சென்னை, ஜன. 24- தொழிலாளர் உரிமைகள் பாதிக்கப்படாமல் புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் தொடர்பான வரைவு விதிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.
சட்டத் தொகுப்பு
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராமச்சந்திரன் பேசும்போது, “ஒன்றிய அரசு தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் 4 சட்டத் தொகுப்புகளை கொண்டு வந்துள்ளது.
அவற்றுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
அதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் பதிலளித்து கூறியதாவது:
ஒன்றிய அரசு 29 தொழிலாளர் நலச்சட்டங்களை ஒன்றிணைத்து 4 சட்டத் தொகுப்புகளாக அறிமுகப்படுத்தியது. அச்சட்டத் தொகுப்புகள் 21.11.2025 முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்தது. அதற்கான வரைவு விதிகளை 30.12.2025 அன்று வெளியிட்டது. தொழிலாளர் நலன்களும், உரிமைகளும் தொழிலாளர் நல வாரியங்களும் பாதிக்கப்படாத வகையில் வரைவு விதிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
உறுப்பினர் ராமச்சந்திரன் மேலும் பேசும்போது, தமிழ்நாடு கேரளம், கருநாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலமாக ஒன்றிய அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது.
11.19 சதவீத
பொருளாதார வளர்ச்சி
தமிழ்நாட்டிற்கான நிதி பங்கீட்டை வழங்குவது இல்லை. ஆனாலும், தமிழ்நாடு கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. அரசு ஊழியர் – ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த ஓய்வூதியத் திட்டத்தில், ஊராட்சி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்களையும் இணைக்க வேண்டும்” என்றார்.
