பிரிட்டனில் சமீபத்தில் நடைபெற்ற Montane Winter Spine Challenger South ஓட்டப் பந்தயத்தில் சாரா போர்ட்டர் கலந்துகொண்டார். இந்தப் பந்தயத்தின் மூலம் ஆப்கானிஸ்தான் பெண் குழந்தைகளின் கல்விக்காக நிதி திரட்டுவதே சாராவின் நோக்கம். இந்தப் பந்தயத்தில் ஓடுபவர்களின் வழித்தடத்தை (Route) மற்றவர்களால் ஜிபிஎஸ் மூலம் பார்க்க முடியும். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றாலும் உடனே உதவ முடியும்.
போட்டியில் கலந்துகொண்ட அனைவரின் வழித்தடங்களையும் மற்றவர்களால் பார்க்க முடிந்தது. ஆனால், சாராவின் வழித்தடத்தை மட்டும் பார்க்க முடியவில்லை. ஓட்ட தூரத்தில் மூன்றில் ஒரு பங்கு தொலைவை சாரா கடந்தபோது, பாதுகாப்பு காரணங் களுக்காக அவரைப் போட்டியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆம், ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு உதவும் நோக்கத்துடன் ஓடிக்கொண்டிருந்த சாராவின் உயிருக்கு அச்சுறுத்தல் வந்திருந்தது. அதனால்தான் அவர் ஓடும் வழித்தடத்தைப் போட்டி ஏற்பாட்டாளர்கள் மறைத்துவிட்டனர்.
“நான் போட்டியிலிருந்து விலக நேரிட்டது குறித்து மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். என் மூலம் கிடைக்கும் உதவிக்காகக் காத்திருக்கும் பெண்களை ஏமாற்றிவிட்டதாக உணர்கிறேன். பல ஆண்டுகளாகப் போர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் நிதி திரட்டிக் கொடுப்பதைக் கடமையாகச் செய்து வருகிறேன். இந்த முறை அந்தப் குழந்தைகள் கல்வியைப் பெற்றுவிடக் கூடாது என்று நினைப்பவர்களின் நோக்கம் நிறைவேறிவிட்டது. என் மீது கொண்ட அக்கறையால்தான் போட்டி ஏற்பாட்டாளர்கள் இந்த முடிவை எடுத்தனர். எனவே, அவர்கள் மீது எனக்கு வருத்தமில்லை. ஒரு வழி அடைத்தால் என்ன, இன்னொரு வழியில் உதவலாம்” என்கிறார் சாரா போர்ட்டர்.
சாரா, ‘இன்ஸ்பயர் மைண்ட்ஸ்’ எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். 2017-இல் ரோபாடிக்ஸ் போட்டியில் பங்கேற்க இயலாத ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு உதவி செய்தவர் அவர். தற்போது ஏற்பட்டுள்ள அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரும் சாரா, பெண்களுக்கு உதவும் பணியைத் தொடர்ந்து செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.
நன்றி: “இந்து தமிழ்திசை”
