மகாராட்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் பெயரை வாசிக்கத் தவறிய அமைச்சரை, பெண் வனக்காவலர் ஒருவர் துணிச்சலுடன் வழிமறித்து கேள்வி எழுப்பிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராட்டிர மாநில நீர்வளம், பேரிடர் மேலாண்மை மற்றும் கும்பமேளா நிர்வாகத் துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன், நாசிக்கில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் உரையாற்றினார். தனது உரையில், அம்பேத்கர் பெயர் வந்த மூன்று இடங்களிலும், அவர் பெயரை உச்சரிக்காமல் “அந்த நபர்” (That person) என்று மராத்தியில் குறிப்பிட்டுப் பேசினார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு, பரேடில் நின்றுகொண்டு இருந்த பெண் வனக்காவலர் மாதவி ஜாதவ் நேரடியாக மேடைக்குச் சென்று ஒலிப் பெருக்கியைக் கையில் எடுத்து அமைச்சரை நோக்கி, ‘‘நீங்கள் ஏன் பாபாசாகிப் பெயரை உச்சரிக்கவில்லை? நீங்கள் இருக்கும் பதவி அந்தத் தலைவர் வகுத்துக் கொடுத்த அரசமைப்புச் சட்டத்தால் உருவானது, அவரைப் பிடிக்கவில்லை என்றால் அரசமைப்புச் சட்டத்தை உமக்குப் பிடிக்கவில்லை என்று பொருள்! நீங்கள் பதவி விலகி சென்று விடுங்கள்’’ எனக் கோபத்தோடு பேசினார். யாரும் எதிர்ப்பார்க்காத இந்த நிகழ்வால் அரங்கத்தில் உள்ள அனைவருமே அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டனர்!
இருப்பினும், அமைச்சர் பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்றார். இந்த நிலையில், அவர் காரில் ஏறும் போது, ஊடகவியலாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதனையடுத்து அவர் ‘‘நான் வேண்டுமென்றே கூறவில்லை; எனது கண்ணாடியில் உள்ள குறைபாடு காரணமாக இருக்கலாம்; இருப்பினும் நான் மன்னிப்புக் கேட்கவேண்டியது அவசியம் என்றால், நான் மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளேன்’’ என்று கூறிவிட்டுச் செல்ல முயன்றார்.
ஆனால், பெண் காவலர் அம்பேத்கர் படத்தினைக் கையில் வைத்துக் கொண்டு, ‘‘மன்னிப்புக் கேட்டு விட்டுச் செல்லுங்கள்’’ என்று கூறி, காரின் முன்னால் அமர்ந்து மறியல் செய்யத் தொடங்கி விட்டார்.
இதனை அடுத்து, அமைச்சர் மன்னிப்புக் கேட்டார். உடனிருந்த பெண் காவலர்கள் மறியலில் இருந்த மாதவி ஜாதவை அழைத்துச்சென்றனர்
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய மாதவி ஜாதவ், “பெண்கள் இன்று சீருடை அணிந்து அதிகாரமிக்கப் பதவிகளில் இருப்பதற்கு அண்ணல் அம்பேத்கரே காரணம். தேசியக் கொடியில் உள்ள தர்மச் சக்கரம் முதல் அசோகச் சின்னம் வரை அனைத்தும் அவர் வழங்கிய கொடை! அப்படிப்பட்டவரை இழிவுபடுத்துவதை வேடிக்கை பார்க்க முடியாது. இதற்காக எனது வேலை போனாலும் கவலையில்லை. வீடுகளில் பாத்திரம் கழுவியாவது நான் எனது குடும்பத்தைக் கவனித்துக்கொள்வேன், ஆனால் அம்பேத்கரின் புகழுக்கு இழுக்கு ஏற்படுவதை அனுமதிக்க மாட்டேன்” என்று உணர்ச்சிப்பொங்கத் தெரிவித்தார்.
உண்மையில் அந்தப் பெண்ணின் துணிவும், அறிவு நாணயமும் வெகுவாகப் பாராட்டத்தக்கது.
‘ஓர் அமைச்சராக இருக்கக்கூடியவர் அரசமைப்புச் சட்ட சிற்பி அம்பேத்கரின் பெயரைத் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கிறார்’ என்பதை ஒரு சாதாரண விடயமாக கருதி விட முடியாது.
திட்டமிட்டே அண்ணல் அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்திருக்கிறார். தீண்டாமை எந்த வகையில் கடைப்பிடிக்கப்பட்டாலும் அது சட்டப்படிக் குற்றமே! அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரிக்காததன் காரணம் என்ன? அவர் தாழ்த்தப்பட்ட (தலித்) சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தானே! எந்த வகையில் தீண்டாமையை கடைப்பிடித்தாலும் குற்றமே என்று அரசமைப்புச் சட்டம் 17-ஆவது பிரிவு ஆணித்தரமாகக் கூறும் நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சரின் பதவியைப் பறித்து சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
குடியரசுத் தலைவராக இருந்த மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் பூரி ஜெகநாதர் கோயிலுக்கும், ராஜஸ்தான் புஷ்கர் பிரம்மா கோயிலுக்கும் குடும்பத்தோடு சென்ற போது தடை செய்யப்படவில்லையா?
தற்போதைய குடியரசுத் தலைவர் திரவுபதி
முர்முவையே புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு அழைக்காததும் – இவர்களெல்லாம் தாழ்த்தப் பட்ட (தலித்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தானே!
பிஜேபி அரசு ஆர்.எஸ்.எஸின் கொள்கையைக் கடைப்பிடிக்கும் வரைக்கும் இந்த அவலம் நீடிக்கத் தான் செய்யும்! ேதவை மக்களிடம் விழிப்புணர்வே!
