பெண் பருவமடைவது இயற்கை யான ஒரு உடலியல் மாற்றம். ஆண்களுக்கும் இது நிகழும். ஆனால், இந்தச் சமூகம் ஆண்களை விட்டுவிட்டுப் பெண்களை மட்டுமே குறிவைத்து இதில் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் திணித்தது.
ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டாலே திருமணத்துக்குத் தயாராக இருப்பதாக எண்ணிக் கொண்டு, அந்தப் பெண்ணை மணமுடிக்கும் பெற்றோர் இப்போதும் நம்மிடையே உண்டு. பெண் குழந்தைகளுக்கு முதல் மாதச் சுழற்சி ஏற்படுவதைப் பேச்சுவழக்கில் ‘பூப்பெய்துதல்’ என்கிறோம்.
ஒரு செடி பூ பூக்கும் நேரத்தில் மகரந்தச் சேர்க்கைக்குத் தயாராவதால், இயற்கையோடு வாழ்ந்த காலத்தில் இந்தப் பெயரைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், இந்தச் சொல்வழக்கு மிகத் தவறு. ஒரு பெண் குழந்தை முதல் மாதச் சுழற்சியை அடைந்துவிட்டதாலேயே அவள் திருமணத்துக்கும் பிள்ளை பேற்றுக்கும் தயாராகிவிட்டாள் என நினைப்பது முற்றிலும் தவறு.
அசாம் மாநிலத்தில் இந்த நிகழ்வைத் திருவிழா போலக் கொண்டாடுவார்கள். எவ்வளவு பிரம்மாண்டமாகச் சடங்கு செய்கிறார்களோ, அதைப் பொறுத்தே மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்டு வருவார்களாம். இளவயது திருமணங்களால் பாதிப்பு பெண்களுக்குத்தான். இந்த ஆணாதிக்கச் சமூகம் பெண்ணின் உடலைப் பிள்ளை பெறும் இயந்திரமாக மட்டுமே பார்க்கிறது.
ஆணும் பருவமடைகிறான்: ஆணுக்கு முதன் முதலில் மீசை அரும்புவதையோ, விந்தணு வெளியேறுவதையோ நாம் ஏன் ‘வயதுக்கு வந்த நிகழ்வாக’க் கொண்டாடுவதில்லை? ஏனெனில், இந்தச் சமூகம் பெண்களைப் போகப்பொருளாக மட்டுமே பார்க்கிறது. ஒரு பெண் திருமணத்துக்குத் தயாராகிவிட்டாள் என்பதைப் பறைசாற்றவே இச்சடங்குகள் பயன்படுகின்றன.
விருந்து வைத்துக்கொண்டாடப்படும் முதல் உதிரப்போக்கு, பின்னர் ‘தீட்டு’ என்று மாற்றப்படுவது ஏன்? முதல் முறை வரும்போது புனிதம், அடுத்தடுத்து வருவது தீட்டா? இது என்ன கணக்கு? இவ்வுலகில் பொய்யும் திருட்டும் மட்டுமே தீட்டாக இருக்க முடியும். பெண்ணின் மாதவிடாயைத் தீட்டு என்று எந்த அறநூலும் சொல்லவில்லை.
முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை: பெண்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதற்குப் பள்ளி இடைநிற்றலும் இளவயதுத் திருமணமும் முக்கியக் காரணங்கள். ‘மகள் வயதுக்கு வந்துவிட்டாள், இனிப் பாதுகாப்பு இல்லை’ என்று பல பெற்றோர் கல்வியை நிறுத்திவிடுகின்றனர்.
அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்க்கும்போது ஆண், பெண் இருவருமே முதிர் பருவத்தைத் தொடுகிறார்கள். ஆனால், சமூகம் பெண்ணை மட்டுமே ஒடுக்குகிறது. கோயில் கருவறை நுழைவுப் போராட்டம் ஜாதியப் போராட்டம் மட்டுமல்ல, அது பாலினப் போராட்டமும் கூட. உயர்வகைப் பூசாரிகள் கூடத் தங்கள் வீட்டுப் பெண்களை அர்ச்சகராக அனுமதிப்பதில்லை.
வயது முதிர்வை அறிவியல் கண்ணோட்டத்தோடும் ஆண்-பெண் சமத்துவத்தோடும் பார்க்க வேண்டும். பெண்களுக்குச் சடங்குகள் வேண்டாம்; பாலினச் சமத்துவம்தான் வேண்டும்.
நன்றி: “இந்து தமிழ்திசை”
