சென்னை, ஜன.29 திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பத்மா (48). தூய்மைப் பணியாளரான இவர், கடந்த 11-ஆம் தேதி தியாகராயர் நகர் வண்டிக்காரன் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் கிடந்த ஒரு பையை எடுத்துப் பார்த்தார். அதில் 45 பவுன் தங்க நகைகள் இருந்தன. சிறிதும் தாமதிக்காமல், அந்த நகைகளை அவர் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
காவல்துறையினரின் விசாரணையில், அந்த நகைகள் நங்கநல்லூரைச் சேர்ந்த பரமேஷ் (46) என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. அவரிடம் நகைகள் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டு: பத்மாவின் நேர்மையைப் பாராட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
அஞ்சல் துறை கவுரவம்: சென்னை மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், ‘மை ஸ்டாம்ப்’ (My Stamp) திட்டத்தின் கீழ் பத்மாவின் ஒளிப்படத்துடன் கூடிய அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
காப்பீடு மற்றும் சேமிப்பு: இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் சார்பில் அவருக்குப் பிரீமியம் கணக்கு மற்றும் ரூ. 15 லட்சத்திற்கான விபத்து காப்பீடு பாலிசி வழங்கப்பட்டது. மேலும், அவர் பெயரில் கால வைப்பு (Fixed Deposit) கணக்கும் தொடங்கப்பட்டது.
முதுநிலை அஞ்சல் கண்காணிப்பு அதிகாரி விஷ்ணுராஜ், பத்மாவை நேரில் பாராட்டி கவுரவித்தார்.
