சென்னை, ஜன. 24– ஏனாத்தூரில் அமைந்துள்ள சிறீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா பல்கலைக்கழகத்தில் புதிய திட்டங்கள் தொடக்க விழா மற்றும் 2026-2027 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்க நிகழ்வு நேற்று (23.1.2026) நடைபெற்றது.
சமஸ்கிருதம்
ஏனாத்தூரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி சிறீ விஜயேந்திர சரஸ்வதி பங்கேற்று மாணவர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார்.
பல்கலைக்கழகத்தின் நவீன வளர்ச்சி மற்றும் இந்திய அறிவு மரபுகளை ஒருங்கிணைக்கும் வகையில் பல முக்கிய திட்டங்கள் தொடங்கப்பட்டன.
சென்னை ‘சாக்ஸா – சங்கரா’ அகாடமியுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவர்களுக்குச் சம்ஸ்கிருதம், பகவத்கீதை மற்றும் இந்திய அறிவியல் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளன. மேலும், காஞ்சியின் கல்விப் பாரம்பரியத்தை மீட்டெடுக்க ‘கடிகாஸ்தானம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, வேத பண்டிதர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
2026-2027 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இந்த ஆண்டு ‘பூஜ்ய காஞ்சி மஹாஸ்வாமியின் கல்வி உதவித்தொகை திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
100 சதவீத உதவித்தொகை
இத்திட்டத்தின் கீழ், பொறியியல் பயிலும் தகுதியுள்ள மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கும் 100 சதவீதம் கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும். 12-ஆம் வகுப்பில் 95 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இதற்குத் தகுதியுடையவர்கள்.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பொறியியல் படிப்புகளில் சிறப்புக் கட்டணச் சலுகையும் அளிக்கப்பட உள்ளது. பெண்களுக்கெனப் பிரத்யேகச் சட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
அய்அய்டி மெட்ராஸ் நிறுவனத்துடன் கல்வி வழிகாட்டுதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் துணைவேந்தர் ஜி.சிறீநிவாசு, துணைத் துணைவேந்தர் ஆர். வசந்தகுமார் மேத்தா உட்படப் பலர் பங்கேற்றனர்.
