ஆண்டவன் காப்பாற்றவில்லையே!
ஆன்மிக சுற்றுலா: வேன் மீது லாரி மோதி 4 பேர் பலி
மும்பை, ஜன.28 தானே மாவட்டம், டோம்பி விலி(மேற்கு) உமேஷ்நகர் பகுதியைச் சேர்ந்த 12 பேர் கொண்ட குழுவினர், திவாவைச் சேர்ந்த சில உறவினர்களுடன் ஆன்மிக சுற்றுலாவாக சோலாப்பூர், கோலாப்பூரில் உள்ள கோயில்களுக்கு கடந்த 26.1.2026 அன்று வேனில் புறப்பட்டுச் சென்றனர்.
தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள துல்ஜா பவானி கோவில் மற்றும் பிற கோயில்களில் வழிபாடு செய்த பிறகு, அவர்கள் பண்டரிபுரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். இரவு 7.30 மணியளவில் அந்தப்பகுதியில் அதிவேகமாக வந்த ஒரு லாரி, பக்தர்கள் சென்ற வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது.
இந்தக் கோர விபத்தில் வேனில் பயணம் செய்த சோனம் அஹிரே, சவிதா குப்தா மற்றும் யோகினி கேகனே ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு குழந்தை உள்பட 10 பேர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினர். தகவல் அறிந்து வந்த சோலாப்பூர் காவல்துறையினர் படுகாயமடைந்த 10 பேரையும் மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறை யினர், லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
அழகர் கோயிலின் முன்
ஆடு, கோழிகளை பலியிடலாம்!
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
மதுரை, ஜன.28 வைணவத் திருத்தலம் என்று கூறிக்கொள்ளும் அழகர் கோவிலின் முக்கிய கதவு முன்பு ஆடு கோழி உள்ளிட்ட விலங்குகள் பலியிடுவதால் ஹிந்துக்களின் உணர்வு புண்படுகிறது என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறிய தீர்ப்பில், அழகர் கோவிலில் முக்கிய கதவில் பதினெட்டாம்படி கருப்பசாமி உள்ளதாக நினைத்து வழிபாடு நடத்துகின்றனர்: இந்தக் கதவிற்கு முன்பு ஆடு, கோழி (பன்றிகள், எருமைகள் முன்பு பலியிடப்பட்டது) பலியிடுவது என்பது நீண்ட காலமாகத் தொடரும் ஒரு சடங்கு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட்டு மாற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர். இதனை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக மனுதாரர் கூறியுள்ளார்.
பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில்
மதராசாவில் குரானோடு கீதையையும் படிக்க வேண்டுமாம்!
போபால், ஜன.28 மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்டம், டோராஹா கிராமத்தில் மதரசா பள்ளி ஒன்று உள்ளது. குடியரசு நாளை முன்னிட்டு, மாநில காவல்துறை ஏடிஜிபி (பயிற்சி) ராஜா பாபு சிங், அந்த மதரசா மாணவர்களிடையே காணொலி வாயிலாக உரையாற்றினார்.
இதுகுறித்து பிடிஅய் (PTI) செய்தியாளரிடம் ராஜா பாபு சிங் கூறும்போது, “டோராஹா கிராமத்தில் உள்ள மதரசாவின் மவுலானா எனது பழைய நண்பர். குடியரசு நாளை முன்னிட்டு மாணவர்களிடையே உரையாற்றுமாறு அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். மாணவர்கள் பயின்று வரும் கல்விக்காக அவர்களுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். பகவத் கீதை பல நூற்றாண்டுகளாக மனிதகுலத்திற்கு அறிவொளி புகட்டி வருவதால், ‘புனித’ குரானுடன் அதையும் படிக்குமாறு மாணவர்களிடம் கூறினேன்” என்றார்.
மேற்கு வங்கத்தில் மீண்டும் பிஜேபி தோற்கும்; சாதித்துக் காட்டுவார் மம்தா
சமாஜ் வாடி தலைவர் அகிலேஷ் பேச்சு
கொல்கத்தா, ஜன.28 சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அகி லேஷ், அவரது மனைவி டிம்பிள் ஆகியோருடன் தங்களது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வ தற்காக மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவிற்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், அம்மாநில முதல மைச்சர் மம்தாவைத் தலைமைச் செயலகத்தில் அகிலேஷ் நேற்று (27.1.2026) மதியம் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அகிலேஷ் கூறி யதாவது: ’’சகோதரி (மம்தா) அமலாக்கத்துறையை வீழ்த்தியுள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் பாஜகவை மீண்டும் தோற்கடிப்பார் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். எங்களுடைய சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது தான், இதில் அரசியல் எதுவும் இல்லை.
மம்தா அன்பு மற்றும் சகோதரத்துவத்தைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் பாஜக பிளவுபடுத்தும் அரசியலை முன்னெடுத்து வருகிறது. பாஜக, சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் மூலம் தனது வாக்குகளை அதிகரிக்க முயற்சிக்கவில்லை; மாறாக, பாஜகவின் எதிர்ப்பாளர்களின் வாக்குகளைக் குறைக்கவே அக்கட்சி முயற்சிக்கிறது. ஜனநாய கத்தைக் காப்பாற்ற மம்தா எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் துணை நிற்போம்.’’ இவ்வாறு அவர் தெரி வித்தார்.
