ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப் பட்டுள்ளது. மொத்தம் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.46 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. நாணயங்களை அச்சிடுதல், நாட்டின் பணப் பரிவர்த்தனை உள்ளிட்டவற்றை கண்காணித்து, வங்கிகளின் வங்கியாக ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. நாடு முழுவதும் இந்த வங்கியின் மண்டல அலுவலகங்கள் உள்ளன. சென்னையிலும் அலுவலகம் உள்ளது.
572 அலுவலக உதவியாளர் பணி
ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரை ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இதனால் இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிறைய ஊதியம், சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கின்றன. ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரை அவ்வப்போது காலிப் பணியிடங்கள் உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன.
அந்த வகையில் தற்போது அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப் பிக்கலாம், கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: அலுவலக உதவியாளர் – மொத்தம் 572 பணியிடங்கள்
மண்டல வாரியாக: அகமதாபாத் – 29, பெங்களூரு – 16, போபால் – 04, புவனேஸ்வர் – 36, சண்டிகர் – 02, சென்னை – 09, கவுஹாத்தி – 52, அய்தராபாத் – 36, ஜெய்ப்பூர் – 42, கான்பூர் மற்றும் லக்னோ – 125, கொல்கத்தா – 90, மும்பை – 33, புதுடில்லி – 61, பாட்னா – 37.
கல்வித் தகுதி: 01.01.2026 தேதிப்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து 10ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி நன்கு தெரிந்து இருப்பது அவசியம். அதாவது சென்னையில் உள்ள பணியிடம் என்றால் தமிழில் நன்கு எழுத, படிக்க தெரிந்து இருக்க வேண்டும். அதிக கல்வித் தகுதி கொண்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது.
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 02.01.2001-க்கு முன்பாகவோ, 01.01.2008 க்கு பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.
எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப் பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், ஓபிசி பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
ஊதியம்: அலுவலக உதவியாளர் – மாதம் ரூ. 46,029/-
தேர்வு முறை: இணைய வழித் தேர்வு, மொழித் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இணைய வழித் தேர்வில்:
பகுத்தறிவுத் திறன் – (30 கேள்விகள்) (30 அதிகபட்ச மதிப்பெண்கள்), பொது ஆங்கிலம் – (30 கேள்விகள்) (30 அதிகபட்ச மதிப்பெண்கள்), பொது அறிவு – (30 கேள்விகள்) (30 அதிகபட்ச மதிப்பெண்கள்), எண் கணிதத் திறன் – (30 கேள்விகள்) (30 அதிகபட்ச மதிப்பெண்கள்)
தேர்வு மய்யங்கள்: தமிழ்நாட்டில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் வினாத்தாள் இருக்கும். தேர்வு மய்யங்கள் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில்/குமரி, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், தர்மபுரி ஆகிய நகரங்களில் தேர்வு மய்யம் அமைக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
கல்வித் தகுதியும் வேலைக்கு விண்ணப்பிக்கும் ஆர்வமும் இருப்பவர்கள் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அங்கே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பை படித்து உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 450 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ. 50 கட்டணம் ஆகும். இதனுடன் சேர்த்து 18 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்படும். (https://opportunities.rbi.org.in/) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 04.02.2026 கடைசி நாளாகும்.
அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பை படிக்க:
https://rbidocs.rbi.org.in/rdocs/ Content/PDFs/ OFFICEATTENDANT15012026FB A03C07BCA6419EA4D6B2165D9CAA7C.PDF
