‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் குறித்து கடிதம் எழுதிய தமிழ்நாடு மாணவருக்கு, பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோட்டைச் சேர்ந்த மாணவர் பிரகாஷ் பழனிவேல், ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். 2025 நவ. 29 முதல் டிச.7 வரை நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்ற அவர், தனது அனுபவங்களை பிரதமருக்கு கடிதமாக எழுதியிருந்தார் (எழுத வைத்திருப்பார்கள்!).
அந்தக் கடிதத்தில், பழங்காலத் தமிழ் நாகரிகத்தையும், காசியின் காலத்தால் அழியாத தொன்மையான ஆன்மிக மரபையும் அழகாக இணைத்து, கருத்து தெரிவித்திருந்தார். மேலும், தொல்காப்பியம், பாரதியாரின் கவிதைகள் ஆகியவற்றில் இருந்தும் மேற்கோள் காட்டியிருந்தார்.
காசியை பாரத மாதாவின் கழுத்து ஆபரணமாகவும், தமிழ்நாட்டை வெள்ளிக் கொலுசாகவும் சித்தரித்து எழுதியிருந்தார். இரண்டும் வெவ்வேறானவை என்றாலும், ஒரே ஆன்மிக உடலின் பிரிக்க முடியாத பகுதிகள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். காசி ஹனுமான் படித்துறையில், கங்கை நதிக்கரையில் ஒரு மூதாட்டியுடன் ஏற்பட்ட அமைதியான சந்திப்பு குறித்தும் நெகிழ்வுடன் குறிப்பிட்டிருந்தார். மொழி புரியாவிட்டாலும், தீபம், புன்னகை, பிரார்த்தனை மூலம் ஆழமான ஒற்றுமை உணர்வு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
‘பக்தி’ என்பது மொழிக்கு அப்பாற்பட்டது என்றும், வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பை இந்நிகழ்வு பிரதிபலிப்பதாகவும் அந்த மாணவர் விவரித்திருந்தார். அந்தக் கடிதத்துக்குப் பதில் அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாணவரின் பயணம் குறித்தும், காசியில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மாணவர் பிரகாஷ் இயற்றிய கவிதை ஆழமாக நெஞ்சைத் தொடுகிறது என்றும் பாராட்டி உள்ளார் பிரதமர்!
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வு, தமிழ் மொழி, தமிழ்நாட்டின் செழுமையான கலாச்சாரம், காசியுடனான அதன் வரலாற்றுத் தொடர்பு ஆகியவற்றைக் கொண்டாடும் துடிப்பான தளமாக மாறியுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய பங்கேற்பின் மூலம், பிரகாஷ் பழனிவேல் போன்ற மாணவர்கள் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை உயர்த்திப் பிடிப்பவர்களாக மாறியுள்ளனர் என்று தெரிவித்துள்ள பிரதமர், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வில் இளைஞர்களின் பங்கேற்பைப் பாராட்டியுள்ளார்.
காசி தமிழ்ச் சங்கமம் மீதான மாணவரின் பற்றுக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இதுபோன்ற ஆக்கப்பூர்வமான கருத்துகள், நாடு முழுவதும் கலாச்சாரப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தித் தன்னை ஊக்குவிப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை என்ன?
காசி – தமிழ்ச் சங்கமத்தின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் அதன் நோக்கம் என்னவென்று புரியும்.
2022 நவம்பர்: காலை (5 மணி முதல் 9 வரை) காசி விஸ்வநாதர் தரிசனம், கங்கை ஸ்நானம் மதியம் (12 மணி –3 மணி) ஆன்மிக அமர்வுகள் மாலை (5 மணி முதல் 8 வரை) கோயில் ஆரதி கலை வழிபாடு.
2023 டிசம்பர்: காலை (6 மணி முதல் 10 வரை) கோயில் யாத்திரை, நண்பகல் (11 மணி முதல் 2 மணி வரை) திருக்குறள் – உபநிஷத் உரையாடல்கள்
2025 பிப்ரவரி: காலை (5 மணி முதல் 8 மணி வரை) அகத்தியர் பேரணி, ஷாஹி ஸ்நானம் மதியம் (1 மணி முதல் 4 வரை) 84 லிங்க யாத்திரை, சித்தர் அமர்வு இரவு (6 மணி முதல் 9 மணி வரை) மகா ஆரதி, பிரார்த்தனை
2025 டிசம்பர்: காலை (6 மணி முதல் 10 மணி வரை) சிறப்புப் பூஜை, தமிழ் வகுப்புகள் மதிய வேளை (12 மணி முதல் 3 மணி வரை) கோயில் தரிசனங்கள் – உரையாடல்கள்; மாலை (5 மணி முதல் 9 மணி வரை) ஆரதி நிறைவு பிரார்த்தனை
விளக்கம்: ஷாகி ஸ்ஞானம் என்றால் என்ன? – கும்பமேளாவின் முக்கிய நீராடல் நிகழ்வு
ஆரதி என்றால் என்ன? – ஹிந்துக் கோவில்களில் வழங்கப்படும் ‘புனித’ வழிபாட்டு முறையாகும். இதில் பூக்கள், தூபம், தேய்பிறை ஆகியவற்றால் தெய்வத்தைச் சுற்றி வலம் வந்து அர்ச்சனை செய்வது இது பக்தர்களின் பாவங்களை நீக்கி, ஆன்மிக சுத்திகரிப்பை அளிப்பதாகும்.
– இதுதான் காசி தமிழ்ச் சங்கமத்தின் செயல்பாடுகள்! ஒன்றிய அரசு தனி ரயில் ஏற்பாடு செய்து, தமிழ்நாட்டிலிருந்து பக்தர்களை அழைத்துச் செல்லுகிறது. 8 நாட்கள் முதல் 15 நாட்கள் வரைகூட நடப்பது உண்டாம்.
நடந்த நிகழ்ச்சி நிரல்களைக் கவனித்தாலே இதன் பின்னணியில் சங்பரிவாரின் திட்டம் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது!
பக்தியும், ஆன்மிகமும் தானே அவர்களின் போதை மாத்திரைகள்!
ஒப்புக்குச் சப்பானி என்பதுபோல் இடையே ‘திருக்குறள்’, ‘தமிழ்’ என்று வைத்துள்ளனர். அப்படியே திருக்குறளை சொல்லிக் கொடுத் தாலும் பரிமேலழகர் சொன்னதுபோல் தானிருக்கும்.
‘‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கிய ஒழிதலும் ஆகும். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்’’ என்பது தானே பரிமேலழகரின் உரை.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறும் திருக்குறளும், பிறப்பில் பேதம் பேசும் மனுதர்மமும் ஒன்றாகுமா?
பிஜேபியைச் சேர்ந்த மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் தருண்விஜய் 2016ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ ஏற்பாடு செய்தாரே! அந்த சிலையின் நிலை தற்போது என்ன? சிலையை வைக்கத் திட்டமிட்டபோது உள்ளூர் சாதுக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தற்போது தற்காலிகமாக பொதுப் பணித்துறை (டேம் கோதி கெஸ்ட் ஹவுஸ்) அலுவலகத்தில் கறுப்புப் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறதே!
காசி தமிழ்ச்சங்கமம் மூலம் தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே உள்ள ஆன்மிகக் கலாச்சாரத்தைப் புதுப்பிக்க முன்னின்று முயற்சி செய்யும் பிரதமர் மோடி மனம் வைத்தால் அந்தத் திருவள்ளுவர் சிலையைப் பொருத்தமான இடத்தில் நிறுவ முடியாதா?
காசி தமிழ்ச் சங்கமம் என்பதெல்லாம் அசல் ஏமாற்று வித்தை. பார்ப்பனீயக் கலாச்சாரத்தைத் தமிழர்கள் தலையில் கட்ட செய்யப்பட்ட சூழ்ச்சிதான்!
யாரோ ஒரு தமிழ்நாடு மாணவன் காசி தமிழ்ச்சங்கமம் பற்றி ‘ஆகா ஊகா’ என்று எழுதிய ஒரு கடிதத்தைப் (எழுத வைக்கப் பட்ட கடிதத்தை) பெரிதுபடுத்தி ஒரு பிரதமர் தூக்கி நிறுத்துவதன் நோக்கம் எல்லாம் வடக்கு ஆன்மிகக் கலாச்சாரத்தை தமிழர்களின் மண்டைக்குள் திணிப்பதுதான்!
எச்சரிக்கை!
