ஆளுநர் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானத்தை
பல மாநில முதலமைச்சர்களும் வரவேற்கின்றனர்
‘திராவிட மாடல்’ அரசு இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
பி.ஜே.பி. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களைப் பயன்படுத்தி ஒன்றிய பி.ஜே.பி. அரசு ஆட்டிப் படைப்பதற்கு முடிவு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நமது முதலமைச்சர் நிறைவேற்றிய தீர்மானத்தினை பல மாநில முதல மைச்சர்களும் வரவேற்று இருப்பது – தமிழ்நாட்டின் ‘‘திராவிட மாடல்” அரசு இந்தியாவுக்கே வழிகாட்டு கிறது என்பதற்கான அடையாளம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
இந்திய நாட்டின் ஒருமைப்பாடு என்பது வேற்றுமை யில் ஒற்றுமை கண்டு, பல்வேறு மாநிலங்கள், பன் மதங்கள், பல மொழிகள், பல பண்பாட்டுக் கலாச்சாரத் தனித்தன்மைகளைப் பாதுகாப்பதில்தான் இருக்கின்றன!
உண்மையான அதிகாரமே மக்களிடம்தான்!
ஆட்சி ஒரு கட்சியிடம் தேர்தல்மூலம் தரப்பட்டாலும், உண்மையான அதிகாரம் மக்களிடம் மட்டுமே என்ப தையே நமது அரசமைப்புச் சட்டம் பிரகடனப்படுத்துகிறது!
அந்த வெளிச்சத்தை – அரசமைப்புச் சட்டம் கூறும் சட்டக் கூற்றை மறந்து, திட்டமிட்டே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அவ்வாட்சிகளுக்குத் தொல்லை தரும் வகையில், அவற்றை செயல்பட விடாமல் செய் வது, மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை காலவரையின்றி, கிடப்பில் போடுவது, பிறகு திருப்பி அனுப்புவது – அரசமைப்புச் சட்ட மாண்புக்கே நேர் எதிரானது!
தமிழ்நாடு சட்டப்பேரவையின்
வழிகாட்டும் தீர்மானம்!
இதனை உச்சநீதிமன்றம் சில தீர்ப்புகளின்மூலம் சுட்டிக்காட்டியும், சில ஆளுநர்களின் அடாவடித்தனம், ஒத்துழையாமை, முட்டுக்கட்டை முயற்சிகள் நடக்கின் றன. தமிழ்நாட்டு ஆளுநர் ரவி போன்றவர்களால் இதைப்போல வேறு சில ஒன்றிய அரசின் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றவர்களின் – ‘‘தொல்லை கொடுக்கும் திருப்பணிகளை” எதிர்த்து, தமிழ்நாடு சட்ட மன்றம் நிறைவேற்றிய வழிகாட்டும் தீர்மானம் போலவே, ஆளுநர்கள் முடிவு எடுப்பதற்குக் குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்து, அரசமைப்புச் சட்டம் திருத் தப்படவேண்டும் என்று குடியரசுத் தலைவர், பிரதமரைக் கேட்டுக் கொள்ளும் வகையில், சட்டமன்றத்தில் தீர் மானங்கள் நிறைவேற்றப்படல் வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் ஆளும் பல மாநிலங்களுக்கு நமது ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளது – அருமையான ஜனநாயகக் காப்பு அரண் மட்டுமல்ல; ஒரு வழிகாட்டும் சட்ட நெறிமுறை ஓட்டையை அடைப் பதும் ஆகும்!
அதனை உடனடியாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா போன்றவர்கள் வரவேற்று, தாங் கள் இக்கருத்தில் ஒருமித்து செயல்பட இசைவு தந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சியைப் பாராட்டி யுள்ளனர்!
இந்தியாவுக்கே ‘திராவிட மாடல்’ அரசு வழிகாட்டுகிறது!
இது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் செயல்திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு; இது ஒரு நல்ல முன்னோட்டம்.
தமிழ்நாடுதான் பல விஷயங்களுக்கு வழிகாட்டும் எடுத்துக்காட்டான ஆட்சியாக உள்ளது என்பதற்குச் சான்று!
இம்முயற்சி பெருகி, மாநில உரிமைகளின் பாதுகாப்பு மக்கள் அரணாக மிளிரட்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சியும், அதன் முதலமைச்சரும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
20.4.2023