ஒரு சமயம் ஏனம்பள்ளி ஜமீன்தார் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் சென்றிருக்கும்போது. சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறின பார்ப்பனன் ஒருவனைத் தாகத்திற்குத் தண்ணீர் கேட்கும்போது, அவன் நம்மிடம் கீழே இருந்த டம்ளரைக் கையில் எடுத்தான். உடனே பக்கத்திலிருந்த மற்றொரு பார்ப்பனச் சமையல்காரன் இந்தப் பார்ப்பானைப் பார்த்து, “என்னடா மடையா? சூத்திரன் குடித்த டம்ளரைக் கையில் தொட்டு எடுத்து விட்டாய்” என்று கோபமாகப் பேசினான். உடனே, கைவல்ய சுவாமியார் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் எழுந்து எச்சில் கையாலேயே அந்தப் பார்ப்பனனை ஓர் அறை செவுளில் அறைந்து, “யாரடா சூத்திரன்?” என்று கேட்டார். அப்போது ஒரு சிறு கலகமாகிப் பிறகு, அந்தப் பார்ப்பனன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இந்த மாதிரி இன்னும் பல சம்பவங்களில் நாங்கள் கலந்திருந்ததுண்டு.
மற்றும், சுவாமியாரவர்கள் எப்போது பார்த்தாலும் தேர்த் திருவிழா. கோயில் செலவு விக்கிரக பூசை. சமுதாய வாழ்க்கையில் உள்ள பல சடங்குகள் ஆகிய இவைகளே இந்த நாட்டுக்குப் பெரும் க்ஷயரோகம் போன்ற வியாதி என்று சதா சொல்லி வருவார். பார்ப்பனியச் சடங்குகளின் புரட்டுகளைச் சிறிதும் தாட்சண்யமில்லாமல் எப்பேர்ப்பட்டவர்களுடனும் தர்க்க ரீதியாய் எடுத்துச் சொல்லிக் கண்டித்து வருவார். இவ்வளவு செய்தும் இவருக்குப் பொதுமக்களிடம் மதிப்பும், பக்தியும் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், அவர் தனக்கென்று இடுப்பு வேஷ்டியைத் தவிர, சாப்பாட்டைத் தவிர வேறு ஒரு சாதனத்தையும் விரும்பியதுமில்லை; வைத்துக்கொண்டதுமில்லை.
– தந்தை பெரியார்
உண்மை இந்துமதம் நூலுக்கு எழுதிய முகப்புரையில்