ஜெயங்கொண்டம், ஜன. 24- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (23.01.2026) அன்று 19ஆம் ஆண்டு விழா மிகக் கோலா கலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழா மாலை சரியாக 5.30 மணி அளவில் மொழி வாழ்த்துடன் இனிதே தொடங்கியது.
பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் அவர்களின் தலை மையில் சிறப்பு விருந்தினராக முதல்வர் எம்.ராஜமூர்த்தி (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெயங்கொண்டம்), பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கி ணைப்பாளர் டி.கிருஷ்ணகுமார், பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ் மற்றும் பள்ளியின் முதல்வர் இரா.கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் சிறப்பு விருந்தினரை வரவேற்று பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கி சிறப்பு செய்தார். வரவேற்பு நடனத்திலிருந்து அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் ரிதம் நன்றாக இருந்தது என மாணவர்களையும் கற்றுத் தந்த ஆசிரியர்களையும் பாராட்டினார்.
தன்னுடைய உரையில் “மாணவர்களுக்கு கல்வியே சமூக மாற்றத்தைக் கொண்டு வரும். கல்வியே உலகை ஆண்டு கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) பற்றி மாணவர்கள் அருமையாக புரிந்து வைத்துள்ளனர் கல்வியை இடையறாது படிக்க வேண்டும். ஆழமாகப் படிக்க வேண்டும்” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
“உதாரணமாக கலைஞர் கருணாநிதி, ஜிடி நாயுடு, தாமஸ் ஆல்வா எடிசன் போன்றவர்களின் வெற்றிக்கு இடையறாத கற்றலே காரணம்” என்று எடுத்து கூறினார். “சமுதாய மாற்றம் அறிவியலால் மட்டுமே முடியும் பாடப்புத்தகத்தை தாண்டி பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமையைத் தேடி தாருங்கள்” என்று அறிவுரை வழங்கினார்.
7 மற்றும் 9 ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகள் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று நடனம் புரிந்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் இரா.கீதா இக்கல்வியாண்டில் மாணவ-மாணவிகள் கல்வியிலும் பாட இணைச் செயல்பாடுகளிலும், விளையாட்டிலும் வெற்றி பெற்று வாகை சூடியதை ஆண்டறிக்கை மூலம் அழகாக எடுத்துரைத்தார். 2026-2027 ஆம் கல்வி ஆண்டில் பெரியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 11-ஆம் வகுப்பிற்கு தமிழ் வழி கல்வி ஆரம்பிக்கபடுகிறது என்பதையும் கூறினார்.
காணொலிக் காட்சி
அடுத்ததாக மாணவ, மாணவிகள் கல்வியிலும் பாட இணைச் செயல்பாடுகளான அபாகஸ், கையெழுத்துப் பயிற்சி, உடற்பயிற்சி, இசை, ரோபோட்டிக், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மற்றும் தற்காப்புக் கலைகளான சிலம்பம், கராத்தே போன்றவற்றில் சிறந்து விளங்குவதையும் மாணவர்கள் தேசிய இயக்கங்களில் இணைந்து ஆர்வத்துடன் செயலாற்றுவதையும், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடிய நிகழ்வுகளையும் காணொலிக் காட்சி மூலமாக மிக அழகாக எடுத்துரைத்தனர்.
எழுச்சிமிக்க கருத்துகளை…
அடுத்ததாக பெரியாரின் எழுச்சி மிக்க கருத்துகளை இசையோடு பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர். அதனைத் தொடர்ந்து 4 மற்றும் 5ஆம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகள் மயிலாட்டம், கரகாட்டம், புலியாட்டம், தப்பாட் டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளை நடனமாகஆடி பார்வையாளர்களைப் பரவசப் படுத்தினர். மவுன மொழி நாடகத்தின் வாயிலாக சாலை விதிகளை பின்பற்றுவதன் அவசியத்தையும், சமூக மாற்றம் ஒவ்வொருவரிடமிருந்தும் தொடங்க வேண்டும் என்பதையும் மனதில் பதிய வைத்தனர். ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பிலிவர் நடனத்தின் மூலம் மேடையை அதிர வைத்து பார்வையாளர்களை மகிழ வைத்தனர். அதனைத் தொடர்ந்து மூட நம்பிக்கைகளை தகர்த்து எறிந்து அறிவியலுடன் இணைந்து பகுத்தறிவோடு சிந்தித்து செயல்பட்டால் எதிர்காலம் சிறக்கும் என்பதை நாடகத்தின் வாயிலாக எடுத்துரைத்தனர். 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளின் மேற்கத்திய நடனம் (வெஸ்டர்ன் டான்ஸ்) பார்வையாளர்களை நவீன உலகத்திற்கு அழைத்துச் சென்றது.
மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கல்
LKG முதல் 11ஆம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், வருகை பதிவில் 100 விழுக்காடு பெற்ற மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார். அத்துடன் அரசுப் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 12 ஆம் வகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் ஊக்கத் தொகையும் மற்றும் நினைவுக் கோப்பையையும் வழங்கினர். மேலும் அரசு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி அளித்த ஆசிரியர்களை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கியும், பள்ளியில் 10 ஆண்டுகள் சிறப்புடன் பணியாற்றி வருகின்ற தமிழ் ஆசிரியர் இளங்கோவன் அவர் களுக்கு ரூ. 10,000 ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தனர். இவ்விழாவில் பெற்றோர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவின் நிகழ்வுகளை பெருமகிழ்ச்சியோடு கண்டு களித்தனர். மாணவி நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
