ச.பூ.கார்முகில்
இந்தியா ஒரு வெப்பமண்டல நாடு, பூமத்தியரேகைக்கு அருகில் இருப்பதால் பொதுவாகவே இந்திய துணைக்கண்டம் வெப்பமான வானிலையைக் கொண்டிருக்கும். அதிலும் முக்கியமாக கோடை காலமான மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் கடுமையான வெப்பம் நிலவும். இப்படியான நிலையில் புவி வெப்பமாதலால் ஒவ்வொரு ஆண்டும் இயல்பு வெப்பநிலை அதிகரித்து வருவது மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கோடைகாலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பதிவான வெப்பநிலை புதிய உச்சங்களை அடைந்துள்ளது. இந்த சாதனையும் குறைவான இடைவெளியில் மீண்டும் மீண்டும் முறியடிக்கப்பட்டு வருகிறது.
வெப்ப அலை என்பது ஒரு தீவிர வானிலை நிகழ்வு. அதைத் தடுக்கவோ, நிறுத்தவோ பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஆனால், அப்பாதை மிகவும் தூரமானது. ஆனால், அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்ய முடியும். அரசுகள் கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வெப்பஅலையினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கமுடியும்.
பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வசதி அளிப்பதை உறுதி செய்தல்.
வெப்ப அலை அபாய எச்சரிக்கை காலங்களில் மக்களுக்குத் தேவையான அளவு நிழற்குடை மற்றும் குடிநீர் வசதி கிடைப்பதை உறுதி செய்ய ஏதுவாக பேருந்து பணிமனை / நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், பயணியர் தங்குமிடங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பொது இடங்களை உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டறிய வேண்டும்.
மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மய்யம் போன்ற இடங்களில் மின்சார வசதி தடையின்றி வழங்கப் படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தல் வேண்டும்.
மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மய்யம் போன்ற இடங்களில் குளிர்சாதன வசதிகள் அல்லது உறைப் பனிக்கட்டி, உப்பு-சர்க்கரை கரைசல் ஆகியவை இருப்பு வைத்தல் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை போன்றவற்றில் தேவையான அளவு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வெப்ப அலைத் தாக்கத்தால் பாதிக்கப்படும் நபர்களுக்கு அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
வெப்ப அலைத் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளம்பரப் பலகைகள் வைத்தல்.
பேருந்துப் பணிமனை / நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், பயணியர் தங்குமிடங்கள், சுற்றுலாத் தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பொது இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அமைத்தல்.
பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் பூங்காக்களை நீண்ட நேரம் திறந்து வைத்திருத்தல்.
பணியாளர் சட்டங்களின் படி பணிச்சூழலில் தேவையான அளவு தங்குமிடம் பாதுகாப்பான குடிநீர் மற்றும் குளியலறை வசதி போன்றவற்றை பணியாளர்களுக்கு அளிக்க தொழிலாளர் நலத்துறை சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அவசர நிலையை எதிர்கொள்ளும் விதமாக எந்நேரமும் தேவையான உபகரணங்களுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் தயாராக இருத்தல் வேண்டும்.
திறந்த வெளிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு வெப்ப அலைத் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போதுமான பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
போக்குவரத்துக் காவலர்களுக்கு தேவையான அளவு நிழல் தரக்கூடிய தங்குமிடங்களை அமைத்துத் தர வேண்டும்.
அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் சூரிய ஒளியில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட வேண்டும்.
கோடைக்காலங்களில் பேரிடர் தணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் நடைபெறும் பகுதிகள் குறித்த தகவல்களை சேகரித்தல்.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட விதிகளில் தெரிவித்துள்ளபடி இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு வெப்ப அலை தாக்கக் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த பயிற்சி வழங்கப்பட வேண்டும் மேலும் அவர்களுக்குத் தேவையான அளவு தங்குமிடம் பாதுகாப்பான குடிநீர் ஆகியவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். மேலும், இப்பணியாளர்களின் குழந்தைகளுக்கும் சூரிய ஒளியில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட வேண்டும்.