அறம் வளர்க்கிறதா ஆன்மிகம்? (5) மாட்டை வணங்குவதும் மனிதனைத் தீட்டென்பதும் அறமா?

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மஞ்சை வசந்தன்

ஆன்மிகம் என்பது கடவுளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படுவது. ஆன்மா இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. 1.பரமாத்மா, 2.ஜீவாத்மா. ஜீவாத்மா பரமாத்மாவின் கட்டுப்பாட்டில் பிறவிகள் எடுப்பதாகக் கூறப்படுகிறது.

கடவுள் ஜீவன்களைப் படைப்பதாகவும், புழு. பூச்சி முதல் மனிதன் வரை எல்லாம் கடவுள் படைப்புகள். ஜீவராசிகளைப் படைக்கும்போது அதன் வாழ்வை, உயர்வு, தாழ்வை கடவுளே தீர்மானிக்கிறது என்கிறது ஆன்மிகம்.

மனிதனைப் படைக்கும்போது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று படிநிலை வர்ணமாகக் கடவுளே படைத்ததாகக் கூறப்படுகிறது. பிராமணன் உயர்ந்தவன், சூத்திரன் மிகத் தாழ்ந்தவன், தீட்டு உடையவன் என்கிறது.

பிராமணன் சாஸ்திரங்களுக்குக் கர்த்தா. பிராமணன் வகுத்த சாஸ்திரங்களில் விலங்காகப் பிறந்த பசுமாடு புனிதமானது – வணங்கத்தக்கது என்று கூறப்பட்டு அவ்வாறே வணங்கப்படுகிறது. அதே நேரத்தில் மனிதனாகப் பிறந்த சூத்திரனாக வர்ணம் பிரிக்கப்பட்டவன் தீண்டத்தகாதவனாக, கீழானவனாக, உரிமைகள் அற்றவனாக, பிராமணனுக்குப் பணி செய்ய வேண்டியவனாக ஆக்கப்பட்டுள்ளான்.

சாஸ்திரங்களில் இந்நிலைத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மனுதர்ம சாஸ்திரத்தில் மிக விரிவாக, தெளிவாக, உறுதியாகக் கூறப்பட்டுள்ளது. இதைச் சட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பி.ஜே.பி. அரசும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் வலியுறுத்தி வருகின்றன. எனவே, மனுதர்ம சாஸ்திரம் கூறும் சில முதன்மைக் கருத்துகளை கீழே படியுங்கள்.’

சிறப்புக் கட்டுரை

முதல் அத்தியாயம்

ஸ்லோகம் 31: உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், துடை, கால் இவைகளினின்றும் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்.

ஸ்லோகம் 91: சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணிசெய்வதை முக்கியமான தருமமாக ஏற்படுத்தினார்.

ஸ்லோகம் 100: பிராமணன் முதல் வருணத் தானானதாலும் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்தவிடத்திற் பிறந்ததினாலும் இந்தவுலகத்தில் உண்டாயிருக்கிற சகலவருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான்.

ஸ்லோகம் 101: ஆதலால் பிராமணன் ஒருவரிடத்தில் தானம் வாங்கினாலும் தன் பொருளையே சாப்பிடுகிறான்; தன் வஸ்த்திரத்தையே உடுத்துகிறான்; தன் சொத்தையே தானஞ்செய்கிறான்/மற்றவர்கள் அவன் தயையினாலேயே அவற்றை அனுபவிக்கிறார்கள்.

இரண்டாம் அத்தியாயம்

ஸ்லோகம் 31: பிராமணனுக்கு மங்களத்தையும் க்ஷத்திரியனுக்குப் பலத்தையும் வைசியனுக்குப் பொருளையும் சூத்திரனுக்குத் தாழ்வையும் குறிக்கும் பெயரை இடவேண்டியது.

ஸ்லோகம் 32: பிராமணனுக்குக் ‘சர்ம்ம’வென் பதையும் க்ஷத்திரியனுக்கு ‘வர்ம்ம’ என்பதையும் வைசியனுக்கு ‘பூதி’யென்பதையும் சூத்திரனுக்குத் ‘தாச’ என்பதையும் தொடர்ப் பேராக இடவேண்டியது.

ஸ்லோகம் 135: பத்து வயதுள்ள பிராமணனையும் நூறு வயதுள்ள சத்திரியனையும் தகப்பன் பிள்ளையாக வறியவேண்டியது. அதில் பிராமணன் தகப்பன் மரியாதையும், க்ஷத்திரியன் புத்திர மரியாதையும் வகிக்க வேண்டியது.

மூன்றாம் அத்தியாயம்

ஸ்லோகம் 112: வைசியன்- சூத்திரன் இவர்கள் பிராமணன் வீட்டிற்கு அதிதியாக வந்தாலும் தன் பரிச்சாரகாள் (சமையல்காரர்) சாப்பிடும்போது அவர்களையும் புசிப்பிக்க வேண்டியது. (அவர்கள் பிராமணனோடு சேர்ந்து சாப்பிடத் தகுதியில்லை.)

ஸ்லோகம் 178: சூத்திரனுக்கு யாகஞ் செய்விக்கிறவன் எவ்வளவு பேர்களைத் தொடுகிறானோ அவ்வளவு பேர்களுக்கும் செய்த அன்னதானத்துக்குப் பலனில்லை.

ஸ்லோகம் 249: எவன் சிரார்த்தஞ்செய்து மீதமுள்ள அன்னம் (சோறு) முதலியவற்றை சூத்திரனுக்குப் போடுகிறானோ, அந்த மூடன் காலசூத்திரமென்னும் நரகத்தில் தலைகீழாக வீழ்வான்.

சிறப்புக் கட்டுரை

நான்காம் அத்தியாயம்

ஸ்லோகம் 215: கருமான், செம்படவன், கூத்தாடி, தட்டான், பிரம்புவேலை செய்பவன், கத்தி முதலான ஆயுதம் விற்பவன் இவர்களின் அன்னத்தை (உணவை) உயர் ஜாதியினர் சாப்பிடக் கூடாது.

அய்ந்தாம் அத்தியாயம்

ஸ்லோகம்: 86: பறையன் முதலிய அசுத்தமுள்ள வர்களைப் பார்த்தால் ஆசமநஞ் செய்து காயத்திரி, சூரியமந்திரம், பவமான ருக்கு இவைகளைத் தன்சக்திக்குத் தக்கதாகச் செபிக்கவேண்டியது. (பறையனைப் பார்த்தாலே அவ்வளவு பாவமாம்!)

ஸ்லோகம் 104: பிராமணன் முதலானோர் இறந்தால் அந்த ஜாதியார் இருக்கும்போது சூத்திரனைக்கொண்டு அப்பிணத்தை எடுக்கச் சொல்லக்கூடாது. அப்படி யெடுத்து தகநஞ்செய்தால் இறந்தவனுக்குப் புண்ணியலோகம் கிடைக்காது. (பிராமணன் பிணத்தைக் கூட சூத்திரன் தொடக்கூடாது!)

எட்டாவதத்தியாயம்

ஸ்லோகம் 272: அகங்காரத்தால் நீயிதைச் செய்யவேண்டு மென்று பிராமணனுக்குத் தருமத்தைப் போதிக்கிற சூத்திரனுடைய வாயிலுங் காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்றவேண்டியது.

ஸ்லோகம் 379: கொலை செய்த பிராமணனுக்குத் தலை முடியை மொட்டையடிப்பதே தண்டமாகும். ஆனால்,  மற்ற வருணத்தாருக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும்.

ஸ்லோகம் 413: பிராமணன் சம்பளங்கொடுத் தேனும் கொடாமலேனும் சூத்திரனிடத்தில் வேலைவாங்கலாம். ஏனெனில் சூத்திரன் பிராமணனுக்கு வேலை செய்யவே பிரமனால் படைக்கப்பட்டிருக்கிறான்.

சிறப்புக் கட்டுரை

ஒன்பதாவதத்தியாயம்

ஸ்லோகம் 178: பிராமணன் சூத்திரப் பெண்ணைத் திருமணம் செய்து அதில் பிள்ளை பிறந்தால், அப்பிள்ளை உயிரோடு இருப்பினும் பிணத்துக்குச் சமம்.

ஸ்லோகம் 319: பிராமணர்கள் கெட்ட காரியங்களைச் செய்திருந்தாலும் சகலமான சுபாசுபங்களிலும் பூசிக்கத்தக்கவர்கள். ஏனெனில் அவர்கள் மேலான தெய்வம் ஆகும்.

ஸ்லோகம் 334: வேதசாஸ்திரமறிந்த, கீர்த்திபெற்ற பிராமணணுக்குப் பணிசெய்வதே சூத்திரனுக்கு மோட்சத்தைத் தருவிக்கிற மேலான தருமமாகும்.

சிறப்புக் கட்டுரை

அத்தியாயம் பத்து

ஸ்லோகம் 73: பிராமணன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பிராமண ஜாதியாக மாட்டான். ஏனென்றால் அவனுக்கு பிராமண ஜாதித் தொழிலில் அதிகாரமில்லை. சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திரஜாதியாகமாட்டான். ஏனென்றால், அவன் கீழ் தொழிலைச் செய்தாலும் அவன் ஜாதி உயர்ந்தது என்பதால்.

ஸ்லோகம் 96: தாழ்ந்த ஜாதியான் பொருளாசையால் தனக்கு மேலான ஜாதியான் றொழிலைச் செய்தால் அவன் பொருண்முழுமையும் அரசன் கைப்பற்றிக்கொண்டு, அவனையும் உடனே ஊரைவிட்டு ஓட்டவேண்டும்.

ஸ்லோகம் 122: சூத்திரன் சொர்க்கம் செல்ல அல்லது தன் பிழைப்புக்காக அல்லது இரண்டிற்குமாவது, பிராமணனையே தொழவேண்டும் இவன் பிராமணனையடுத்து வாழும் சூத்திரன் என்பதே அவனுக்குப் பாக்கியம்.

பதினோராவது அத்தியாயம்

ஸ்லோகம் 84: பிராமணன் பிறப்பால் தேவர்களும் வணங்கத்தக்க உயர்ந்தவன்.

அதாவது கடவுளை விடவும் பிராமணன் மேலானவன் என்கிறது ஸநாதனம்.

நீதித்துறையிலேகூட இன்றைக்கு ஸநாதனம் கோலோச்சுகின்ற கொடுமை அப்பட்டமாக நடக்கிறது. அண்மையில் 2023 ஜூலை 19, 21 தேதிகளில் கொச்சியில் “தமிழ் பிராமணர் உலக மாநாடு’’ நடைபெற்றது. அம்மாநாட்டில் மூன்று முக்கியமானவர்கள் கலந்துகொண்டனர்.

ஒருவர் நீதிபதி சிதம்பரேஷ், இரண்டாமவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், மற்றொருவர் அயல்நாட்டில் தூதரகத்தில் பணியாற்றும் உயர்அதிகாரி.

இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய நீதிபதி சிதம்பரேஷ், ஆரிய ஸநாதனத்தை ஆதரித்து அப்பட்டமாகப் பேசியுள்ளார். அவர் பேசிய முதன்மைக் கருத்துகளை நீங்களே கீழே படித்துப் பாருங்கள்.

“பிராமணர்கள் இருபிறப்பாளர்கள். எனவே, தலைமைப் பொறுப்பில் அவர்கள்தான் இருக்க வேண்டும். பூர்வஜென்மத்தில் (முற்பிறவியில்) அவர்கள் செய்த நல்ல புண்ணியச் செயல்கள் காரணமாக இப்பிறவியில் பிராமணர்களாகப் பிறக்கிறார்கள்.

பிராமணர்கள் நற்குணங்கள், நற்சிந்தனைகள் கொண்டவர்கள். சைவ உணவுகளை உண்ணக் கூடியவர்கள்; கலையார்வம் உடையவர்கள்; கர்நாட்டிக் இசையில் ஈடுபாடு கொண்டவர்கள்

தமிழகப் பிராமணர்கள் தஞ்சாவூரிலிருந்து சென்று பாலக்காட்டிலும், திருநெல்வேலியிலிருந்து சென்று திருவனந்தபுரத்திலும் குடியேறினார்கள். உயர்கலாச்சாரமும், உயர்ஜாதிப் பிறப்பும் உடையவர்கள், தூய்மை, கல்வி உடையவர்கள் என்பதால் தனியே அக்ரகாரத்தில் வசித்தனர்.

இந்த மாநாடு பிராமணர்களுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. பிராமணர்களின் பல்வேறு பட்ட கருத்துப் பரிமாற்றத்திற்கும், நல்ல முடிவுகளை மேற்கொள்ளவும் இந்த மாநாடு பயன்படுகிறது. அதனால், என்னுடைய கருத்துகளை இங்கே கூற வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஜாதி,  சமுதாயம் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது கூடாது. அது ஒழிக்கப்படவேண்டும். இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் மட்டுமே தரப்பட வேண்டும். என்பன போன்ற பல கருத்துகளைப் பேசியுள்ளார்.

மாட்டை வணங்கச் சொல்லிவிட்டு மனிதர்களை இப்படி இழிவு செய்வது ஆன்மிகத்திற்கு அழகா? அறமா?

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *