சென்னை, ஜன. 25: தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலாத் தலங்களான மாமல்லபுரம், கொடைக்கானலில் ரோப் கார் சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய தனியார் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்து வது குறித்து பரிசீலிக்கப் பட்டு வருகிறது. இத்திட்டம் செயல்படுத்த முடியாத தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களான உதகை, கொடைக்கானல், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் ரோப் கார் சேவையைத் தொடங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் தொடக்கமாக நீலகிரி மாவட்டம், உதகையில் ரோப் கார் சேவையை செயல்படுத்து வதற்கான ஆலோசனைகளை பெறுவதற்கு தனியார் நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் செய் துள்ளது. அந்த நிறுவனத்தின் அறிக்கை 3 மாதங்களில் கிடைக்கும். அதன்பிறகு ரோப்கார் திட்டத்துக்கான, விரிவான திட்ட அறிக்கை தயா ரிக்கப்படும்.
இதேபோல, கொடைக்கானல், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ரோப் கார் சேவையைக் கொண்டுவர மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய தனியார் நிறுவனத்துடன் விரைவில் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக திட்ட அதிகாரி அர்ச்சுனன் தெரிவித்தார்.
விவசாய தொழிலாளர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பேரவைத் தீர்மானம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
சென்னை, ஜன. 25– இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
“இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் 2004 ஆம் ஆண்டில் அமைந்த அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஒன்றிய அரசு, நாடு முழுவதும் உள்ள உடல் உழைப்பு மற்றும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறும் சட்டபூர்வ உரிமை அளிக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் நிறைவேற்றியது.
இந்த சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 14 கோடி குடும்பங்களும், 24 கோடி தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 10 கோடி சமூக சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை 5 ஆயிரம் கோடி மனித வேலை நாட்கள், வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலம் வறுமை நிலை தணிந்து, குறைந்தபட்ச ஊதியம் உயர்ந்துள்ளதுடன், வேலை தேடி புலம் பெயர்ந்து செல்லும் அவல நிலை தடுக்கப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. உரிமை அடிப்படையிலான சட்டத்தை நீக்கி விட்டு, ஒன்றிய அரசை சார்ந்து வாழும் பயனாளர்களாக மாற்றும் விபி ஜிராம்ஜி திட்டம் நடைமுறை பயனற்றது என்பதால் நாடு முழுவதும் ஊரகத் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் 23.01.2026 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இந்தத் தீர்மானத்தை ஏற்று, விபி ஜிராம்ஜி திட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மீண்டும் செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்ட மசோதா சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது
சென்னை, ஜன. 25– கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகத்தைச் சீரமைக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும், பதிவாளருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வழிவகை செய்யும் சட்டமசோதா கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருப்பி அனுப்பினார். இந்த மசோதா நேற்று (24.1.2026) சட்டசபையில் மறு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை ஆளுநருக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து பேசினார்.
இதை தொடர்ந்து பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, மார்க்சிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, ம.தி.மு.க. சதன் திருமலைக் குமார், ம.ம.க. ஜவாஹிருல்லா ஆகியோர் பேசினார்கள்.
அப்போது குறுக்கிட்டு பேசிய பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ஆளுநர் உரையாற்ற வந்தபோது மைக்கை யாரும் ஆப் செய்யவில்லை. பேரவைத் தலைவர் பேசத் தொடங்கியதும் மற்ற மைக்குகள் தானாக ஆப் ஆகி விடும் வகையில் உள்ளது.
எனவே யாரும் ஆளுநர் மைக்கை ஆப் செய்யவில்லை. அவர் உரையை வாசித்து இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆளுநர் உரையை வாசிக்காமல் பேச முயன்ற காரணத்தால் பேரவைத் தலைவராக பேசினேன். அப்போது அனைத்து மைக்குகளும் ஆப் ஆகிவிடும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன் நாம் எவ்வளவு கண்ணியமாக, நாகரிகமாக நடந்து கொண்டாலும் ஆளுநர் மாறுவதாக இல்லை. சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை கண்டிக்கிறேன் என்று தெரிவித்தார்.
இறுதியாக பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் (ஓ.பி.எஸ்.ஆதரவாளர்) அய்யப்பன் பேசுகையில், ஆளும் கட்சி தயார் செய்து அளிக்கும் அறிக்கையை ஆளுநர் வாசிப்பது தான் மரபு. ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்றது கண்டத்திற்குரியது. எனவே ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களின் சட்ட மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
