திருவாங்கூர் சமஸ்தானம் (18) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நம்பூதிரிப் பார்ப்பனர்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள அனைத்துக் கோயில்களையும் தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பெரும்பாலும் அக்கோயில்கள் அவர்களால் உருவாக்கப் பட்ட அறக்கட்டளைகளால்தான் நடத்தப்பட்டன. நாயர்கள் உட்பட யாருமே அந்த அறக்கட்டளைகளில் இருக்க முடியாது. கோயில்கள் மட்டுமின்றி, கோயில் தெருக்களும் அவர்களின் அறக்கட்டளைகளின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். அந்தக் கோயில்களும், அதனைச் சுற்றியிருந்த தெருக்கள் எல்லாவற்றிற்கும் அவர்களே முடிசூடா மன்னர்களாக நம்பூதிரிப் பார்ப்பனர்கள் வைத்திருந்தனர். அவர்களை மீறி அங்கு எதுவுமே நடைபெற முடியாது.

கட்டுரை, ஞாயிறு மலர்

கோயில்களில் நாயர்களைத் தவிர வேறு ஜாதியினர் யாரும் நுழைய முடியாது. அவர்களுக்கு எடுபிடியாக இருந்த நாயர்கள் மட்டுமே கோயில்களுக்குள் செல்ல முடியும். என்னதான் கோயில்களின் உள் நுழைய நாயர்களுக்கு அனுமதி இருந்தாலும், நம்பூதிரிப் பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அவர்களும் சூத்திரர்களே. அதனால் கோயில்களில் கடைசி வரிசையில்தான் அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நம்பூதிரிகளின் அடியாட்களான நாயர்களுக்கே அந்த இடம் என்றால் மற்ற கீழ்ஜாதிகளின் நிலை? ஈழவச் சமுதாயத்தினர் கோயில் மதிற் சுவரிலிருந்து (கோயிலில் இருந்தல்ல!) 12 அடியும், தாழ்த்தப்பட்டோர் 64 அடி ஒதுங்கி நின்றுதான் கடவுளைத் தொழ வேண்டும்.

கட்டுரை, ஞாயிறு மலர்

இந்த ஜாதிச் சட்டங்களை மீறியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். தப்பித் தவறி நம்பூதிரிப் பார்ப்பனர்கள் கண்களில் கீழ்ஜாதியினர் பட்டுவிட்டால் நம்பூதிரிகள் தீட்டாகி விடுவார்களாம். அதனால், அவர்கள் ‘இல்லத்’தில் (தரவாடுகளில்) நுழையக் கூடாது. வீட்டிற்கு வெளியே தலை முழுகிக் குளித்து விட்டு, தீட்டுக் கழிக்கும் மந்திரங்களைச் சொல்லிவிட்டுத்தான் இல்லத்திற்குள் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத ஜாதியச் சட்டம். 3 சதம் கூட இல்லாத நம்பூதிப் பார்ப்பனர்கள், 90 சதம் இருந்த பெரும்பான்மை மக்களை தொடக் கூடாதவர்களாக, பார்க்கக் கூடாதவர்களாக நம்பூதிரிப் பார்ப்பனர்கள் ஆக்கி வைத்திருந்தனர்.

கட்டுரை, ஞாயிறு மலர்

(Ref: “திருவாங்கூர் அடிமைகள்” by முனைவர் சா.முருகேசன்)

ஆதிக்க சக்திகளை அடக்கவென்றே சில வரலாற்று மனிதர்கள் வரத்தானே செய்வர். திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆட்டிப் படைத்த நம்பூதிரிப் பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்கி, அடிமைப் பட்டுக் கிடந்த மக்களின் விடுதலை வாழ்விற்கு வழிகாட்ட சில சீர்திருத்தவாதிகள் அந்த மண்ணில் தோன்றினர். அவர்களில் முக்கியமானவர்கள் வைகுண்டசாமி (முத்துக்குட்டி சாமியார் 1809 – 1891), சிறீநாராயண குரு (1856-1928), அய்யன்காளி (1865-1941) ஆகியோர் அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் அவ்வப்போது சிறு சிறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கோயில்கள் இருக்கும் தெருக்களில் கூட நடக்க உரிமையற்ற அந்த மக்களை (நாடார்களை) 1870இல் வெள்ளையன் நாடார் என்பவர் ஒன்று திரட்டினார். குமாரக்கோயிலில் வெள்ளையன் நாடார் தலைமையில் 1200 சாணார்கள் (நாடார்கள்) உள்ளே நுழைந்தனர். அவர்கள் திட்டத்தை முன்கூட்டியே அறிந்த நாயர்கள் அங்கே ஆயுதங்களுடன் காத்திருந்தனர். கோயிலில் பெரும் கலவரம் நிகழ்ந்தது. அந்தக் கலவரத்தில் 150 சாணார்கள் கொல்லப்பட்டனர். இதுபோன்ற கலவரங்களும், கொலைகளும் ஆங்காங்கு நடந்தன.

கட்டுரை, ஞாயிறு மலர்

1809ஆம் ஆண்டு, “முடிசூடும் பெருமாள்” என்று பெயரிடப்பட்ட ஆண் குழந்தை நாடார் பெற்றோர்களுக்குப் பிறந்தது. சாணார் வீட்டுப் பிள்ளைகளுக்கு நல்ல பெயர் எல்லாம் வைக்கக் கூடாது என்று மேல்ஜாதி நம்பூதிரிகளும், நாயர்களும் கலாட்டா செய்தனர். ‘முடிசூடும் பெருமாள்’ என்பது கடவுள் விஷ்ணுவின் பெயர். அது மேல் ஜாதிக்காரர்களுக்கு உரிய பெயர் என்பது அவர்கள் வாதம். அவர்கள் மிரட்டல்களுக்குப் பயந்த பெற்றோர்கள் அந்தக் குழந்தைக்கு ‘முத்துக்குட்டி’ என்று பெயர் மாற்றம் செய்து வளர்த்தனர்.

ஆழ்ந்த அறிவோடு வளர்ந்த குழந்தை வளர, வளர சாணார்கள் மேல் நிகழ்த்தப்படும் ஜாதியக் கொடுமைகளைக் கண்டு, அவற்றை ஒழிக்க வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டார். துணிச்சலான சாணார்கள் மெல்ல மெல்ல இவர் பக்கம் திரும்பத் தொடங்கினர். ஜாதியக் கொடுமைகளால் மிகவும் பாதிப்படைந்திருந்த அந்த மக்களை இணைத்து முத்துக்குட்டி “அய்யா வழி” என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். அவர் கருத்துகளைத் தொடர்ந்தவர்கள் அவரை “வைகுண்டசாமி” என்று அழைக்கத் தொடங்கினர். அவர்கள் கூட்டம் பெருகத் தொடங்கியது. வைகுண்டசாமியின் பின்னால், அடிமைப்பட்டு ஒடுங்கிக் கிடந்த சாணார்கள் அணி திரள்வதைக் கண்ட நம்பூதிரி – நாயர் கூட்டணி அதிர்ச்சி அடைந்தது. இந்த அமைப்பை துவக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

திருவாங்கூர் மன்னரிடம், வைகுண்டசாமி பற்றி குற்றம் சாட்டி முறையிட்டனர். இந்த நிலை தொடர்ந்தால் சமூக அமைப்பே தகர்ந்து விடும் என்பதே அந்தக் குற்றச்சாட்டு. திருவாங்கூர் மன்னர் ஸ்வாதித் திருநாள் மகாராஜா வைகுண்டசாமி பற்றி விசாரணையை மேற்கொண்டார். நம்பூதிரிகள் தூண்டுதலால் பலவித வரிக் கொடுமைகளுக்கு ஆளான சாணார்களுக்கு ஆதரவாக வைகுண்டசாமி, அரசாணைக்கு எதிராக மக்களைத் திரட்டுவது அரசரின் கவனத்திற்கு வந்தது. அவரைக் கைது செய்ய ஸ்வாதித் திருநாள் மகாராஜா உத்தரவிட்டார். அவரது காவலர்கள் வைகுண்டசாமியைக் கைது செய்து, கை விலங்கிட்டு, தெருத் தெருவாக அடித்து, இழுத்துச் சென்று சிறையிலடைத்தனர். 110 நாட்கள் சிறைபட்டார் வைகுண்டசாமி.

திருவாங்கூர் நாட்டில் ஜாதிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஜாதியினரை ஒருங்கிணைத்துப் போராடினால்தான் அதிகாரமிக்க, ஆதிக்க ஜாதியினரை எதிர்த்து நிற்க முடியும் என்ற முடிவு செய்தார் வைகுண்டசாமி. “சமத்துவ சங்கம்” என்ற அமைப்பை நிறுவினார் அவர். அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் உறுப்பினர்களாகலாம் என்று அறிவுறுத்தினார். சமத்துவ சங்கத்தின் கொள்கைகளைப் பரப்பவும், மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டவும் “நிழல் தாங்கல்” எனும் மன்றங்களை நிறுவினார். கீழ் ஜாதிக்காரர்களுக்குக் கல்வி இல்லாததே அடிப்படையான கோளாறு என்பதை உணர்ந்த வைகுண்டசாமி நிழல் தாங்கல் மன்றங்கள் மூலம் கல்வி கற்றுத் தரச் சொன்னார். அதே நேரத்தில் “அனைவரும் சமம்” என்ற கொள்கைகளைப் பரப்புவதிலும் ஈடுபட்டார். இதனால் ஏராளமான சாணார்கள் கல்வி கற்கத் தொடங்கினர்.

நாடார் (சாணார்கள்) இனத்தில் 16 வயதை அடைந்த வாலிபர்கள் தலையில் தலைப்பாகைக் கட்டி, கையில் குறுங்கத்தியைக் கொடுக்கும் மரபு இருந்தது. அதற்கு “உறுமால் கட்டு” என்று பெயர். கீழ்ஜாதிக்காரர்கள் துணியால் உறுமால் கட்டுவது என்பது மேல் ஜாதிக்காரர்களான நம்பூதிரிப் பார்ப்பனர்களை அவமரியாதை செய்வதாகும் என்று அரசரிடம் புகார் செய்தனர். அவர்கள் பேச்சைக் கேட்டு அந்த மரபுக்கு அரசர் தடை விதித்தார். அவர்களை இழிவு செய்ய வேண்டும் என்றே வைக்கோலால் ஆன உறுமாலையைத்தான் தலையில் சூட வேண்டும் என்று அரசர் உத்தரவிட்டார். இந்த உறுமாலையை “சும்மாடு” என்றழைப்பார்கள். இந்த இழிவை ஒழிக்க வேண்டும் என்று வைகுண்டசாமி முடிவு செய்தார். அதனால் தன்னைக் காண வருபவர்கள் அனைவரும் துணியால் ஆன சும்மாட்டைத்தான் அணிந்து வர வேண்டும் என்று ஆணையிட்டார். அவரின் வழியைப் பின்பற்றும் தொண்டர்கள் இன்றளவும் ‘அய்யா வழி’ வழிபாட்டுத் தலத்திற்குத் துணியால் ஆன தலைப்பாகையைக் கட்டிக் கொண்டுதான் செல்வர்.

கோயில்களுக்குச் செல்லத் தடை இருந்ததால், அவர்களுக்கு வெளியே நின்றுதான் காணிக்கை செலுத்த வேண்டும் என்று கட்டுப்பாடு. அந்தக் காணிக்கையை நம்பூதிரிகளின் எடுபிடிகளான நாயர்கள் பொறுக்கிக் கொண்டு, கோயில் உள்ளே இருந்து, இலையில் கட்டப்பட்ட பிரசாதத்தைத் தூக்கி எறிவார்கள். இந்த இழிவைப் போக்கும் வகையில் வைகுண்டர், “காணிக்கை இடாதீங்கோ, காவடி தூக்கிதீங்கோ, வீணுக்கு தேடுமுதில் விருதாவில் போடாதீங்க” என்று பாடினார்.

கீழ் ஜாதிக்காரர்கள் ஓட்டு வீடு கட்டக் கூடாது என்றிருந்த கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில், கீழ் ஜாதிக்காரர்கள் தங்கள் வீடுகளை அடுத்தடுத்து தொடர் வீடுகளாகக் கட்டத் தன் தொண்டர்களிடம் கூறினார். வீட்டின் வாசல்களைத் தெற்கு நோக்கி இருக்கும்படிக் கட்டச் சொன்னார். அவர் மேல் அளவிருந்த அன்பையும், மரியாதையையும் வைத்திருந்த அவர் தொண்டர்கள் அவர் சொன்னதையெல்லாம் செய்தனர். வைகுண்டர் அவர் சொந்த ஊரின் மய்யத்தில் ஒரு குடிநீர்க் கிணற்றை வெட்டினார். “முந்திரிக் கிணறு” (புனிதக் கிணறு) என்ற பெயரில் ஒரு கிணற்றை வெட்டி, அதன் நீரைக் கொண்டு, சமைக்கப்பட்ட உணவை அனைத்து ஜாதியினரும் ஒன்று சேர்ந்து உண்டு மகிழும்படிச் செய்தார். பின்னாளில் நடந்த ‘சமபந்தி போஜன’த்திற்கு முன்னோடி இந்த வழிமுறைதான்.

நிழல்தாங்கல் மன்றங்கள், வழிபாட்டுத் தலங்களாகவும் விளங்கின. அங்கு உருவ வழிபாடு செய்வதை முழுமையாக தடை விதித்தார். உருவ வழிபாடு வந்தால் நாளடைவில் பார்ப்பனர்கள் மீண்டும் பண்ணயம் செய்ய உள்ளே வந்து விடுவார்கள் என்பதால் உருவ வழிபாட்டிற்குப் பதில் ஒரு நிலைக் கண்ணாடியை வைத்து, அதற்கு முன் ஒரு விளக்கை வைத்துத் தொழும் முறையை உருவாக்கினார். இன்றளவும் ‘அய்யா வழிபாட்டுத் தலங்களில் இந்த வழியில்தான் தொழும் முறை நிலவுகிறது.

தன் மக்கள் மானத்தோடும், ஜாதிய இழிவிலிருந்தும் மீண்டு மரியாதையோடு வாழ வேண்டும் என்று வைகுண்டசாமி நினைத்தாலே ஒழிய மதமாற்றத்தை அவர் ஆதரிக்கவில்லை. இந்து மதத்தில் இருந்தபடியேதான் போராடி, உரிமைகளைப் பெற வேண்டும் என்றுதான் அவர் நினைத்தார். அதனால் கிறிஸ்துவர்கள் எதிர்ப்பை அவர் எதிர்நோக்க வேண்டி வந்தது. இப்படி ஆரம்பத்திலிருந்தே ஜாதிய ஆதிக்கவாதிகளின் எதிர்ப்பு, அரசாங்கத்தின் எதிர்ப்பு, கிறிஸ்துவர்களின் எதிர்ப்பு என்று எதிர்ப்பிலேயே வைகுண்டசாமி தன் இயக்கத்தை வளர்த்தார்.

ஜாதியக் கொடுமை, இழிவு ஆகியவற்றிலிருந்து தம் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு இயங்கினார் வைகுண்டசாமி. “பறையனைத் தொட்டால் தீட்டு, சாணானைப் பார்த்தாலே தீட்டு” என்று கேவலப்படுத்தப்பட்டு ஒரு இனத்தை மீட்டு அவர்களின் மான மீட்பராக வந்தவர் வைகுண்டசாமி. அவர் எண்ணப்படியே நாடார் சமுதாய மக்கள் இன்று கல்வியிலும், பொருளாதாரத்திலும் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றால் வைகுண்டசாமிதான் அதற்கு அடித்தளமிட்டவர் என்பதே உண்மை.

(தொடருவேன்….)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *