சென்னை, ஜன.28- தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்தியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி நன்றி தெரிவித்து மாபெரும் விழா நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு ஊழியர்களின் கோரிக்கையை அறிந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமென திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டது.
ஆனால் முதலமைச்சரின் குழு அமைப்பு நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். மேலும் இந்த புதிய ஓய்வூதிய திட்டம் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கும் வந்துள்ளது.
பிப்.8ஆம் தேதி பாராட்டு விழா
ஆனால் முதலமைச்சரின் அறிவிப்பு ஏமாற்று வேலை. நாங்கள் கேட்டது பழைய ஓய்வூதியத் திட்டம் அது தான் எங்களுக்கு வேண்டும், உறுதி படுத்தப்பட்ட ஓய்வூதியம் எங்களுக்கு தேவையில்லை என அரசு ஊழியர்களின் குறிப்பிட்ட பிரிவினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி ஜாக்டோ ஜியோ சார்பில் மாபெரும் நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் தாஸ் அறிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியிலிருந்து நீக்க வேண்டும்
சி.பி.எம். செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்
சென்னை, ஜன.28- திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு தமிழ்நாடு அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருப்பரங்குன்றம் மலையில் வழக்கத்திற்கு மாறாக கார்த்திகை தீபம் ஏற்றக்கூறிய ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை பின்பற்றமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்தது.
இந்நிலையில், மனதில் ஸநாதன தர்மம் வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜி.ஆர்.சுவாமிநாதன், “பொது கடமைகளை செய்யும் போது ஸநாதன தர்மத்தை மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்; பொது வாழ்வில் ஒருவரது பங்கையோ குணத்தையோ வெறும் தொழில் ரீதியான அறிவு மட்டும் வரையறுக்காது. நான்கரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் முழுமையாக பணியாற்றுவேன் என்று நம்புகிறேன். ஸநாதன தர்மத்தை மனதில் வைத்து சிறப்பாக பணியாற்றுவேன்” என்று தெரிவித்தார்.
ஸநாதனம் குறித்த ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “ஸநாதனம் என்பது பாகுபாடு, ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டது. ஜாதிக்கொரு நீதி சொல்வது. இந்திய அரசியல் சாசனம் இதற்கு நேர் எதிரான விழுமியங்களைக் கொண்டது. ஸநாதனத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறியிருப்பதால், அவர் நீதிபதியாக நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். எனவே, அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட
பெண் பெயரை நீதிமன்ற ஆவணங்களில் வெளிப்படுத்தக்கூடாது
காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜன.28- பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் பெயரை நீதிமன்ற ஆவணங்களில் வெளிப்படுத்தக்கூடாது என்று காவல்துறைக்கு டில்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் பிணை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஸ்வரணா காந்தா சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், சிறுமியின் தாய்க்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகவும் இது சிறுமிக்கு பிடிக்காததால் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்ததாகவும் கூறி பிணை வழங்கக் கோரினார். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனிடையே மேற்கண்ட வழக்கின் ஆவணங்களின் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் குறிப்பிட்டு இருந்தது குறித்து நீதிபதி கவலை தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக டில்லி காவல்துறைக்கு அவர் ஒரு அறிவுறுத்தலை வழங்கினார். அதில், “இந்த வழக்கு தொடர்புடைய சம்பந்தப்பட்ட பகுதியின் துணை காவல்துறை ஆணையர் தனது அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் பெயர், பெற்றோர் அல்லது முகவரி உள்ளிட்ட விவரங்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் எந்த ஒரு நிலை அறிக்கை அல்லது ஆவணத்திலும் வெளியிடப்படாமல் இருப்பதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக அனைத்து காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கும் பொருத்தமான வழிமுறைகளை மீண்டும் வலியுறுத்துமாறு டில்லி காவல்துறை ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.” இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.
