
மருத்துவர் நா.மோகன்தாஸ்
(இந்திய மருத்துவ சங்க
தமிழ்நாடு மாநில மேனாள் தலைவர்)
நுரையீரல் சுவாச மண்டலத்தின் முக்கிய உறுப்பாகும். அவை உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு இரத்தத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. நோய்க் கிருமிகளில் இருந்து நுரையீரலைப் பாதுகாக்கிறது.
மனிதர்களைப் பொறுத்தவரை, பிறந்தது முதல் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்து 20லிருந்து 25 வயதில் அதன் செயல்திறன் வளர்ச்சி முழுமையடைகிறது. அதன் பிறகு அதனுடைய செயல்திறன் படிப்படியாக இயற்கையாகவே குறையத் துவங்குகிறது. இதற்கிடையே நுரையீரலுக்குச் சரியான மூச்சுப் பயிற்சி கொடுக்காமலும், புகைப் பிடிப்பதனாலும் நாமே நம்முடைய நுரையீரல் செயல்திறனை வேகமாக குறைத்து வருகிறோம்.
கேள்வி: பொதுவான நுரையீரல் நோய்கள் என்ன?
பதில்: ஆஸ்துமா (Asthma), நிமோனியா (Pneumonia), காசநோய் (Tuberculosis-TB), நுரையீரல் பைப்ரோஸிஸ் (Pulmonary Fibrosis), நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer), நுரையீரல் வீக்கம் (Pulmonary Edema).
ஆஸ்துமா
ஈளை நோய் அல்லது இழுப்பு நோய் என்று சொல்லப்படுகின்ற இந்த ஆஸ்துமா சிறு குழந்தையிலிருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இது மூச்சு விடுவதில் மிகப் பெரிய பாதிப்பினையும், சிரமத்தினையும் உண்டாக்கக் கூடியது.
இளம் வயதில் துவங்கிய ஆஸ்துமா வயது முதிர்வில் அதிக பாதிப்பினை ஏற்படுத்துவது ஒரு வகையாகவும் நுரையீரலின் செயல் திறன் குறைவினால் மூச்சு விடுவதில் பாதிப்பினை ஏற்படுத்துவது மற்றொரு வகையாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மூச்சுக் குழாய்களில் ஏற்படும் நோய்க் கிருமிகளின் தாக்குதல். தூசி, புகை. காற்றிலுள்ள ஒவ்வாப் பொருள்கள். ஒவ்வாத மாத்திரைகள். வயது முதிர்வினால் சுவாசக் குழாய்களில் மாற்றங்கள். ஒவ்வாதப் பொருட்கள் வெளியேற்றப்படாமல் தங்கி பாதிப்பினை ஏற்படுத்துவது. நுரையீரல் மற்றும் சிறிய மூச்சுக் குழாய்கள் சுருங்குவது என்று இப்படியான பல்வேறு காரணங்களைச் சொல்லலாம்.
மூச்சுத் திணறலுடன் சிகிச்சைக்கு வரும்போது அவர்களை அதிக கவனத்துடன் கையாள வேண்டும். ஏனெனில் மூச்சுத் திணறல், இதய பலவீனத்தால் உண்டானதா? முன்பே ஆஸ்து மாவினால் பாதிக்கப்பட்டவரா? உணவு உட்கொள்ளும்போது உணவு நுரையீரல் பாதையில் அடைப்பை ஏற்படுத்தியுள்ளதா? வயதானவர்கள் பொருத்தியிருக்கும் செயற்கைப் பல் கழன்று உணவுக் குழாயில் சிக்கியதால் ஏற்பட்டதா? என்பதைக் கவனிக்க வேண்டும். அதுபோன்றே உடன் வருபவர்களும் மருத்துவரிடம் முழு விவரத்தினையும் மறக்காமல் தெரிவிக்க வேண்டும்.
வயதானவர்களுக்கு இருமல் இரவு நேரங்களில் அதிகமாக இருக்கும். புகை, தூசி போன்றவை மேலும் மூச்சுத் திணறலை தீவிரமாக்கி உடனடியாக சளியினை வரவழைத்துவிடும். முறையான சிகிச்சை பெறத் தவறினால், உடலில் வறட்சி, இருமும்போது மயக்கம், வயது முதிர்வின் காரணமாக பலவீனப்பட்டுள்ள நுரையிரல் மேலும் சிதைவடைவதற்கான வாய்ப்பு.
நிமோதோராக்ஸ் என்று சொல்லப்படுகின்ற காற்று நுரையீரலை விட்டு நுரையீரல் உறைக்குள் செல்கின்ற நிலை போன்றவை ஏற்படும். இந்நிலையில் உடனடியாக இரத்தம், சளியினை சோதனை செய்து மார்பகக் கதிரியக்கப் படம் எடுத்து சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும்.
தான் இருக்கும் இடத்தையும் சுற்றுப்புறச் சூழலையும் புகை, தூசியில்லாமல் தூய்மையாக வைத்துக் கொண்டால் ஆஸ்துமா இன்னல் தொடராமல், வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மெத்தை, படுக்கை, தலையணை போன்றவற்றில் தூசி படியாமல், தூசியில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறிய, எளிமையான மூச்சுப் பயிற்சியில் ஈடுபடலாம். புகைப் பிடிப்பதை அறவே விட்டொழிக்க வேண்டும்.
மூச்சுக் கோளாறு ஒவ்வாமை நிமோனியா
வயதானவர்களை அதிகமாகப் பாதிக்கக் கூடிய நோயாகும். நுரையீரலின் ஒரு பக்கமோ அது அல்லது இரண்டு பக்கங்களுமோ வீங்கி பாதிக்கப்பட்டு உயிருக்கே உலை வைக்கக் கூடிய நோயாகும்.
வயது முதிர்ந்தவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுவதாலும்.
நுரையீரலின் செயல்திறனிலும் அதன் அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்படுவதாலும் அடிக்கடி சளி பிடிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டு விடுகின்றது.
மருத்துவமனைகளில் இருக்கும்போது மற்ற பிற மருத்துவப் பயனாளிகளிடமிருந்தும், பார்க்க வருகின்ற உறவினர்கள், நண்பர்களின் மூலமும் பரவுகின்ற நுண்கிருமிகளின் தாக்கத்தாலும் இது ஏற்படக் கூடும்.
வயதானவர்கள் இருமி சளியினை வெளியே எடுப்பது மிகவும் சிரமமான காரியம். அவர்களுக்கு நெஞ்சு பயிற்சியின் வழியே சளியை வெளியே எடுத்து சோதிக்க வேண்டும் அல்லது நுரையீரல் அகநோக்கிக் கருவியின் மூலம் நுரையீரலை சோதித்து சளியினை எடுத்து அவர்களை தாக்கியிருப்பது காசநோய்க் கிருமிகளா? அல்லது காளான் வகை நோய்க் கிருமிகளா? அல்லது புற்றுநோய்க் கிருமிகளின் தாக்கத்தாலா? என்று கண்டறிந்து சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும்.
நீண்டகாலமாக புகைப்பிடிக்கின்ற பழக்கமும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவும் நுரையீரலில் ஏற்படுகின்ற மாற்றங்களும் முக்கிய காரணங்களாகும்.
நல்ல முறையான சிகிச்சையினை மேற்கொள்வதுடன் ஆரோக்கியமான உணவும், எளிய மூச்சுப் பயிற்சிகளும், சுற்றுச் சூழல் தூய்மையினைக் கடைப்பிடித்தால் முதுமையிலும் நுரையீரலைக் காத்து இளமையுடன் வாழலாம்.
வயது முதிர்வில்
வியாதிகளைத் தவிர்ப்பது எப்படி?
வியாதிகளைத் தவிர்ப்பது எப்படி?
இரத்தக் கொதிப்பினை அல்லது இரத்த அழுத்தத்தினை சீராக நிலையான அளவில் வைத்திருக்க வேண்டும்.
இரத்தக் கொதிப்பிற்கான மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்படி தொடர்ந்து சாப்பிட வேண்டும். புகைப் பிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது.
உடல் எடையினை வயதுக்கும் உயரத்திற்கும் ஏற்றாற்போல வைத்துக்கொள்ள வேண்டும்.
அதிக கொழுப்புள்ள பொருட்களைத் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி மிக மிக அவசியம். அதிக உப்பு, அதிக புகைந்த உணவினைத் தவிர்க்க வேண்டும்.
