பெரியார் பற்றிய சிறப்பான நூல் ஒன்று இதோ!

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

படிப்பதும், எழுதுவதும் எனக்கு மூச்சுக்காற்று.

பேசுவது – காலமெல்லாம் நான் மேற்ெகாண்டுள்ள  கடமை – அறிவு ஆசான் தந்தை பெரியாரிடம் நான் வரித்துக் கொண்ட வாழ்வியல் வழமை!

நூல் நயம் தேடும்போது, எவை உடனடியாகப் படித்துப் பயன் பெற வேண்டும் என்பது முக்கியம்.தற்போது அறிவுப்புரட்சி, கல்விப் புரட்சி, தகவல் தொழில் நுட்பப் புரட்சி நாளும் ஓங்கி ஓங்கி வளர்ந்து கொண்டு வரும் இன்றைய கால கட்டத்தில், நாம் ‘தற்குறிகளாகி’ விடக் கூடாதே என்ற தன் பாதுகாப்பும் – அத்தகைய காரணத்தால் நயமான நூல்களைத் தேடிப் படிக்கும் பழக்கமும் – கற்றுக் கொள்வதற்கு முன்னோட்டமாக அமைகிறது.

முன்பெல்லாம் ‘தற்குறி’ – எழுதப்படிக்கத் தெரியாதவர் என்றே பொருள் கொண்ட சொல்.

வாழ்வியல் சிந்தனைகள்

ஆனால், இந்த அறிவியல் தொழில் நுட்பக் காலத்தில் புதுப்புது துறைகள் மனித சிந்தனை வளத்தால், ஏராளமாக புதிய விளைச்சலை நாளும் ஏற்படுத்திக் கொண்டே வருகின்றன.

நாம் பட்டதாரிகளானாலும், இந்தப் புதிய தொழில் நுட்பத்தை, கணினிப் பயன்பாட்டை அறியவில்லை. அதுபோலவே, ‘இன்ப அதிர்ச்சி! – துன்பம் துரத்தும் பேராபத்து!’ ஆகிய இரு முனைக் கத்தி போன்ற செயற்கை நுண்ணறிவு    உலகில் ஓங்கி வளர்ந்து மானிட சமூகத்திற்கு மகத்தான அறைகூவலை விடுவதால்…

அ, ஆவன்னா படிப்பது போல… நாம் இனி அவற்றைத் தனியே மாலை நேர வகுப்பு அல்லது சுய கல்விமுறை மூலமாவது தெரிந்துகொண்டு ‘நவீன தற்குறி’  (Modern Illiterate)  என்ற அவமானகரமான நிலைப்பாட்டிலிருந்து தப்ப முயற்சிக்க வேண்டும்!

குழந்தைகள், இளைஞர்கள், மாணவர்கள், முதியவர்கள் என்ற வயது வேறுபாடின்றி எல்லோரும் புத்தகங்களைக் காதலித்துத் தங்களது அறிவினைப் பட்டை தீட்டிய வைரங்களாக ஆக்கிக் கொள்கின்றனர்.

நல்ல கருத்தாழம் கொண்ட, சிந்தனைகளை வளர்க்கும் புத்தகங்கள் நல்ல வாய்ப்பாக அமைந்து, நம் அறிவை ஆக்கமாக்கித் தருகின்றன!

எனவே படிப்பதனால் புத்து ணர்வும், புதிய தன்னம்பிக்கையும் கூடுதலாக நமக்குக் கிடைக்கின்றன!

தேனீக்கள் வெகு கஷ்டப் பட்டுத் தேனைச் சேகரித்துத் தருவதுபோல, உழைப்பும் அறிவும் இணைந்து புதிய அழைப்பும் – உழைப்பும் இணைந்த ஒரு புத்தம்புதிய செயலி நம்மைப் பெரிதும் பக்குவப்படுத்தி, நம் அறிவை விரிவு செய்து அகண்டமாக்குகிறதல்லவா? அப்படிப் படிப்பதற்கு நாளும் ஏராளமான நூல்களை எனக்கு நண்பர்கள், தோழர்கள், அன்பர்கள் சதா தந்துகொண்டே இருக்கிறார்கள்!

எனது ஓய்வு இடைவெளிக்குப் புதிய பாடம் சொல்லித் தருகிறார்கள்!

ஓய்வு என்பதில் மாற்றி மாற்றிப் படிப்பதும் ஒரு வகையே என்று கூறாமற்கூறி, படிக்கத் தூண்டுகின்றனர்.

அண்மையில், ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு  விருதுநகர்  பொதுக் கூட்டத்தில்  பேசினேன். அப்போது மேடை எதிரில் கருப்புச் சட்டை அணிந்திருந்த  முதிய தோழர் முன்னாள் தி.மு.க. செயலாளர் சுந்தரபாண்டியபுரம் பாவலர் மாடசாமி  அவர்கள், சின்னமனூர் முதுபெரும் புலவர்
மு. பாலசுப்ரமணியன் அவர்கள் அண்மையில் எழுதி – வெளியிட்டுள்ள ‘பெரியார் என்னும் பேரொளி’ என்ற நூலை என்னிடம் அளித்தார்.

இரண்டு நாளில் படித்தேன் – சுவைத்தேன் – ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர்
மு. முருகேஷ் அவர்களும், தேனி மாவட்ட த.மு.எ.க. சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அய். தமிழ்மணி அவர்களும் தந்த அணிந்துரை (நூலாசிரியரின் வயதோ 92 – எழுத்தோ இளைஞர்தான்!) கருத்துப் பேழையாக – தந்தை பெரியார் என்ற தொண்டின் இமயத்தை, சிந்தனையின் ஆழத்தை, செயலின் வேகத்தை மிகச் சிறப்பான எழுத்து நடையில், தந்தை பெரியார் என்ற தொண்டு செய்து பழுத்த பழத்தினை எவரும் சுவைக்கச் செய்யும் வகையில் தெளிந்த நீரோடை, சலனமின்றி ஓடுவதைக் கண்டு அதில் மூழ்கி மகிழ வேண்டும் என்று கரையோரம் நிற்பவர்களுக்குக்கூட ஆர்வமும், ஆசையும் உந்தித் தள்ளுவது போன்ற உணர்வு, படிக்கத் துவங்கியவுடனே ஏற்படுகிறது!

அவர் எழுதிடும் போது அவரது நிலை எப்படி! தன்னுரையில் எழுதுகிறார்.

‘‘நொண்டியடிக்கும் இதயம், நிமிஷ நேரமும் நிற்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் இடுப்பு வலி, அசந்தால், வீழ்த்தாமல் விட மாட்டேன் என்ற கிறுகிறுப்பு – இவற்றின் ஊடே போய்ச் சேருவதற்குள் இந்த புத்தகம் இரண்டையும் வெளியிட்டு விட வேண்டுமே… எப்படி என்று மனம் முழுக்கக் கவலைச் சுனாமியில் ‘தமிழே என் செய்வேன்!’ என்று அரற்றியது உள்ளம். (மற்றொரு புத்தகம் ‘அண்ணாவைச் செதுக்கிய தருணங்கள்’).’’

இவர் எழுதியவை வெறும் எழுத்துகள் அல்ல, கருத்துப் பாடம் – சோம்பலில் புரளும் சொரணையற்ற இளைஞர்கள் சிலருக்கு!

அவருக்குப் பெரியாரின் வாழ்நாள் மாணவனின் நன்றி கலந்த பாராட்டு! மகிழ்ச்சி வெள்ளம்! பெரும் வாழ்த்துகள் கூறி பெருமிதம் அடைகின்றோம்.

எழுத்து உங்களை வளமையாக்காமல்கூட போகலாம்; ஆனால், என்றும் இளமையாக்கிட – எல்லோருக்கும் உங்களது சிந்தனை ஆற்றலை கலங்கரை வெளிச்சமாகக் காட்டி, காலத்தை வென்று வாழச் செய்யும் என்பது உறுதி.

தோழர்களே, புத்தகத்தை வாங்கிப் படித்து அறிவை அகண்டமாக்கிப் பயன் பெறுங்கள்.

ஸ்ரீபப்ளிகேஷன்ஸ்

141, பாலாஜி நகர், புழல் – சென்னை – 600 060

பக்கங்கள்: 116 – விலை ரூ.130.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *