ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்!

14 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

2,200 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்!
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் கூடுதலாக ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம்!
ரூ.35 ஆயிரத்து 500 கோடியில் ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்படும்!
அரசுப் பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்புச் சலுகை!!

சென்னை, ஜன.24 தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது நடைபெற்ற விவாத்திற்குப் பதில் அளித்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் ரூ.25 ஆயிரத்து 500 கோடியில், ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்படும்; 2,200 கிலோ மீட்டர் கிராமப்புறச் சாலைகள் மேம்படுத்தப்படும்; ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு என உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று (24.1.2026) நடைபெற்ற விவாதத்திற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அளித்த பதி லுரை வருமாறு:

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக வெற்றி பெற்றபோது, ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு பக்கம் எனக்குக் கவலையும் இருந்தது, அதை நான் மறைக்க விரும்பவில்லை.  இந்தப் பொறுப்பை நான் எப்படிச் செய்யப் போகிறேன்? வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? மக்கள் விரும்பக்கூடிய வகையில் ஆட்சி நடத்த முடியுமா? மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலைதான் எனக்கு இருந்தது.

முந்தைய பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து வகையிலும், அனைத்துத் துறை களிலும் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்து, மோசமான நிலையை அடைந்திருந்தது.  அதை சரி செய்தாக வேண்டும். அடுத்து, நமக்கு மேலிருக்கக்கூடிய ஒன்றிய அரசு அது ஒத்துழைக்காத, ஒரு ஓரவஞ்சனை அரசாக இருந்தது. இந்த இரண்டு நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டுமென்பதுதான் எனது கவலைக்கு மிக முக்கியமான காரணங்கள். இடியாப்பச் சிக்கல் என்று சொல்வார்களே, அப்படியான சூழலில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். அதனால்தான் கவலை கொண்டவனாக நான் இருந்தேன்.

என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம்
மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்!

ஆனால், இப்போது 5 ஆண்டுகள் கடந்த நிலையில் நான் சொல்றேன்; நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.  இன்னும் சொல்லவேண்டுமென்றால் மிக, மிக, மகிழ்ச்சி யாக இருக்கின்றேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். என்னுடைய இலக்கில் நான் வென்றுவிட்டேன்.  திராவிட மாடல் அரசின் சாதனைகளால் தமிழ்நாடு தலைநிமிர்ந்துவிட்டது. மக்கள் மனநிறைவு அடையக்கூடிய வகையில் ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கு தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட அதிகம் வளர்ந்திருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டை அண்ணாந்து பார்க்கின்றார்கள். அதற்கு காரணம் நம்முடைய திட்டங்கள், நாம் செய்து கொண்டிருக்கக்கூடிய சாத னைகள், இவையெல்லாம்தான் என் மகிழ்ச்சிக்குக் காரணம்.

அடுத்து, இன்னும் பெருமையுடன், கான்ஃபிடன்டா சொல்கிறேன். நாங்கள் அமைக்கப் போகும் ‘திராவிட மாடல் 2.0 ஆட்சி’, எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும். ஆட்சி செய்திருக்கக்கூடிய அய்ந்தாண்டுகள், வரப்போகும் ஒளிமயமான எதிர்காலத்தை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

ஆறாவது முறை ஆட்சியமைந்தபோது, அது விடியல் ஆட்சியாக அமையுமென்று சொன்னோம். அந்த விடியலை ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.  கோடிக்கணக்கான மக்கள் மனங்களிலும், முகங்களிலும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் நான் பார்க்கின்றேன்.

‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகள்!

இந்த அரசைப் பொறுத்தவரைக்கும், ஒரு சாதனை செய்தால்,

அதை மிஞ்சுவதாக இன்னொரு சாதனை வரும்; அடுத்து அதை விஞ்சுவதாக மற்றொரு சாதனை வரும். இப்படி சாதனைக்கு மேல் சாதனைகளைப் படைப்பதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு.

பேரவைத் தலைவர் அவர்களே, நான் பொறுப்பேற்று, இந்த அரசு பொறுப்பேற்று, இன்றோடு ஆயிரத்து 724 நாட்கள் ஆகிறது. இந்த ஆயிரத்து 724 நாட்களில், 8 ஆயிரத்து 685 நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். 15 ஆயிரத்து 117 அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு இருக்கிறேன்; சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அதி லேயும், 71 மாவட்ட மாபெரும் அரசு நலத்திட்ட விழாக்களில் பங்கேற்று, 44 இலட்சத்து 44 ஆயிரத்து 721 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன். அதுமட்டுமின்றி, அடிக்கல் நாட்டியது, முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தது என எல்லாவற்றையும் புள்ளிவிவரத்தோடு என்னால் சொல்ல முடியும்.

கடந்த 5 ஆண்டுகளில், இந்த முத்துவேல் கரு ணாநிதி ஸ்டாலின் என்ன செய்தான் என்றால், ஒவ்வொரு நாளும் மக்களுக்காக வாழ்ந்தான்! மக்க ளுக்காக திட்டங்களைத் தீட்டினான்! மொத்தமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தான்!  இவையெல்லாம் வெறும் புகழ்ச்சி இல்லை; எல்லாமே உண்மை!

இதை எதிர்க்கட்சிகளால் தாங்கிகொள்ள முடியாது என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், தமிழ்நாட்டினுடைய நலனுக்காகச் செயல்பட வேண்டிய ஆளுநர் அவர்கள், தமிழ்நாட்டுக்கு எதிராக, மக்களுக்காகப் பாடுபடும் நமக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவதுதான் வேதனையா இருக்கிறது. ஆளுநர் அவர்கள், தான் படிக்க வேண்டிய உரையைப் படிக்காமல் சென்றது வேடிக்கையாக இருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமென்றால், அவர் வகிக்கின்ற பதவியை, அவரே அவமானப்படுத்துகிறார்.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே, ஒரு பொறுப்புள்ள பதவியில் இருந்துகொண்டு  கேவலப்படுத்துற செயலாக இருக்கிறது. அதிலேயும், கடந்த மூன்று ஆண்டுகளாக நம்முடைய ஆளுநர் அவர்கள் ஒரே காரணத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி, மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு தயாரித்து கொடுத்த உரையைப் படிக்காமல் வெளியேறுவது, மக்களாட்சிக்கு விடப்பட்ட சவாலாகவே இந்தப் பேரவை கருத வேண்டியுள்ளது.

கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இது. கோடிக்கணக்கான மக்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அரசு இது. ஆளுநர் உரை தொடங்கும்போது ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடுவதும் – முடிவுறும்போது ‘நாட்டுப்பண்’ பாடுவதும்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தினுடைய மரபு. முதலிலேயே ‘நாட்டுப்பண்’ பாடவில்லை என்பதையே திரும்பத் திரும்ப குற்றச்சாட்டாக அவர் சொல்லிக்கொண்டு  வருகிறார். இந்த நாட்டின் மீதும், நாட்டுப்பண் மீதும் அளவற்ற பெரும் மதிப்பை, மரியாதையைக் கொண்டுள்ளவர்கள் நாங்கள். தேசிய ஒருமைப்பாட்டிலேயும், நாட்டுப்பற்றிலேயும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை நாங்கள் என்பதை, இந்தப் பேரவை உறுப்பினர்கள் சார்பாக ஆளுநர் அவர்களுக்கு அழுத்தந்திருத்தமாக நான் சொல்லிக்கொள்ள விரும்புறேன். யாரும் எங்களுக்கு தேசபக்தி குறித்துப் பாடம் எடுக்கின்ற நிலைமையில நாங்களும் இல்லை; தேசபக்தி பாடம் எடுக்கும் அளவுக்கு

இந்த தேசத்துக்காக அவர்கள் போராடியவர்களும் இல்லை. ஜனநாயக தேசத்தின் அரசமைப்பு மாண்பை, எதேச்சாதிகாரத் தன்மையுடன் மாற்ற நினைப்பவர்கள் தான், இன்றைய காலக்கட்டத்தில் தேச விரோதிகள். அவர்கள் யாரென்று நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

சோதனைகள் எனக்குப் புதிதல்ல; சோதனைகளை வென்று வளர்ந்தவன் நான்!

பேரவைத் தலைவர் அவர்களே, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை, நம்முடைய எழும்பூர் தொகுதி உறுப்பினர் திரு.பரந்தாமன் அவர்கள் தொடங்கி, நிறைவாக மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள் வரை பேசியிருக்கிறார்கள். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்துப் பேச வேண்டிய நான் இன்றைக்கு ஆளுநருக்கு விளக்கம் அளித்துப் பேசும் நிலையில் இருக்கிறேன். இது பேரறிஞர் பெருந்தகை அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், இன்னும் சொல்லப் போனால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், அம்மையார் ஜெயலலிதா அவர்களும் எதிர்கொள்ளாத நெருக்கடி இது. அவர்கள் காலத்தில் இருந்த ஆளுநர்கள்கூட இப்படி இல்லை. முரண்பாடுகள் இதயத்தில் இருந்தாலும், அதை ரணமாக்கும் வகையில் செயல்பட்டதில்லை. அந்த வகையில், அளவுக்கு அதிகமான சோதனைகளை எதிர்கொண்டவனாக நான் நின்று கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரைக்கும், சோதனைகள் எனக்குப் புதிதல்ல; சோதனைகளை வென்று வளர்ந்தவன் நான்.  என்னைச் சீண்டிப் பார்ப்பவர்கள், மனதிற்குள் மகிழ்ச்சி அடையலாமே தவிர, அது என்னை எதுவும் செய்யாது.

நாட்டிலேயே முதன்மை மாநிலம்!

ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில், இந்தியாவிலேயே தமிழ்நாடு 80.89 புள்ளிகளுடன் முதலிடம். மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் தேசிய அளவில் 41.23 விழுக்காடு பெற்று நாட்டிலேயே முதன்மை மாநிலம்.

தோல் பொருட்கள் மற்றும் ஜவுளி ஆகிய பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மை மாநிலம். ஒட்டுமொத்த நாட்டின் காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு 38 விழுக்காடு பங்கு வகிக்கிறது.

பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த, 20 ராம்சார் தளங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. எண்ணெய் வித்துகள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தித் திறனில் முதலிடம். மக்காச்சோள உற்பத்தித் திறனில் இரண்டாம் இடம்.

சட்டம்-ஒழுங்கைப் பொறுத்தவரைக்கும், கடந்தகால அதிமுக ஆட்சியோடு ஒப்பிடுகையில், கொலைகள் – ஆதாயக் கொலைகள் – வழிப்பறித்  திருட்டு – பாலியல் வன்கொடுமைகள் என்று எல்லாமே பெருமளவில் குறைந்திருப்பதை புள்ளிவிவரங்கள் உறுதியாக்குகின்றன.

அதிக அளவு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்த மாநிலமாக இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடம்.

69 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு 2 ஆவது இடத்தில் இருக்கிறது.

நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வரும்போது 73 ஆக இருந்த பேறுகால இறப்பு விகிதத்தை 40-ஆகவும், குழந்தை இறப்பு விகிதத்தை 10.4-லிருந்து 6.9-ஆகக் குறைச்சிருக்கோம்.

மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பாக சேவை புரிந்த முதல் மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு ஒன்றிய அரசால் தமிழ்நாடு விருது பெற்றிருக்கிறது.

சிறந்த நீர் மேலாண்மைக்காக தேசிய அளவில் மூன்றாம் இடம்.

காசநோயை ஒழிக்க தமிழ்நாடு எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டி தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

காகிதம் இல்லா சட்டமன்றத் திட்டத்தினை மிகச் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்தியதற்காக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் விருது வழங்கி இருக்கிறது.

உணவு பதப்படுத்தும் குறு, சிறு நிறுவனங்களின் சிறந்த செயல்திறனுக்காக தமிழ்நாட்டுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.

மாநில கூட்டுறவு வங்கியின் சிறந்த சேவைக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே விருது வழங்கியிருக்கிறார்.

ஒன்றிய அரசிடமிருந்து மட்டும்
தமிழ்நாடு 65-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியிருக்கிறது

இப்படி ஒன்றிய அரசிடமிருந்து மட்டும் தமிழ்நாடு 65-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் ஆளுநர் விமர்சிக்கிறார் என்றால் அவருடைய பார்வைதான், பழுதுபட்ட பார்வையாக இருக்கின்றது.

நமது அரசு செய்து கொண்டிருக்கிற திட்டங்களைப் பார்த்து, கேட்டு, அவற்றைத் தங்களுடைய மாநிலங்க ளிலேயும் செயல்படுத்த பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிகாரிகள் வந்து தெரிந்து கொண்டு போகிறார்கள்.   ஏன், நம்முடைய திட்டங்களை ஒன்றிய அரசே “அடாப்ட்” பண்ணி நாடு முழுக்க செயல்படுத்துகிறார்கள். நம்மை விமர்சிக்கின்ற ஆளுநருக்கு, இவையெல்லாம் மட்டும் தெரியாமல் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.   இங்கே மதச்சண்டை இல்லை. சாதிச்சண்டை இல்லை. கும்பல் வன்முறை இல்லை. தொடர் வன்முறை இல்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சி யின் சாதனை.

இந்தச் சாதனைகளின் வரிசையில் மேலும் சில அறிவிப்புகளை வெளியிட விரும்புறேன்.

முதல் அறிவிப்பு:

‘கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்’ கீழ் ஏற்கெனவே 2 இலட்சம் வீடுகள் உருவாகும் நிலையில் மேலும் புதிதாக, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்படும்.

இரண்டாவது அறிவிப்பு:

கிராமப்புறப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குகின்ற ஊரகச் சாலைகளை மேம்படுத்துகிற ‘முதல்வரின் கிராமசாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ், 8 ஆயிரத்து 911 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 ஆயிரத்து 484 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமப்புறச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புதிதாக, ஆயிரத்து 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2,200 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்.

மூன்றாவது அறிவிப்பு:

ஏழை மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பாதுகாக்கும் ‘சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ், ஏற்கனவே 33 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற, திருமணமாகாத பெண்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்’ கீழ் அளித்த விண்ணப்பங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாக ஒரு இலட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.  இதற்கான விழா வரும் 4.2.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த அறிவிப்பு:

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதன்முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான் 2008-ல் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கினார்.  அந்தச் சாதனையின் தொடர்ச்சியாக சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்க ளுக்கான ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும்; பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 200 ரூபாயாகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணி யாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும்; பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 200 ரூபாயும், மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 100 ரூபாயும் வழங்கப்படும்.

மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் மேற்கூறிய பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்குச் செலவினங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இந்த அறிவிப்புகள் மூலம் தற்போதுள்ள சிறப்புக் காலமுறை ஊதியப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களும், இத்தகைய பணியிடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் பயனடைவார்கள்.

அடுத்த அறிவிப்பு:

அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளில் ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை காலமான மே மாதத்தில் ஏற்கெனவே அவர்கள் கோரிய ஊதியம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

அவர்களுடைய அடுத்த முக்கிய கோரிக்கையான நிரந்தரப் பணி நியமனத்தைப் பொறுத்தவரையில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புறேன்.

அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்ப டையாகக் கொண்டு அவர்களுக்குச் சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.

பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த தேர்த லின்போது யாரும் கொடுக்காத வாக்குறுதிகளை நாங்கள் கொடுத்தோம். முடிந்தளவுக்கு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியும் இருக்கின்றோம்.

‘‘உங்களால் நிறைவேற்ற முடியாதென்று’’ சவால் விடப்பட்ட வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றிக்காட்டியிருக்கின்றோம்.

‘‘இவர்கள் செய்யவேமாட்டார்கள்’’ என்று சொல்லப்பட்ட வாக்குறுதிகளையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்.

அனைத்துத் துறைகளிலும் சமச்சீரான வளர்ச்சியை அடைந்திருக்கின்றோம்!

தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் எப்போது வளரும் என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுடைய வாட்டத்தைப் போக்குவதற்கு அனைத்துத் துறைகளிலும் சமச்சீரான வளர்ச்சியை அடைந்திருக்கின்றோம்.

பெரிய நகரங்களுக்கு மட்டும்தான் தொழிற்சாலை களா? பாலங்களா? சாலைகளா? நூலகங்களா? கல்லூ ரிகளா? உள்கட்டமைப்பு வசதிகளா? என்று சலிப்புடன் கேட்டதை மாற்றி, அனைத்துப் பகுதிகளுக்கும், அனைத்து மாவட்டங்களுக்கும் அனைத்தையும் கொண்டு சென்றிருக்கின்றோம்.

இவை அனைத்திலும் சமூகநீதியை, சமநீதியை நிலைநாட்டியிருக்கின்றோம். இவையனைத்தும் என்னால்தான் ஆனதென்று கர்வம் கொள்பவன் அல்ல நான்.  மூத்த அமைச்சர்கள், நம்முடைய துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவையின் பங்களிப்பு இல்லாமல் இதைச் செயல்படுத்தியிருக்க முடியாது. ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கிய இங்கே இருக்கின்ற இத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் சாதனைகள் இல்லை. அதுமட்டுமல்ல, தலைமைச் செயலாளர் தொடங்கி காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகள், அனைத்து நிலைகளிலும் பணியாற்றக்கூடிய ஊழி யர்கள் வரை அனைவரின் பங்களிப்பும் இதில் இருக்கிறது.

தமிழ்நாட்டின் கடைக்கோடி மனிதருக்கும் அனைத்துத் திட்டங்களும் சென்று சேருவதை உறுதி செய்கின்றோம். ‘ஊர் கூடித் தேர் இழுப்பதென்று’ சொல்வார்களே, அதைப்போல அரசின் ஒவ்வொரு அணுவும் மக்களுக்காக செயல்படுவதால்தான் இது சாத்தியமாயிற்று.

எனக்கு உயிரும் உணர்வுமாக இருந்து, என்னை இயக்கிக் கொண்டிருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள்தான். எனக்கு மனவலிமை கொடுப்பதும், அனைத்து வகை யிலும் தோள் கொடுப்பதும் எங்களோட தோழமைக் கட்சிகள்தான்!

ஜனநாயகத்தின் ஒரு பக்கம் ஆளும்கட்சியென்றால் இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகள். மக்கள் மன்றத்தில் தேவையற்ற பல விமர்சனங்களை வைத்தாலும் இந்தச் சட்டமன்றத்தில் சில ஆலோசனைகளையும் வைத்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கனிவான நேரத்தில் கனிவாகவும், கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தும், ஆசிரியராகவே செயல்பட்ட மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்க ளுக்கும், துணைத் தலைவர், பேரவைச் செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, இந்த ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது 17 உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். 5 உறுப்பினர்கள், 58 திருத்தங்களை வழங்கியிருக்கின்றார்கள். இந்த அரசுக்கு உதவுகின்ற வகையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் தெரி வித்திருக்கிறார்கள். அதேபோல, சில கோரிக்கைக ளையும் முன்வைத்திருக்கிறார்கள்.

அவையனைத்தும் அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய ஆலோசனைகளைக் கருத்தில்கொண்டு, அவற்றில் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு உறுதியாக நிறைவேற்றித் தரும்.  எனவே, இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு மாண்புமிகு உறுப்பினர்கள் தங்களுடைய திருத்தங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

‘திராவிட மாடல்’ ஆட்சிதான் தொடர வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்!

பேரவைத் தலைவர் அவர்களே, இந்தப் பேர வைக்கும், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நான் சொல்வது ஒன்றுதான். நான் இந்த அய்ந்தாண்டு காலத்தில் எனக்கும், என் மனச்சாட்சிக்கும் கட்டுப்பட்டு நாள்றுதோறும் திட்டங்களைத் தீட்டி உழைத்தி ருக்கின்றேன். இன்னும் உழைக்கக் காத்திருக்கின்றேன். இந்த 5 ஆண்டுகால உழைப்பையும் வளர்ச்சியையும் பார்த்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் தொடர வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

எனக்கு, என்னைவிட தமிழ்நாட்டு மக்கள் மேல் கூடுதலான நம்பிக்கை இருக்கிறது. உறுதியாகச் சொல்கிறேன்.  நாங்கள்தான் மீண்டும் வருவோம்!  நாங்கள்தான் மீண்டும் வருவோம்! மீண்டும் மீண்டும் வருவோம்!  மீண்டும் வெல்வோம்!  மீண்டும் மீண்டும் வெல்வோம்!

நன்றி! வணக்கம்!

– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *