சென்னை, ஜன. 26- கிண்டியில் ரூ.417.07 கோடி செலவில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (27.1.2026) அடிக்கல் நாட்டுகிறார்.
இதற்கான பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (25.1.2026) ஆய்வு செய்தார். சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
கிங் இன்ஸ்டிடியூட் வளாகத் தில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதே மருத்துவமனை வளாகத்தில் பிரத்யேகமாக வயது மூத்தவர்களுக்கான தேசிய முதியோர் நல மருத்துவமனை செயல்படுகிறது.
இந்த வளாகத்தில் குழந்தைகளுக் கான உலகத்தரம் வாய்ந்த உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் ரூ.417.07 கோடியில் அமைய உள்ளது.
இதற்கு நாளை 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். மருத்துவ மனை 6 தளங்களைக் கொண்டதாக இருக்கும்.
மொத்தம் 4,63,544 சதுர அடி பரப்பளவில் மருத்துவமனை 6.5 ஏக்கர் பரப்பில் அமைகிறது. இந்த மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. 18 மாதத்துக்குள் மருத்துவ மனை கட்டி முடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் ரூ.417 கோடியில் குழந்தைகள் உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்
Leave a Comment
