கண்டதும்… கேட்டதும்… அவருக்கு வயது 93 அன்று!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

”இதுதான் ஆர்.எஸ்.எஸ். – இதுதான் பா.ஜ.க. ஆட்சி?; இதுதான் திராவிடம் – இதுதான் திராவிட மாடல் ஆட்சி!” என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று பேசப் போவதாக, 04.10.2025 அன்று மறைமலை நகரில் நடைபெற்ற, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் கழகத் தலைவர் அறிவித்தார். சொல்லும் செயலும் ஒன்றென்று இருக்கும் அவர், அறிவித்ததோடு நிற்காமல், தமிழ்நாடு முழுவதும் பேசிவருகிறார். பொதுவாக கழகத் தலைவர் வாய்ச்சொல்லில் சொன்னாலே மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இருந்தாலும், புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு தான் சொல்லுகின்ற கருத்துக்கு ஆதாரமாக படித்துக் காட்டுவது அவருடைய வழமை அல்லவா? அது மக்களிடம் ஏற்படுத்துகின்ற தாக்கத்தைப் பற்றி சொல்ல வேண்டும். பொதுவாக யாராக இருந்தாலும் ஒரு விசயத்தில் கருத்துச் சொன்னால், அது அவருடைய கருத்து என்கிற அளவில் அது சுருக்கப்பட்டு விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உடனடியாக ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், புத்தகத்தில் இருப்பது பேசுபவரின் கருத்தல்ல. அதுவும் ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்ற புத்தகங்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள் எழுதியதுதான். அது திராவிட இயக்கக் கருத்துகளுடன் ஒத்துப் போவதாகவும், திராவிடர் இயக்கக் கருத்துக்கு ஆதாரமாகவும் இருப்பதால், சொல்லப்படுகின்ற கருத்து மேலும் வலிமை பெறுகிறது. அதன் மீது அக்மார்க் முத்திரை குத்தியதைப் போன்ற உணர்வு கேட்பாளர்களுக்கு ஏற்படுகிறது. அதை மறுத்து வேறு எவர் சொன்னாலும் அதை ஏற்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இந்த உத்தி ஆசிரியருக்கு இயல்பாகவே பொருந்திப் போவதால், அவர் பேசுகின்ற கருத்துகள் சொல்லினும் வலிமை பெற்று பசுமரத்தாணி போல் மக்கள் புத்தியில் பதிந்துவிடுகின்றன. இது பெரியார் கடைபிடித்த உத்திதானே! அதனால் தானே, ’இது சொந்த புத்தி அல்ல, பெரியார் தந்த புத்தி’ என்றும் சொல்லி வருகிறார்.

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

இன்னும் ஒரு முக்கிய கருத்து, 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் மக்கள் நலனில் அக்கறை காட்டி, பல்வேறு சமூக நீதி செயல் திட்டங்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைய வைத்த பண்பாட்டு அமைப்பின், மிக மூத்த தலைவர் சொல்கிறார் என்பதும் மக்கள் ஏற்புக்கு முக்கியமான காரணம் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றுதான். ஆங்கிலத்தில் BRAND என்கிறார்கள் அல்லவா? திராவிடர் கழகத்தின் தலைவர்; விடுதலையின் ஆசிரியர்; கி.வீரமணி என்ற பெயரும், PERIYAR என்ற BRAND இன் கொள்கைத் தொடர்ச்சி தானே! இது தொட்டுத் தொடரும் திராவிடர் இயக்கக் கொள்கைப் பாரம்பரியம் அல்லவா? அசைக்க முடியாத மக்களின் நம்பிக்கை அல்லவா இது? இதற்கு ஈடு இணை உண்டா? ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர், ‘தி.மு.க.வை வேருடன் வீழ்த்திவிடுவோம் என்று பேசியதை சுட்டிக்காட்டும் போது, “முதலில் திராவிடர் இயக்கத்தின் வேர் எங்கே இருக்கிறது என்று தெரியுமா அவருக்கு?” என்று சொல்லிவிட்டு, “திராவிடர் இயக்கத்தின் வேர்கள் மக்கள் மனங்களில் இருக்கிறது. அதை எப்படி வீழ்த்துவது?” என்று மக்களின் ஏகோபித்த கைதட்டல்களுக்கிடையே சொன்னார். திராவிடர் இயக்கத்தை ’கற்கோட்டை’யுடன் ஒப்பிட்டுப் பேசுவார். மேடையில் அவர் வீற்றிருக்கும் போது பொதுமக்கள் சிலர், “இந்த வயசுலயும் எப்படி பேசறாரு பார்த்தியா?” என்பதும், “அடேயப்பா… எவ்வளவு ஞாபக சக்தி, பாத்தியா…” என்பதும், ”இப்பல்லாம் யாரு இப்படிப் பேசறாங்க…’ என்று மெச்சிக் கொண்டு செல்வதும், எப்படியாவது ஒரு துண்டை அவருக்கு போட்டுவிட்டு, படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சிப்பதும், ஆசிரியர் அவர்களும் மக்கள் சங்கடப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, 93 வயதையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு முறையும் எழுந்து எழுந்து அமர்வதும், நாம் மேலே குறிப்பிட்டுள்ள கருத் துக்கு வலிமை சேர்ப்பவைதான்! கண் கண்ட சாட்சிதான்!

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

கழகத் தலைவர் இந்த சுற்றுப்பயணத்தில் குறிப்பாக மூன்று புத்தகங்களை பயன்படுத்தி வருகிறார். ஒன்று, புரட்சியாளர் அம்பேத்கர் யாத்துத் தந்த, ”இந்திய அரசியல் சட்டம்”. இரண்டாவது 1919 இல், இராமாநுஜாச்சாரியார் சமஸ்கிருதத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து, சிறீபத்மநாபவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட பிரதியை, அப்படியே ஒளிப்படம் எடுத்து, பதிப்பிக்கப்பட்ட ”அசல் மனுதர்மம்”, மூன்றாவது அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய, ”இந்து மதம் எங்கே போகிறது?” ஆசிரியர் அவர்கள், ஆரியர் வருகை பற்றி குறிப்பிடும் போதெல்லாம், ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய வரிகளையே வாசித்துக் காட்டுவார். அத்துடன், “இது நாங்கள் எழுதியது அல்ல” என்பதையும் தவறாமல் சொல்வார். இதனால் அந்தக் கருத்து கல்லின் மேல் எழுத்தாக மாறிவிடுகிறது. இதுதான் ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லும் போது மனுஸ்மிருதியையும், இதுதான் திராவிடம் என்று சொல்லும் போது, இந்திய அரசியல் சட்டப் புத்தகத்தையும் ஒரே நேரத்தில் இரண்டு கைகளில் எடுத்துக் காட்டி, “இந்த இரண்டுக்கும் இடையில் தான் இப்போது போராட்டம் நடைபெறுகிறது. இதுவொரு தத்துவப் போர். இதை மேலோட்டமான அரசியல் போராகப் பார்க்காதீர்கள்” என்று அறிவுறுத்துவார். கற்றலின் கேட்டலே நன்று! கேட்டலின் பார்த்தலே நன்று! என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது. ஏற்கனவே மனுஸ்மிருதியைப் பற்றியும், இந்திய அரசியல் சட்டம் பற்றியும், திராவிடர் இயக்கங்களின் ஓயாத பரப்புரைகளால் ஓரளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு அவ்விரண்டின் மீதான விழிப்புணர்வு இருப்பதால், ஆசிரியரின் உரை மணிக்கணக்கில் சொல்ல வேண்டியதையும் எளிமையாக்கி விடுகிறது. அத்துடனும் விட்டுவிடாமல், ”மேலோட்டமாக எண்ணிக்கொண்டு, போன முறை இவர்களுக்குப் போட்டோம். ஆகவே, இந்த முறை அவர்களுக்குப் போடலாம் என்று கருதினீர்கள் என்றால், அது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்தது போலாகிவிடும்” என்று சொல்லி, வரவிருப்பது சாதாரண ஆபத்து அல்ல என்பதையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிடுவார். எப்படியாவது மக்கள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் ஜூம்லாக்களுக்கு ஏமாந்துவிடக்கூடாது என்ற அக்கறை அவருடைய உரை நெடு….கிலும் இழையோடும்.

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அதாவது, ”நீங்கள் தனிமனிதன் என்ற ஒரு மு.க.ஸ்டாலினுக்கு வாக்களிக்கிறோம் என்றுகூட எண்ண வேண்டாம். நாங்கள் வேண்டுகோள் வைக்கிறோம் என்பதற்காகவும் வாக்களிக்க வேண்டாம். உங்கள் சந்ததிகளின் எதிர்காலத்துக்காக வாக்களியுங்கள்! அவர்களின் நல்வாழ்க்கைக்கு வாக்களியுங்கள்! அவர்களுடைய சுய மரியாதைக்காக வாக்களியுங்கள்! அவர்களுடைய மான வாழ்வுக்காக வாக்களியுங்கள்! அவர்களுடைய கல்வி, வேலை வாய்ப்புகளுக்காக வாக்களியுங்கள்!” என்று பேசி, தனி மனிதர்களை முன்னிறுத்தாமல், திராவிடத் தத்துவத்தை முன்னிறுத்தி வருகிறார். அதன் காரணமாக இந்த பரப்புரைப் பயணத் தொடருக்கான தலைப்பு என்பது மக்கள் மனதில் ஆழமாக பதிந்து, திராவிடம் நமக்கு என்ன செய்யும்? ஆர்.எஸ்.எஸ். நமக்கு என்ன செய்யும்? என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக புரிய வைத்துவிட்டது. கடந்த தேர்தலில், “திராவிடம் வெல்லும் அதை வரலாறு சொல்லும்” என்ற தலைப்பை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைத்தார். இம்முறை, “இதுதான் ஆர்.எஸ்.எஸ். – இதுதான் பா.ஜ.க; இதுதான் திராவிடம் – இதுதான் திராவிட மாடல் அரசு” என்பதை நாடு முழுவதும் சொல்லிச் சொல்லி, மற்றவர்களையும் திரும்பத் திரும்ப சொல்ல வைத்து, மக்கள் மனங்களில் விதையாக விழ வைத்துவிட்டார்.

பெரும்பாலும் பயணம் தரை மார்க்கமாகவே நடப்பதால் போக்குவரத்து இடையூறுகளால் சில சமயம் கிடைப்பது அரை மணி நேரம் என்றாலும், ஒரு மணி நேரம் என்றாலும் சுருக்கமாகவும், விரிவாகவும் கிடைக்கும் வாய்ப்புகளுக்கேற்ப பேசி, மக்களை வரப்போகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தயார்படுத்தி வருகிறார். நாளொன்றுக்கு இரண்டு இடங்களில் பேசுகிறார். இடையில் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு மற்றும் எதிர்பாராத நிகழ்ச்சிகள் என்று எல்லாவற்றுக்கும் ஈடுகொடுத்து, கொட்டும் மழை, கடும் பனி ஆகிய இயற்கைச் சூழலிலும், பல்வேறு உடல்நலக் குறைவிலும் இப்படி ஓய்வின்றி சுற்றிச் சுழன்று வருகிறார். தற்போது கூட தொண்டை தொற்று காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அதையும், ”தொண்டைதான் சரியாக இல்லை. ஆனால், தொண்டு சரியாகவே இருக்கிறது. பேசவே முடியவில்லை என்றாலும் சைகை மூலமாகவாவது சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன்” என்று நகைச்சுவை கலந்து பேசி தோழர்களையும், மக்களையும் உற்சாகப்படுத்தி விடுகிறார். அவர் எப்போது எழுந்திருக்கிறார். எப்போது படுக்கிறார் என்பதை கணிக்கவே முடியாது. தேர்தல் அரசியலில் ஈடுபடுகிறவர்களுக்குக் கூட இவ்வளவு அக்கறை இருப்பதற்கு வா…ய்ப்பே இல்லை.

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

ஒன்று மட்டும் நமக்குப் புரிகிறது. அவருடைய உடல் ஒத்துழைக்க மறுத்தாலும் உள்ளம் ஒத்துழைப்பதால் இதையெல்லாம் அவரால் செய்ய முடிகிறது. ஈடு இணை இல்லாத; கைம்மாறு கருதாத இந்த உழைப்புக்கு அவர் கொடுக்கும் விளக்கம் அதைவிட சிறப்பு. அதாவது, ”தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் மற்ற கட்சிகளை விட எங்களுக்குத்தான் அதிக தொகுதிகளை ஒதுக்கித் தருகிறார்கள். எவ்வளவு என்றால்? 234 தொகுதிகளும் எங்களுக்குத் தான்!” என்று நகைச்சுவை தெறிக்கப் பேசி வருகிறார். மக்களும் இந்த விளக்கம் தருகிற போதெல்லாம் ”குபீரென்று” என்று சிரித்து விடுவது வழமை தான். தேர்தல் தேதி அறிவித்த பின்னரும் இதைவிட அதிகமாக சுற்றிச் சுழன்று பரப்புரை செய்யப்போகிறவர் யாரென்றால், ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் பதவியைக் கூட விரும்பாதவர். அவருக்குத் தேவை, தமிழ்நாட்டு மக்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும்! கடந்த 100 ஆண்டுகளில் நீதிக்கட்சித் தலைவர்கள், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகியோர் இதுவரை பெற்றுத்தந்த உரிமைகளும் பறிபோய் விடக்கூடாதே என்ற கவலைதான் அவரை ஒவ்வொரு நாளும் வாட்டுகிறது. இதற்கு ஒரே தீர்வு இறையாண்மை பெற்ற மக்கள் மன்றம் செல்வதுதான். அவர் மனதில் இருப் பதை எல்லாம் அவர்கள் முன் கொட்டித் தீர்த்து விடுவதுதான். அதைத்தான் நாள்தோறும் செய்து கொண்டிருக்கிறார். அதற்காக தன்னை எப்படி வேண்டுமானாலும் அவதிக்குள்ளாக்கிக் கொள்ளலாம் என்றே தனது சக்திக்கும் மீறி உழைத்து வருகிறார். இந்த செயல் திட்டத்தை அவருடைய 93 வயது உடல் மறுத்திருக்கலாம். ஆனால், 39 வயது உள்ளம், அவருடைய உடலையும் சமாதானப்படுத்தி, இப்படி யெல்லாம் வேலை வாங்கி வருகிறது. இந்த உழைப்பு ஒரு போ….தும் வீணாகாது! நல்ல விதைகள்; நல்ல விளை நிலங்கள்! நல்ல விளைச்சலைத் தந்தே தீரும்! அதை 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பார்க்கலாம்.

– உடுமலை வடிவேல்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *