தமிழ்நாடு அரசு vs ஆளுநர்: முடிவில்லா மோதலும், அரசியலமைப்புச் சட்ட விவாதமும்!-பாணன்

10 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராகச் செய்யப்படுவதையே ஆளுநர் ஆர்.என்.ரவி வழமையாக்கிக் கொண்டுள்ளார். ஆளுநர் தனது பணியைச் செய்யாமல், அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காக்காமல், இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிராகச் செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுவது தொடர்பான நிகழ்வுகள், ஒரு மரபு சார்ந்த சடங்கு என்பதையும் தாண்டி, அரசியல் மற்றும் சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளன.

தொடரும் வெளிநடப்புகள்: ஒரு காலவரிசை

2021-இல் ஆளுநராகப் பதவியேற்ற ஆர்.என். ரவி, 2022-ஆம் ஆண்டைத் தவிர்த்து, மற்ற அனைத்து ஆண்டுகளிலும் (2023, 2024, 2025 மற்றும் 2026) ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் தவிர்த்துள்ளார்.

2023 – கொள்கை முரண்: ‘திராவிட மாடல்’ ஆட்சி பற்றியும் திராவிடத் தலைவர்களின் பெயர்கள் அடங்கிய பகுதியையும், ஆளுநர் வாசிக்க மறுத்ததால், அரசு தயாரித்த உரையே அவைக்குறிப்பில் இடம் பெறும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார்.

2024 – நாட்டுப்பண்: கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே நாட்டுப்பண் இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறி, உரையை வாசிக்காமல் அமர்ந்தார். அவைத்தலைவர் மு.அப்பாவு ஆளுநரின் நிலைப்பாட்டை விமர்சித்ததைத் தொடர்ந்து ஆளுநர் வெளியேறினார்.

2025 : இந்த ஆண்டிலும் நாட்டுப்பண் விவகாரத்தை முன்வைத்து ஆளுநர் உரையைத் தவிர்த்தார்.

2026 – தற்போதைய நிலை: இவ்வாண்டின் கூட்டத்தொடரிலும் (20.01.2026) ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு மீது 13 குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படித் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இத்தகைய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

முதலமைச்சரின் அறிவிப்பு:
சட்டத் திருத்த முயற்சி

ஆளுநரின் இந்தத் தொடர் முரண்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை விளக்க அறிக்கை என்றும், அந்த நடைமுறையை ஆளுநர் மதிக்காதபோது அந்த விதியே தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்குவதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை, இந்தியா முழுவதும் உள்ள ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் தி.மு.க முன்னெடுக்கும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆளுநர் உரை: அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரமும் மரபுகளும்

இந்திய ஜனநாயக அமைப்பில், மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதில் ஆளுநரின் உரை மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 176, ஆளுநரின் இந்த சிறப்பு உரை குறித்துத் தெளிவாக விளக்குகிறது.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 176இன் முக்கியத்துவம்

அரசமைப்புச் சட்டத்தின்படி, ஆண்டின் இரண்டு முக்கிய சந்தர்ப்பங்களில் ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றுகிறார்:

ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்ற முதல் கூட்டத் தொடரின் தொடக்கத்தில். ஒவ்வொரு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின் (பொதுவாக பட்ஜெட் கூட்டத்தொடர்) தொடக்கத்தில்.

சட்டமன்ற மேலவை (Legislative Council) நடைமுறையில் உள்ள மாநிலங்களில், ஆளுநர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார். இந்தக் கூட்டத்தைக் கூட்டியதற்கான காரணங்களை உறுப்பினர்களுக்கு விளக்குவதே இந்த உரையின் அடிப்படை நோக்கமாகும்.

உரையைத் தயாரிப்பது யார்?

ஆளுநர் உரையாற்றினாலும், அந்த உரையில் அவர் தனிப்பட்ட முறையில் கருத்துகளை இடம்பெறச் செய்ய முடியாது. “ஆளுநரின் உரை என்பது உண்மையில் அரசின் உரை” என்பதே இதிலுள்ள மிக முக்கியமான அம்சம். அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் ஆவணமே அது.

ஆளுநரின் அதிகாரம் மற்றும் வரம்புகள்

உரை தயாரிக்கப்பட்ட பிறகு, அது ஆளுநரின் பார்வைக்கு முன்பே அனுப்பி வைக்கப்படும். இதில் ஆளுநருக்கு ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், சில மாற்றங்களைப் பரிந்துரைக்க அவருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், ஆளுநர் மாற்றங்களைப் பரிந்துரைக்கலாமே தவிர, அதை உரையில் இடம்பெறச் செய்யலாமா – செயல்படுத்த வேண்டுமா என்பதை அரசுதான் முடிவு செய்யும். நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் ஜனநாயக மரபுகள் இதையே வலியுறுத்துகின்றன. குறிப்பிட்ட சில விசயங்களை உரையில் சேர்க்க  – நீக்க – திருத்த வேண்டும் என்று அவர் அரசை வற்புறுத்த முடியாது.

சட்டப்பேரவை மரபுகளும் ஆளுநர் உரையும்:
மாநில அரசுகளின் புதிய உத்திகள்!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது ஒரு முக்கியமான மரபு மற்றும் அரசியலமைப்புத் தேவை (Article 176). இருப்பினும், சமீபகாலமாகப் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களுக்கும். முதலமைச்சர்களுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு, இந்த மரபுகளில் புதிய மாற்றங்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது.

தெலங்கானா: ‘தொடர் கூட்டத்தொடர்’
எனும் விளக்கம்

2022-2023ஆம் ஆண்டு தெலங்கானா மாநில பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அப்போதைய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கும் இடையே கடும் மோதல் நிலவியது. பொதுவாக ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும் என்பது விதி. ஆனால், தெலங்கானா அரசு ஆளுநர் உரையின்றி நேரடியாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது.

இதற்கு தெலங்கானா அரசு அளித்த விளக்கம் சுவாரஸ்யமானது. முந்தைய ஆண்டின் அக்டோபர் மாதம் தொடங்கிய கூட்டத்தொடர் முறைப்படி முடித்து வைக்கப்படவில்லை என்றும், மார்ச் மாதம் நடப்பது அதன் தொடர்ச்சிதான் (Prorogue) என்றும் வாதிட்டது. இதனால் அது ‘புதிய ஆண்டின் முதல் கூட்டம்’ என்ற தகுதியைப் பெறவில்லை எனக் கூறி, ஆளுநர் உரையைத் தவிர்த்தது மாநில அரசு.

மேற்கு வங்கம்:
பேரவைத் தலைவரின் நிலைப்பாடு

இதேபோன்ற சூழல் மேற்கு வங்கத்திலும் 2024ஆம் ஆண்டு அரங்கேறியது. முதலமைச்சர் மம்தாவுக்கும், ஆளுநர் சி.வி.ஆனந்த போசுக்கும் இடையிலான உறவு கசப்பான நிலையில், பிப்ரவரி மாத பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையின்றித் தொடங்கியது. அங்கேயும் பேரவைத் தலைவர் பிமான், முந்தைய கூட்டத்தொடர் அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படாததால், இது அதன் தொடர்ச்சியே தவிர புதிய கூட்டத்தொடர் அல்ல என்று விளக்கம் அளித்தார். இதன் மூலம் ஆளுநரைத் தவிர்க்கும் முயற்சியை அம்மாநில அரசு முன்னெடுத்தது.

தமிழ்நாட்டின் வரலாற்றுப் பின்னணி

தமிழ்நாடு அரசியலில் ஆளுநர் – முதலமைச்சர் மோதல் என்பது புதிய ஒன்றல்ல. 1990-களில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் ஆளுநர்
எம்.சென்னா ரெட்டிக்கும் இடையே நிலவிய மோதல் இந்தியாவே கவனித்த ஒரு நிகழ்வாகும். ஆளுநரின் கார் மீது தாக்குதல் நடத்தப்படும் அளவுக்குப் பதற்றம் நிலவிய அந்தச் சூழலிலும் கூட, சென்னா ரெட்டி சட்டப்பேரவைக்கு வந்து உரையாற்றும் மரபைக் கைவிடவில்லை. அரசியல் கருத்து வேறுபாடுகள் உச்சத்தில் இருந்தபோதும், அன்றைய காலகட்டத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் ‘சடங்குகள்’ தவிர்க்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் உரை என்பது மாநில அரசின் கொள்கை விளக்கமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், ஆளுநர்கள் மாநில அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவிப்பதும், பதிலுக்கு மாநில அரசுகள் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்க முயல்வதும் இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தில் ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி ஆளுநர் உரையைத் தவிர்ப்பது போன்ற நிகழ்வுகள், வரும் காலங்களில் மாநில – மத்திய உறவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விவாதத்திற்குரிய ஒன்றாகிவிட்டது.

ஆளுநர் உரை: காலாவதியான நடைமுறையா?
ஆர்.வெங்கட்ராமன் முதல் மு.க.ஸ்டாலின் வரை
ஒரு வரலாற்றுப் பார்வை

இந்திய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற ஜனநாயகத்தில், ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடரும் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் உரையுடன் தொடங்குவது மரபாக உள்ளது. பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறை, சமீபகாலமாகப் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் உரை வாசிக்கும் விதியை அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மூலம் நீக்கப் போவதாகத் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்த வரலாற்றுத் தரவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆர்.வெங்கட்ராமனின்
தொலைநோக்குப் பார்வை

இந்த நடைமுறையை நீக்க வேண்டும் என்ற குரல் இன்று நேற்று எழுந்ததல்ல. 1987 முதல் 1992 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த
ஆர்.வெங்கட்ராமன், தனது பதவிக்காலத்திலேயே இதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அவர் எழுதிய ‘குடியரசுத் தலைவராக நானிருந்த ஆண்டுகள்’ (My Presidential Years) என்ற நூலில், இந்த உரை நிகழ்த்தும் முறை ஏன் தேவையற்றது என்பதற்கான காரணங்களை விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

சட்டமன்றங்களில் அரங்கேறிய அநாகரிகங்கள்

1980-களின் இறுதியில் மாநிலச் சட்டமன்றங்களில் ஆளுநர் உரையின்போது நடந்த நிகழ்வுகள்
ஆர்.வெங்கட்ராமனை மிகவும் பாதித்தன. குறிப்பாக, 1990களின் தொடக்கத்தில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர் சையித் நூருல் ஹசன், பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்ற முற்பட்டபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவரை முற்றுகையிட்டுப் பேசவிடாமல் தடுத்தனர்.

இது குறித்து அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு 1989 மார்ச் மாதம் கடிதம் எழுதிய ஆர். வெங்கட்ராமன், “மகாராட்டிரா, மேற்கு வங்காளம் போன்ற முன்னேறிய மாநிலங்கள் கூட இத்தகைய ஒழுக்கக் குறைபாட்டிற்கு விதிவிலக்கல்ல. ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியும் இத்தகைய நடத்தையில் சளைத்தது அல்ல” என்று வெளிப்படையாகச் சாடினார்.

பிரிட்டிஷ் மரபின் எச்சம்

குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் உரைகளை ஆர்.வெங்கட்ராமன் “காலாவதியானவை” என்று கருதினார். பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடைமுறையை அப்படியே கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதில் அவருக்கு உடன்பாடில்லை. ஆளுநர்கள் மாநில அரசின் கொள்கைகளையே வாசிக்கிறார்கள் என்றாலும், சில நேரங்களில் அவர்களுக்கு முரணான கருத்துகளைப் பேச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு மாற்றாக அவர் முன்வைத்த பரிந்துரை மிக முக்கியமானது: “குடியரசுத் தலைவருக்குப் பதிலாகப் பிரதமரையே நாடாளுமன்றத்தில் உரையாற்றச் செய்வதன் மூலம் இந்த நடைமுறையை மாற்ற முயன்றேன். ஆனால், அதற்கு எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை” என்றார்.

  1. மேற்கு வங்காளம்: “முதலமைச்சராகத் தொடரும் அரசியல் சாசன உரிமையை மீறிவிட்டார்” என்று முதலமைச்சர் மம்தா குறித்து மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் விமர்சனம் செய்துள்ளார்.
  2. தமிழ்நாடு: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் 4ஆவது ஆண்டாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
  3. கேரளா: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், சட்டப்பேரவையில் அரசின் கொள்கை விளக்க உரையின் சில பகுதிகளைத் தவிர்த்துவிட்டதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
  4. கருநாடகா: கருநாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட், அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்க மறுத்து, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

முடிவும், தற்போதைய சூழலும்!

ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையிலான அதிகாரப் போட்டி அதிகரித்து வரும் இன்றைய அரசியல் சூழலில், ஆர்.வெங்கட்ராமன் முப்பதாண்டுகளுக்கு முன்பே முன்வைத்த கருத்துகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. ஆளுநர் உரை என்பது வெறும் சடங்காக மாறிவிட்டதா அல்லது அது சட்டமன்ற மாண்பைச் சிதைக்கிறதா என்ற கேள்விக்கு, தகுந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் மூலமே விடை காண முடியும் என்பதுதான் உரிய முடிவாகும்.

அதிகார வரம்பும் ஜனநாயக மாண்பும்-
(ஓய்வு) நீதிபதி அரி பரந்தாமன்

ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசின் கொள்கை விளக்கமாகவே ஆளுநர் உரை அமைகிறது. இது குறித்து அண்மைக் காலங்களில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் அவர்கள் மிகத்தெளிவான சட்டப் பார்வையை முன்வைக்கிறார்.

அரசின் கொள்கையே ஆளுநர் உரை

“ஆளுநர் வாசிக்கும் உரை என்பது தனிப்பட்ட முறையில் அவருடையது அல்ல; அது அந்த மாநிலத்தை ஆளும் அரசின் கொள்கை அறிக்கை. இதில் மாற்றங்களைச் செய்யவோ அல்லது சில பகுதிகளைத் தவிர்க்கவோ ஆளுநர்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் அரசியலமைப்புச் சட்டப்படி கிடையாது.

இறுதி முடிவு மக்களுக்கே

ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுபவர், அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாகம் குறித்த இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு. ஆளுநர் மாளிகை என்பது அரசின் கொள்கைகளை மக்களுக்கு அறிவிக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டுமே தவிர, தடையாக இருக்கக் கூடாது” என்பது சட்டப்படி அவர் கூறுகின்ற முடிவாகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கருநாடக அரசை
நிலைகுலையச் செய்ய ஆளுநர் மாளிகை
‘பாஜகவின் அரசியல் அலுவலகமாக’ச் செயல்படுகிறதா?

சட்டத்துறை அமைச்சர் சந்திப்பு (ஜனவரி 21, 2026)

கருநாடக சட்டப்பேரவை கூடுவதற்கு முதல் நாள், ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அரசு தயாரித்த உரையை வாசிக்க மறுப்பு தெரிவித்தார்.

இந்த விவகாரத்தின் முட்டுக்கட்டையைத் தீர்க்க, சட்டத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் ஆளுநர் மாளிகைக்குச் சென்று அவரைச் சந்தித்தனர். அரசு தரப்பில் சில திருத்தங்களைச் செய்ய முன்வந்தனர். இதனால் அவர் சமாதானமானார்.

சட்டப்பேரவை வெளிநடப்பு (ஜனவரி 22, 2026)

ஜனவரி 22 அன்று ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியபோது ஆளுநர் ஆற்றிய உரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹிந்தியில் மூன்றே வரி

அரசு தயாரித்த நீண்ட உரையைப் படிக்காமல், “எனது அரசு மாநிலத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை இரட்டிப்பாக்க உறுதிபூண்டுள்ளது. ஜெய் ஹிந்த், ஜெய் கருநாடகா” என்று ஹிந்தியில் வெறும் மூன்று வரிகளை மட்டும் வாசித்துவிட்டு ஆளுநர் அவையை விட்டு வெளியேறினார்.

  • கடும் எதிர்ப்பு: ஆளுநர் வெளியேற முயன்றபோது, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை வழிமறித்து (Gherao) முழக்கங்களை எழுப்பினர். ‘ஆளுநருக்குத் கன்னடத்தில் முழக்கமிட்டனர். பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

முதலமைச்சர் சித்தராமையாவின் எதிர்வினை

இந்தச் செயலை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று முதலமைச்சர் சித்தராமையா விமர்சித்துள்ளார்:

அரசியலமைப்புச் சட்ட விதிமீறல்: “ஆளுநர் அமைச்சரவை தயாரித்த உரையைத்தான் வாசிக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டத்தின் 176 மற்றும் 163ஆவது பிரிவுகள் கூறுகின்றன. ஆனால் அவர் சொந்தமாகத் தயாரித்த உரையை வாசித்தது சட்டத்திற்குப் புறம்பானது” என்று அவர் கூறினார்.

அடுத்த கட்ட நடவடிக்கை: ஆளுநர் ஒன்றிய அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ள கருநாடக அரசு, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதைப் பற்றி ஆலோசித்து வருகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *