சென்னை, ஜன.28 சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டுக் கட்டடங்கள் அமைப்பதை நியாயப்படுத்த முடியாது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்த சரத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தனது வீட்டுக்கு முன் தெருவை ஆக்கிரமித்து அன்னை வேளாங்கண்ணி சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அகற்ற உத்தரவிடக் கோரியும் மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு நேற்று (27.1.2026) விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், வேளாங்கண்ணி சிலை அமைத்துள்ள இடம் அரசு நிலமாகும்; பொது சாலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதனை கேட்ட நீதிபதிகள், ‘‘சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டுக் கட்டடங்கள் அமைப்பதை நியாயப்படுத்த முடியாது. பொதுப் பாதையில் மத கட்டமைப்புகள் கட்டுவதற்கு எந்த நபருக்கும் உரிமை இல்லை. மத உணர்வுகளை காரணமாகக் கூறி ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்த முடியாது.
திரு.வி.க. நகரில் தெருவை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள அன்னை வேளாங்கண்ணி சிலையை அகற்றுவதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடுகிறோம்’’ என்று நீதிபதிகள் தெரி வித்தனர்.
