அறம் வளர்க்கிறதா ஆன்மிகம்? (4) நரியைப் பரியாக்கி மோசடி செய்தது அறமா?

8 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மஞ்சை வசந்தன்

“நாள்கள் பல கடந்தன. குதிரைகள் வந்தபாடில்லை. அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகர் மீது கோபம் கொண்டான். மாணிக்கவாசகருக்குப் பல தண்டனைகள் கொடுத்தான். இறைவன் மாணிக்கவாசகருக்கு அசரீரி மூலம் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் குதிரைகள் வரும் என்றார். இறைவன் மொழியை மன்னனிடம் முன் மொழிந்தார் மாணிக்கவாசகர்.

ஆவணி மூல நட்சத்திரத்தில் இறைவன் காட்டில் உள்ள நரிகளை நல்ல ஜாதி குதிரைகளாக்கி தம் கணநாதர்களை குதிரை வீரர்களாக்கி இறைவனே குதிரைத் தலைவனாகி, மதுரை நோக்கி நடந்து மன்னன் முன் சென்று குதிரையைப் பற்றியும், குதிரை வகைகள் பற்றியும் கூறினார்.

“பாண்டிய மன்னன் பெரும் மகிழ்ச்சியுடன் துயிலச் சென்றான்.

குதிரைகளாக வந்த நரிகள் தங்கள் உண்மை வடிவம் கொண்டன. நரிகள், நத்தை, நண்டு முதலியவைகளைத் தின்பதற்குச் சங்கிலித் தொடர்களை அறுத்து வெளியேறி குதிரை லாயத்திலிருந்த குதிரைகளைத் தாவிக் கடித்து விட்டு ஊளையிட்டு அங்குமிங்கும் ஓடலாயின.

“பொழுது விடிந்ததும் பாண்டிய மன்னன் நிகழ்ந்ததை உணர்ந்து கடுமையாகக் கோபம் கொண்டு, மாணிக்கவாசகரை வரவழைத்துப் பலவாறாகத் துன்புறுத்தினான். தண்டலாளர் அவரை உச்சிப்பொழுதில் சூரியனைப் பார்க்கும்படி வைகை ஆற்று மணலில் நிறுத்தி நெற்றியிலும் கைகளிலும் கற்களை வைத்துத் துன்புறுத்தினார்கள். மாணிக்கவாசகர் சோமசுந்தரக் கடவுளை நினைந்து தியானித்தார்.

சிறப்புக் கட்டுரை

மாணிக்கவாசகர் ஒலிகேட்ட சுந்தரேசர், வைகையாற்றில் நீர் பெருங்கடல் போலப் பொங்கி வருமாறு ஆணையிட்டார். வெள்ளம் வைகைக்  கரையை உடைத்து மதுரையின் மதிற்புரத்தில் போய் வீடுகளில் புகுந்து மதிலையும் தாண்டி நகரத்தைச் சூழ்ந்துகொண்டது.

வைகை நதியில் ஏற்பட்ட வெள்ளம் மதுரை நகரினை ஒட்டிய பல பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளம் நகரில் புகுந்து நகரை மூழ்கடித்ததால் அரசன் அரிமர்த்தன பாண்டியன் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தான். அமைச்சரவைக் கருத்துகள் மூலம் வீட்டுக்கு ஒருவர் வைகைக் கரை உடைப்பைச் சரிசெய்ய வரவேண்டும் என்றும், ஆண்பிள்ளை இல்லாவிடில் கூலிக்கு ஆள் அமர்த்திக் கொண்டு வைகைக் கரையை அடைக்கலாம். வீட்டுக்கு ஒரு கூலியாள் என்று முடிவு செய்து பறை அறிவித்து நகரமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

பிட்டு விற்கும் வந்தி என்ற மூதாட்டிக்கு தன்பங்கு வேலையைச் செய்ய ஆள் இல்லை.

”கூலிக்கும் ஆள் கிடைக்கவில்லை. ஆகவே, சொக்கநாதப் பெருமானே நீயே துணை என்று தீர்மானித்தார்.

வந்தியின் குரலுக்கு செவி சாய்த்த சோமசுந்தரப் பெருமான் கூலியாளாக மண்வெட்டியுடன் பழைய அழுக்குத் துணியை இடுப்பில் கட்டி, சும்மாட்டுத் தலைமேல் கூடையை வைத்த வண்ணம், “கூலியாள் வேண்டுமா, கூலியாள்” எனக் கூவிக் கொண்டே வந்தி முன் வந்து நின்றார். வந்திப் பாட்டி மகிழ்ச்சியுற்று, “அப்பனே எனது பங்கை அடைத்துத் தருவாயா, என்ன கூலிவேண்டும்?” என்றார்.

மகேசனான கூலியாள், “பாட்டி எனக்குக் கூலி, உன் கையால் பிட்டு செய்யும்போது உதிர்ந்து வரும் அனைத்து பிட்டுமே கூலி” என்றார்.

சிவன் பிட்டைச் சாப்பிட்டுவிட்டு வேலை செய்யாது காலம் கடத்த, பணிகளை மேற்பார்வையிடவந்த அலுவலர்கள், வந்தியின் பங்கு மட்டும் வேலை நடைபெறாமல் இருக்க, அதுபற்றி மன்னனிடம் கூறினர்.

சிறப்புக் கட்டுரை

“கோபங்கொண்ட  அரிமர்த்தன பாண்டியன் தன் கையில் இருந்த பிரம்பால் கூலியாளின்  இருக்கும் இடம் சென்று, கூலியாளாக வந்துள்ள இறைவன் முதுகில் அடித்தான். இறைவன் வந்திக் கிழவியின் பொருட்டுக் கூலியாக வந்து அடியும் பெற்றார். கடைசியாகக் கூடையுடன் மண்ணை உடைப்பில் போட்டு ஒரு நொடியில் அடைத்தார். இறைவன் மறைந்தருளினார்.

பாண்டியன் இறைவன் முதுகில் அடித்த அடி அண்ட சராசரம் எங்கும் பட்டது. பாண்டியனின் முதுகு, மந்திரிமார் முதுகு, வீரர்கள் முதுகு, ஏவலர் முதுகு உட்பட ஊர்வன, பறப்பன என்று அனைத்து ஜீவராசிகளின் முதுகிலும் பட்டது.

“சோமசுந்தரர் வானத்தில் அசரீரியாக நின்று, ‘பாண்டியனே! பொருள்கள் எல்லாம் அற வழியினால் சம்பாதிக்கப்பட்டவை. ஆதலால், அவை நமக்கும் நம் அன்பர்க்கும் திருப்பணிக்கும் வாதவூரனால் கொடுக்கப்பட்டன. அவனை நீ துன்புறுத்தினாய். அப்போது நரிகளைப் பரிகளாக்கினோம். அன்று, இரவு பரிகள் நரிகளாகின. மறுநாளும் நீ துன்பம் செய்தாய். ஆகையால் வைகையில் வெள்ளம் பெருகச் செய்தோம். பிட்டுக்கு மண் சுமந்தோம்” என்றார்.

இறைவன் ஆணைப்படியே மாணிக்கவாசகர் விடுதலையாகிப் பல திருப்பதிகளையும் வணங்கிப் பக்திப் பாக்கள் பாடினார். அவ்வாறு அவர் தம்  வாழ்க்கையில் பாடிய பாக்களின் தொகுதியே திருவாசகம் ஆகும்” என்கிறது திருவிளையாடல் புராணம்.

மேற்கண்ட திருவிளையாடல் கருத்துகளை நன்கு சிந்தித்துப் பாருங்கள்.

* குதிரை வாங்கக் கொடுக்கப்பட்ட பணத்தைக் கோயில் கட்டச் செலவிட்ட மாணிக்கவாசகர் செயலும், அதைப் பாராட்டிய சிவனின் செயலும் குற்றச்செயல்கள் அல்லவா? மாணிக்கவாசகரின் செயல் நம்பிக்கைத் துரோகமல்லவா?

அதைவிட குற்றம்- நரியைக் பரியாக்கிய மோசடி. இப்படிப்பட்ட மோசடிகள் செய்வது கடவுளுக்கு ஏற்புடையதா? அப்படிச் செய்வது கடவுள் ஆகுமா?

* குற்றம் செய்த மாணிக்கவாசகரைத் தண்டிக்க ஆற்றுச் சுடுமணலில் மன்னன் நிறுத்த, ஆற்றில் நீர்விட்டு மாணிக்கவாசகரைக் காப்பாற்றியதும் குற்றம். அளவுக்கு அதிகமாக நீர்விட்டு கரை, வயல்கள், ஊர்கள் என்று பலவற்றையும் பாழாக்கியது மக்களுக்கும், அரசுக்கும் பாதிப்பையும் செலவையும் ஏற்படுத்தியது கடவுளுக்கு உகந்த செயலா?

சிறப்புக் கட்டுரை

* சுடுமணலில் நிற்கும் மாணிக்கவாசகரைக் காப்பாற்ற மழையைப் பொழியச் செய்திருக்கலாமே! ஏன் அதிக நீரை ஆற்றில் விட்டு சேதத்தை ஏற்படுத்த வேண்டும்? அந்த அளவிற்கு அறிவற்றவனா சிவன்? நாட்டைச் சேதப்படுத்தியது மேலும் ஒரு குற்றமல்லவா?

* வேலை செய்யக் கூலி பெற்று, வேலை செய்யாது ஏமாற்றி அறிவற்ற மன்னன் முதுகில் பிரம்படி கொடுத்தான். அந்த அடி எல்லோர் முதுகிலும் வீழ்ந்தது என்பது எப்படி நியாயம்? குற்றம் செய்தவருக்குத்தானே தண்டனை? மற்றவர்களுக்கு ஏன் அடிவிழ வேண்டும்? இதுவும் குற்றச்செயல் அல்லவா?

* கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்யாமல் இருந்தது மேலும் ஒரு குற்றமல்லவா?இப்படிப்பட்ட செயல்களைக் கடவுள்  செய்யலாமா? குற்றம் செய்த மாணிக்கவாசகருக்குத் தண்டனை தந்தது சரிதானே! அப்படியிருக்க அவரைக் காப்பாற்ற கடவுள் முயற்சி செய்தது அறமா? அதற்காக அளவுக்கு அதிகமாக நீரை வரச் செய்து பாழாக்கியது சரியா? அறச் செயலா?

பாண்டியன் நோய் தீர்த்த திருவிளையாடல்

“நின்றசீர் நெடுமாறன் என்னும் கூன் பாண்டியன் சேர, சோழர்களை வென்று பராக்கிரமசாலியாகத் திகழ்ந்தான். அவன் சோழன் மகள் மங்கையற்கரசியை மணமுடித்து இல்லறம் நடத்தினார். சமண சமயத்தைப் பின்பற்றினான்.

மங்கையற்கரசி அமைச்சர் குலச்சிறையாரின் ஆலோசனைப்படி சைவத்தின் திரு உருவமான திருஞானசம்பந்தரை வழிபட்டுத் தம் நாட்டுக்கு எழுந்தருளி சமண சமயத்தைக் காத்தருள வேண்டினர். திருஞானசம்பந்தர் அவர்களின் வேண்டுகோளுக்கு உடன்பட்டு மதுரைக்குப் புறப்பட்டார்.

பாண்டியனுக்கு வெப்பு நோய் தாக்கி அவனை வருத்தலாயிற்று.

மங்கையர்க்கரசியார் குலச்சிறையாரும் அறிவுறத்தியபடி அரசன் திருஞானசம்பந்தரை அழைப்பித்தான். அவர் அரண்மனையை அடைந்து அரசனை நோக்கி, ‘மந்திரமாவது நீறு’ என்னும் பதிகத்தைப் பாடி திருநீற்றை அவன் உடம்பில் பூசி, வெப்பு நோயை முற்றிலும் நீக்கினார். பாண்டியன் வெப்பு நோயுடன் கூனும் நீங்கி இளஞ்சூரியனைப்போல் விளங்கினான். பின்பு அவன் சமண சமயத்தை விட்டுச் சைவ சமயத்தைத் தழுவினான்” என்று திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

* சமணத்தைப் பின்பற்றியதற்காக பாண்டியனுக்கு வயிற்றுவலியை திருஞானசம்பந்தர் தந்து, பின் அவ்வலியைத் தீர்த்தார் என்பது மனித நேயத்திற்கும், கடவுள் கொள்கைக்கும் ஏற்புடையதா?

விருப்பமுற்ற மதத்தை ஒருவர் பின்பற்றியதற்காக அவருக்கு வயிற்றுவலியை உண்டாக்கி அவரைத் துன்புறுத்தி மீண்டும் பழைய மதத்திற்கு மாறச் செய்தது அறச் செயலா?

* ஒரு பதிகப் பாடல் பாடினால் வயிற்றுவலி வரும்; இன்னொரு பதிகப் பாடல் பாடினால் வயிற்றுவலி. நீங்கிவிடுமா? சமணத்தை அழித்து சைவத்தை வளர்க்க மேற்கொள்ளப்பட்ட மோசடி வேலைகளின் வெளிப்பாடுகள் அல்லவா இவை?

சிறப்புக் கட்டுரை

அனல் வாதமும் புனல் வாதமும்

மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் திருஞானசம்பந்தரை வணங்கி, ‘அய்யனே! அரசனின் வெப்பு நோயைப் போக்கிய தாங்களே சமணர்கள் எல்லோரையும் வென்று இத்தென்னாடு முழுவதும் திருநீற்றின் ஒளியைப் பரவச் செய்தல் வேண்டும்’ என்று வேண்டினார்கள். நாயனார் இறைவனின் சம்மதத்தை அறிய அவர்களுடன் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டார். சோமசுந்தரக் கடவுள் அசரீரியாக, ‘உங்களுக்கு விருப்பமானதே எமக்கும் சம்மதம்’ சமணர்கள் வாது செய்யின் தோல்வியுறுவது திண்ணம். தோல்வியடைந்து அவர்கள் கழுவில் ஏறுவார்கள்’ என்றார்.

மறுநாள் சம்பந்தர் அரண்மனையை அடைந்தார். அரசன் நோயை நீக்கமுடியாமல் தோற்ற சமணர்கள் வலியச் சென்று திருஞானசம்பந்தரை வாதுக்கு அழைத்தார்கள்.

பாண்டிய மன்னனின் அனுமதியுடன் சமணர்கள் விவாதம் செய்ய அழைப்புவிடுத்ததை ஏற்றார். மன்னர் முன்னிலையில் அனல் வாதம், புனல் வாதம் செய்து வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கலாம் என்று முடிவானது.

முதலில் அனல்வாதம் செய்யத் மதுரைக்குக் கிழக்கே வைகையாற்றின் தெற்கே ஒரு குழி வெட்டித் தீ மூட்டினர். மன்னர் முன்னிலையில் சமணர்கள் தம் மந்திரங்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளை முதலில் இட்டனர். அத்தனையும் தீயில் கருகின.

பின்னர் திருஞானசம்பந்தர் தான் எழுதிய போகமார்த்த பூண் முலையாள் என்னும் திருமுறைப் பாடலைத் தீயில் இட்டார். என்ன ஆச்சரியம் அனைத்தும் தீயில் கருகாமல் அப்படியே இருந்தன.

அடுத்ததாகப் புனல்வாதம் செய்யத் தீர்மானிக்கப்பட்டது. வைகை நீரில் புனல் வாதம் செய்ய மன்னர் புடை சூழ அனைவரும் வைகைக் கரையை அடைந்து முதலில் சமணர்கள் ஏடுகள் நீரில் விடப்பட்டன. அனைத்தும் வைகை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பின்பு திருஞானசம்பந்தர் தாம் எழுதிய ‘வாழ்க அந்தணர்’ என்று துவங்கும் பாடலை வைகை நீரில் இட்டார். வைகை நீரில் அந்த ஏடு எதிர்த்து மூழ்காமல் மிதந்து சென்றது. அதைக் கண்ட மன்னரும் மற்றவர்களும் வைகைக் கரையோரமாகப் பின் தொடர்ந்தனர். ஏடு நீரை எதிர்த்துச் சென்று சோழவந்தானருகில் இரண்டு மைலுக்கு முன்னால் கரை ஒதுங்கியது. அன்று முதல் இந்த இடம் திருஏடகம் என்று மாறியது. அங்கே பாண்டியன் ஏடகநாதர் கோயிலைக் கட்டினான் என்கிறது திருவிளையாடல் புராணம்.

* சமணர்களைத் தோற்கடிக்க அனல் வாதம், புனல் வாதம் செய்யப்பட்டது அப்பட்டமான மோசடியல்லவா?

நெருப்பில் போட்டால் பனை ஓலை சாம்பலாகாமல் இருக்குமா? நீர் இழுப்பில் விட்டால் பனை ஓலை எதிர்த்து வருமா? நீருக்குள் நூலைக் கட்டி இழுத்து மோசடி செய்தால் ஒழிய நீரில் பனை ஓலை எப்படி எதிர்த்து நீந்தி வரும்? சிந்திக்க வேண்டாமா? ஆக, இங்கு பெரிய மோசடி நடத்தப்பட்டுள்ளது என்பது தானே உண்மை!

சிறுத்தொண்டர் தன் பிள்ளையை அறுத்துக் கறி சமைத்த பின், அவன் பெயரைச் சொல்லி பெற்றோர் அழைத்ததும் அந்த பிள்ளை ஓடி வந்தது என்பது உண்மையாக இருக்க முடியுமா? கறியாகச் சமைக்கப்பட்ட பிள்ளை எப்படி உயிரோடு வர முடியும்?

ஆக, ஆன்மிகம் என்ற பெயரில் மோசடிகள் செய்து பக்தியை வளர்ப்பது அறச் செயலாகுமா? இதுதான் ஆன்மிகம் வளர்க்கும் அறமா?

நூலின் பெருமையை அறிய அறிஞர்கள் அதை ஆய்ந்து முடிவு செய்ய வேண்டும். மாறாக நெருப்பில் போட்டால் எரியாமல் இருந்தால் சிறந்தது; நீரில் ஏடு நீந்தி வந்தால் சிறந்தது என்பது அறிவுக்கு உகந்ததா?

* கற்புடையவள் என்பதை உறுதி செய்ய நெருப்பில் இறங்கச் செய்வது போன்ற மூடச்செயல் அல்லவா? கற்பு கெடாத ஒரு பெண்ணைத் தீயில் இறக்கினால் கருகாமல் இருப்பாளா? சிந்திக்க வேண்டாமா?

ஆக, மோசடியின் மொத்தமாக இந்தச் செயல்கள் உள்ளன என்பது விளங்குகிறதா?

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *