்டிறைச்சி சாப்பிட்டார். உடனடியாக “அவரை அடித்துக் கொல்லுங்கள்” என்று  கோயிலில் அறிவிப்பு விடுக்க உடனடியாக பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முகமது அக்லாக் வீடுபுகுந்து அவரை அடித்து கொலை செய்தனர். அவரது மகளை மானபங்கப்படுத்தினர். அவரது இளைய மகனை அடித்து குற்றுயிராக்கினர்.  அவரின் மூத்தமகன் இந்திய விமானப்படை சென்னைப் பிரிவில் வீரராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் (Dadri) முகமது அக்லக் அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்விற்குப் பிறகு, அக்கிராமத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தபோது, சங்கீத் சோம் அங்கு சென்றார். சங்கீத் சோம் அக்கிராமத்தில் ஒரு கோயிலில் கூடிருந்த மக்களிடையே பேசுகையில், மீது பொய் வழக்கு போட்டால், தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

அக்லக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 18 நபர்களில், உள்ளூர் பாஜக பிரமுகரான சஞ்சய் ராணாவின் மகன் விஷால் ராணாவும் ஒருவர். சங்கீத் சோம் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களை வீரர்களைப் பெற்ற ஹிந்துக்கள் என்று கூறி பாராட்டுக்கூட்டம் நடத்தினார்.   2013 முசாபர்நகர் கலவர வழக்குகளிலும் இவர் மீது ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே பிணையில் வந்த அனைவருக்கும் தாத்ரியில் உள்ள அனல்மின் நிலையத்தில் வேலை வழங்கப்பட்டது. இது மிகவும்  சர்ச்சையான நிலையில்,  (டிசம்பர் 2025 இறுதியில்), இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் மீதான வழக்குகளை உத்தரப்பிரதேச அரசு திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *