அறம் வளர்க்கிறதா ஆன்மிகம்? (2) காட்டை அழித்து கோயில் கட்ட வேண்டுமா? மஞ்சை வசந்தன்

12 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நளாயினி

நளாயினி கதையைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். கற்புக்கரசி என்று போற்றப்படுபவள். அவர் கதை என்ன? “நளாயினியின் கணவன் காமவெறி கொண்டவன். அவன் விலை மாதர்களை அதிகம் புணர்ந்ததால் தொழுநோய் வந்துவிட்டது. கைகால் அழுகிவிட்டது. நடக்க முடியவில்லை அவன் எங்கு செல்ல வேண்டும் என்றாலும், அவனை ஒரு கூடையில் உட்கார வைத்து நளாயினி தூக்கிச் செல்வாள்.

ஒருநாள் ஒரு விலை மாதரை விரும்பி அவளைப் புணர வேண்டும் என்று தன் மனைவி நளாயினியிடம் கூற, உடல் எல்லாம் அழுகிய நிலையில் அந்த விலை மாது சம்மதிக்க மாட்டாள் என்பதால், அவள் மனம் கவர தினம் அவள் வீட்டிற்குச் சென்று நளாயினி வேலைகளைச் செய்தாள். இதனால் மனம் இளகிய விலைமாது, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, “தொழுநோயாளியான என் கணவன் உங்களோடு உறவு கொள்ள நீங்கள் சம்மதிக்க வேண்டும்” என்று கேட்கிறாள்.

அதற்கு அந்த விலை மாது, கணவனுக்காக நீங்கள் படும் பாட்டை நான் மனதிற்கொண்டு சம்மதிக்கிறேன். உங்கள் கணவனை அழைத்து வாருங்கள் என்கிறாள். நளாயினி கணவனைக் கூடையில் வைத்துச் சுமந்து விபச்சாரி வீட்டுக்கு வந்தாள்” என்கிறது நளாயினியின் கதை. இந்த நளாயினி தான் கற்பின் சிகரம் என்று போற்றப்படுகிறாள். இவளைத் தான் எல்லா கடவுளும் போற்றினார்கள் என்கிறது ஆன்மிகம்.

வாழ்வியல் அறமா?

கணவன் மனைவி இருவரும் வாழ்விணையர்கள் என்பதே நேர்மை, சமத்துவம், நீதி, வாழ்வியல் நெறி, கணவன் மனைவி இருவரும் இன்ப துன்பங்களில் சமபங்கு கொண்டு, ஒருவருக்கொருவர் உற்ற துணையாய் இருக்க வேண்டும் என்பதே அறம், அப்படியிருக்க கணவன் பல பெண்களுடன் உறவு கொணடு, தொழுநோய் வந்து கைகால்கள் அழுகி நடக்க முடியாமல் போன நிலையிலும் அவன் விலை மாதிடம் உறவு கொள்ள துடிக்கிறான், அவன் விருப்பத்தைக் கண்டிக்காது, அவனுக்காக விலைமாதின் வீட்டில் வேலை செய்து, அவள் மனதை இளக்கி, தன் கணவனை கூடையில் சுமந்து சென்று அவன் விருப்பத்தை, வேட்கையை நிறைவேற்றியவளே கற்புக்கரசி, அவளே உயர்தரப் பெண் என்பது சரியா? அப்படிப்பட்ட கணவனின் எண்ணத்தைக் கண்டித்து சரிப்படுத்துகிறவள் செயல் சரியா? கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று, கணவனைத் தொழுது அவனுக்கு அடிமை வேலை செய்கிறவள் தான் உத்தமி என்பது நியாயமா? ஆன்மிகம் போற்றுகின்ற செய்கின்ற அறிவுறுத்துகின்ற இந்த நெறிமுறைகள் அறத்தின் பாற்பட்டவையா? வாழ்வியல் அறத்திற்கு, கணவன் மனைவி சமத்துவத்திற்கு, ஒழுக்கத்திற்கு, மாண்புக்கு இந்த செயல் முறைகள் ஏற்புடையனவா? சிந்தித்துப் பாருங்கள்.

ஒருவனுக்கு ஒருத்தி, ஒழுக்கம் என்பதே வாழ்வியல் நெறி, மறுமணம், விதவை மணம், மணமுறிவு போன்றவை விதிவிலக்குகளேயன்றி அவை வாழ்க்கை நெறியாகா! இணையர் இருக்க இன்னொருவரை உடற்சுகத்திற்கு நாடுவது அறமல்ல என்பதால், நளாயினியின் செயலும், அவளது கணவனின் செயலும் அறமல்ல. அதனைப் போற்றிப் புகழும் ஆன்மிகமும் அறம் சார்ந்தது அல்ல. அப்படியிருக்க, இப்படிப்பட்ட ஆன்மிகம் எப்படி அறத்தை வளர்க்கும்?

காட்டை அழித்து கோயில் கட்ட வேண்டுமா?

“கடம்பவனத்துக்குக் கிழக்கில் குலசேகரப் பாண்டியனின் நகரமாகிய மணவூரில் (இப்போது மணலூர்) தனஞ்சயன் என்று ஒரு வாணிகன் இருந்தான். அவன் ஒரு நாள் இரவு கடம்பவனம் வழியாக வந்தான். அக்கடம்பவனத்தில் இருந்த சொக்கலிங்கப் பெருமானைக் கண்டு வழிபட்டான். அங்கு தேவர்கள் வந்து பூஜை செய்தலைக் கண்டு அதிசயித்தான். பின்னர் குலசேகர பாண்டியனி டத்தில் சென்று கடம்பவனத்தில் தான் கண்ட அதிசயங்களை எடுத்து உரைத்தான். உடனே குலசேகரப் பாண்டியனும் சென்று வழிபட்டு வந்தான். அன்றைய இரவு மன்னன் கனவில் சோமசுந்தரர் ஒரு சித்தராக வந்து பாண்டியனை நோக்கி, ‘அரசே காட்டை அழித்து கோயிலாகச் செய்வாயாக’ என்று சொல்லி மறைந்தருளினார். மன்னனும் அவர் ஆணைப்படி காட்டை அழித்து அற்புதமான திருக்கோவிலைக் கட்டுவித்தான். அதனைச் சுற்றித் திருநகரை உருவாக்கினான்” என்கிறது திருவிளையாடல் புராணம்.

அரசு காட்டைப் பாதுகாக்க வேண்டுமா? காட்டை அழித்துக் கோயில் கட்ட வேண்டுமா? அப்படியென்றால் ஜக்கி வாசுதேவ் செய்வது சரி என்று ஆகிவிடாதா? சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும், மழை பொழியுவும் காடு கட்டாயத் தேவை. மக்கள் நலனுக்கு அதுவே அடிப்படை. அப்பிடியிருக்க, காட்டை அழித்து கோயில் கட்டச் சொன்னது சரியா? அறமா? மக்கள் நலன் காப்பது, இயற்கை வளங்காப்பது முக்கியமா? கோயில் முக்கியமா?

மக்கள் வசிக்கும் இடத்தில் கோயில் இருக்க வேண்டியதே சரியாகும். மாறாக காட்டை அழித்துக் கோயில் கட்டுவது இயற்கை பாதுகாப்பிற்கும். மக்கள் பாதுகாப்பிற்கும் எதிரான செயல் அல்லவா? அறத்திற்கு எதிர் அல்லவா?

“அனந்தகுணப் பாண்டியன் தன் மகனாகிய குலபூடண பாண்டியனுக்குப் பட்டம் கட்டித் தான் சிவபதவியடைந்த பின்பு குல பூடணன் சிறப்புற ஆட்சி செய்து வந்தார். அவனுக்கு சுந்தர சாமந்தன் என்னும் சேனாதிபதி ஒருவன் இருந்தான். அவன் சிவனடியாரையே சிவன் எனக் கருதி வழிபடும் சிவநெறியுடன் வாழ்ந்து வந்தான்.

ஒரு சமயம் சேதிராயன் என்னும் வேடவர் தலைவன் பாண்டியன் மேல் படையெடுத்து வந்தான். அதையறிந்த பாண்டியன் மேலும் பல சேனைகளைத் திரட்டுமாறு தன் சேனாதிபதி சாமந்தனிடம் கட்டளையிட்டார். பொன்னறை முழுவதும் திறந்து சேனைகள் திரட்டத் தேவையான பொன்னை மன்னன் எடுத்துக் கொடுத்தான். சுந்தரசாமந்தன் அச்செல்வம் முழுவதும் சிவனடியார் பொருட்டும் திருக்கோயிலில் திருக்கோபுரம், ஆயிரங்கால் மண்டபம் போன்ற அமைப்புக்கும் செலவழித்துவிட்டான். எனினும் சேனை திரட்டுவது போலவே பாவனைகள் செய்து வந்தான். பல நாட்களாக ஓலையெழுதப்பட்ட ஊர்களிலிருந்து சேனைகள் ஒன்றும் வரவில்லை. அரசன் தளபதியாகிய சுந்தரசாமந்தனை அழைத்து நாளை சூரியன் மறைவுதற்குள் சேனைகள் எல்லாம் வரவேண்டும் என்றான்.

சுந்தரசாமந்தன் என்ன செய்வது என்று அறியாமல் சோமசுந்தரப் பெருமானை வேண்டினான். மறுநாள் சேனையுடன் வருவதாக அசரீரி சாமந்தனிடம் கூறியது. மறுநாள் காலையில் சிவபெருமான் தன்னுடைய சிவகணங்களை படை வீரர்களாக்கி, பெரும்படையுடன் தம் இடபநந்தியைக் குதிரையாக்கி, அதன்மேல் ஏறி, சேவகராய் வந்தார்” என்கிறது திருவிளையாடல் புராணம்.

கடவுளுக்கு அழகா?

சேனைகளைத் திரட்டி வர கொடுக்கப்பட்ட செல்வத்தை கோயில், மண்டபம், கோபுரம் என்று கட்டினால் அது மோசடியல்லவா? நம்பிக்கைத் துரோகம் அல்லவா? அப்படி மோசடி செய்தவனை கடவுள் பக்தனாக ஏற்பது சரியா? எந்தத் தப்பு செய்தாலும், தன்னை வணங்கிவிட்டால், அவனுக்குக் கடவுள் உதவுவார் என்று கூறுவது, அறமா? மோசடிச் செயலுக்குக் கடவுளும் உடந்தையாய் இருந்தார் என்பது நல்ல வழிகாட்டலா? அறநெறியின்பாற்பட்டதா?

கட்டுரை

தன்னிடமுள்ள சிவகணங்களைப் படைவீரர்களாக சிவன் அனுப்பி வைத்தார் என்பது பித்தலாட்டச் செயல் அல்லவா? இது கடவுளுக்கு அழகா? தனக்குக் கோயில் கட்டினால் சிவபெருமான் எந்த மோசடி வேலைக்கும் உடந்தையாய் இருப்பார்; தானும் தாராளமாய் மோசடி வேலைகளைச் செய்யலாம்  என்ற துணிவு மக்களுக்கு வராதா? இப்படிப்பட்ட மோசடிச் செயல்களை கடவுளே செய்ததாய் கூறும் ஆன்மிகம் அறமுடையதா? அறம் வளர்ப்பதா?

சிவபெருமான்  திருக்கயிலாய மலையில் ஆலமர நிழலில் சிவகணங்களுக்கும், தவமுனிவர்களுக்கும் சில தருமங்களை உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது முருகப்பெருமானுக்குப் பால் ஊட்டி வளர்த்த கார்த்திகைப் பெண்கள் அறுவரும் வந்து, “அய்யனே! அடியவர்களாகிய எங்களுக்கு அட்டமாசித்திகளை உபதேசித்து அருள வேண்டும்” என்று வேண்டினர்.

சிவபெருமான் அவர்களை நோக்கி, ‘நீங்கள் பார்வதியைச் சிந்தித்தால் அவற்றை அருளுவாள்’ என்று எட்டுச் சித்திகளை அவர்களுக்கு உபதேசித்தார். அவர்கள் ஊழ்வினையால் தொடர்நது உமா தேவியாரைத் தியானிக்காததால் அவற்றை மறந்தார்கள். இதனால் சிவபெருமான் சினங்கொண்டு அவர்களை பட்டமங்கை என்னும் தலத்தில் ஆலமரத்தடியில் கருங்கல்லாகுமாறு சபித்தார். கார்த்திகைப் பெண்கள் சாபவிமோசனம் வேண்டினர். இறைவர் ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தாம் வந்து பழைய உருவம் தந்து, அட்டமாசித்திகளையும் உபதேசித்தருளுவதாகக் கூறினார்.

அஷ்டமா சித்திகள்

கார்த்திகைப் பெண்கள் அறுவரும் பட்டமங்கையில் ஆலமரத்தடியில் கருங்கல்லாய்க் கிடந்தார்கள். ஆயிரம் ஆண்டுகள் சென்றன. சோமசுந்தரக் கடவுள் ஒரு குரு வடிவம் கொண்டு ஆசிரியராக அக்கருங்கற்களின் மீது அருள் நோக்கம் செலுத்தினார். உடனே அக்கற்கள் பழைய கார்த்திகைப் பெண்களாக வடிவம் கொண்டனர். கார்த்திகைப் பெண்கள் அறுவரும் குரு ஆச்சாரியரை வணங்கினார்கள். ஆச்சாரியராக வந்த இறைவன் கார்த்திகைப் பெண்கள் தலைமேல் தன்னுடைய கையை வைத்து அஷ்டமாசித்திகள் அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிராகாம்யம்,  ஈசத்வம், வசித்வம் ஆகிய எட்டுச் சித்திகளையும் உபதேசித்தார். அறுவரும் உமாதேவியாரைத் தியானித்துத் திருக்கையிலை மலையை அடைந்தார்கள்” என்கிறது திருவிளையாடல் புராணம்.

கட்டுரை

முருகனையே வளர்த்து ஆளாக்கிய கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரும் பார்வதியைத் தியானம் செய்ய மறந்ததற்காகக் கல்லாக ஆகும்படித் தண்டித்தது சரியா? இதுதான் நன்றிக் கடனா? இது கடவுளின் தகுதிக்கு உகந்ததா? அதுவும் ஆயிரம் ஆண்டுகள் கல்லாகக் கிடக்க வேண்டும் என்று சபித்தது நியாயமா? அப்படிப்பட்ட பெருங்குற்றத்தையா அவர்கள் செய்துவிட்டார்கள்?

மறந்த குற்றத்திற்கா ஆயிரம் ஆண்டுகள் தண்டனை? தாயைப் புணர்ந்த மாபாவிக்கு மோட்சம் அளிக்கிறார் சிவன்! மறந்த குற்றத்திற்கு ஆயிரம் ஆண்டுகள் தண்டனை. என்னய்யா நியாயம்? கடவுளே அப்படிச் செய்யலாமா? இது அறமா? இவ்வாறு கூறும் ஆன்மிகம் அறமுடையதா?

நீர் வேட்கை

பாண்டிய மன்னனை நண்பனாக்கிக்கொள்ள காடுவெட்டி சோழன் பரிசுப் பொருள்கள் அனுப்பினான். மேலும் தன் மகளைப் பாண்டியனுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தான்.

இதற்கிடையில் இராசேந்திர பாண்டியனின் தம்பி இராஜசிம்மன் சூழ்ச்சி செய்து சோழன் மகளைத் தானே திருமணம் செய்து கொண்டான். அதுமட்டுமின்றி, தானே பாண்டிய நாட்டிற்கு அரசனாக விரும்பி சோழ மன்னருடன் சேர்ந்து படையெடுத்தான்.

சகோதரனும் நண்பனும் தனக்குப் பகைவனாகி வருவதை அறிந்த பாண்டியன், சோமசுந்தரப் பெருமானிடம் முறையிட்டு வருந்தினான். எல்லாம் வல்ல பெருமான், அசரீரியாக நின்று, “பாண்டியனே! நீ நாளை உன் படையோடு சென்று சோழனை எதிர்க்கக் கடவாய்; வெற்றி உனக்கே கிட்டுமாறு செய்வோம்” என்றார்.

மறுநாள் பாண்டியனும் சோழனும் கடும்போர் புரிந்தார்கள். பாண்டியனின் சேனை சிறியதாயினும் சிவபெருமான் திருவருளால் பலமாக மாறி இருந்தது. உச்சி வேளை வந்தது; கடும் வெயிலால் இருபடை வீரர்களும் நீர் வேட்கை மிகுந்து வருந்தினர். அப்போது சோமசுந்தரப் பெருமான் பாண்டியனின் படை நடுவில் ஒரு தண்ணீர்ப் பந்தலைப் பரப்பினார்; அங்கு ஒரு வேலையாளாக வந்து வீரர்களின் நீர் வேட்கையைப் போக்கினார்.

நீர் பருகிய வீரர்களுக்கு அதிக உத்வேகமும் பலமும் ஏற்பட்டது.அந்த நீர் தெய்வாமிர்தம் ஆயிற்றே! இளைப்பு நீங்கிய பாண்டியனின் வீரர்கள் சோழன் படை வீரர்களை வென்று சோழனையும் அவன் மருமகனையும் சிறைப்பிடித்து வந்து பாண்டியன் முன்னால் நிறுத்தினர்’’ என்கிறது திருவிளையாடல் புராணம்.

தருமப்படி நட்பு நாடிய சோழனுக்குத்தான். சிவன் துணை செய்திருக்கவேண்டும். இங்கு தப்பு செய்தது பாண்டியனின் தம்பிதான். அப்படியிருக்க போரே நடக்காமல் சிவன் தடுத்து ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு போரில் பலர் இறக்கும்படி செய்தது கடவுளுக்கு அழகா? தண்ணீர்ப் பந்தல் அமைத்து ஒரு தரப்புக்கு உதவியது நேர்மையா? அறமா? கடவுளின் பெயரால் இப்படி அறமற்ற கருத்துகளை ஆன்மிகம் பரப்பலாமா?

மன்னன் கடமை என்ன?

“சுந்தரேச பாத சேகரப் பாண்டிய மன்னன் படைகளைச் சுருக்கி, அதில் மிஞ்சும் செல்வங்களைக் கொண்டு சிவத்தொண்டைச் சிறப்புடன் செய்துவந்தான். இதையறிந்த சோழ மன்னன் ஆயிரம் பரிக்கோர் கேசவன் என்பான், பாண்டிய நாட்டின்மீது படையெடுத்தான். அதையறிந்த பாண்டிய மன்னன் சிவனை வேண்ட, கடவுள் அசரீரியாக, “கவலை வேண்டாம். போர்க்களம் செல்லுங்கள். நான் பாதுகாப்பேன்” என்றார்.

பாண்டியன் போர்க்களம் சென்றான். அங்கு பாண்டியன் சேனை ஏராளமாய் நின்றது. இதைக் கண்ட சோழ மன்னன் பாண்டியன் படைகளுடன் போரிட்டான். சிவபெருமான் ஆயிரம் குதிரை வீரர் படைக்குத் தலைமையேற்று சோழப் படையுடன் மோதினார். சோழன் தோற்றோட, வீரனாய் வந்த சிவன் மறைந்தார். அப்போது திரும்பிப் பார்த்த சோழன் குதிரைப் படை வீரன் இல்லாததால் மீண்டும் சோழப் படைகளை எதிர்த்துப் போரிட, பாண்டியன் தோற்றோடும் போது ஒரு பள்ளத்தில் வீழ்ந்தான். துரத்திச் சென்ற சோழனும் அப்பள்ளத்தில் வீழ்ந்தான். இதில் சோழன் இறந்து போக, பாண்டியன் உயிருடன் மீண்டான்” என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

ஒரு மன்னன் தன் தலையாய கடமைப்படி படைபலத்தைச் சிறப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால், படைக்குச் செலவிட வேண்டிய பணத்தைக்கொண்டு கோயில் கட்டச் செலவிட்டான் என்றால் அந்த மன்னன் கடமை தவறியவன்; மக்களைக் காக்கத் தவறியவன்; மன்னனாக இருக்கவே தகுதியற்றவன். அப்படியிருக்க அவனைக் கண்டித்து நெறிப்படுத்துவதற்கு மாறாக, அவனுக்குத் துணையாய் இருந்து போரிட்டார் கடவுள் என்பது, மக்கள் பணியாற்றுவதைவிட கடவுள் பணியாற்றுவதே மன்னனுக்குப் பெரிய கடமையென்று கடவுளே ஒப்புதல் தந்தது போல் ஆகாதா?

ஒன்றிய பி.ஜே.பி. அரசு இராணுவ பலத்தைப்  பலப்படுத்தாமல், அதற்கான பணத்தையெல்லாம் இராமருக்குக் கோயில் கட்டவும், அனுமாருக்குக் கோயில் கட்டவும் செலவிட்டால், சீனாக்காரன் படையெடுத்து வந்தால் இராமனும் அனுமரும் இந்தியாவைக் காக்கப் போரிடுவார்களா?

கடவுளின் பேரால் தப்பான, கடமை தவறிய செயல்களைச் செய்வது அறமா? அப்படிப்பட்ட செயல்களை புகழ்ந்து பாராட்டும் ஆன்மிகம், அறத்திற்கு எதிரானது அல்லவா?

“பாண்டியன் வரகுணன், ஒரு நாள் வேட்டைக்கு கனவட்டம் என்னும் தன்குதிரை மீதேறிச் சென்றான். மாலை வேட்டை முடிந்து வரகுணன் தன்குதிரை மீதேறி நகரத்துக்கு வந்து கொண்டிருந்தான். இருட்டிவிட்டபடியால் வயதுமுதிர்ந்த பார்ப்பனர் வீதியில் படுத்திருப்பதை அறியாமல், குதிரை அவரை மிதித்துவிட்டது. பார்ப்பனர் இறந்துவிட்டார். அதை வரகுணனும் அறியவில்லை.

எந்த வகையில் நியாயம்?

அடுத்த நாள் குதிரைக் கால்பட்டு இறந்த பார்ப்பனர் உடலோடு உறவினர்கள் அரண்மனையை அடைந்து நடந்ததைக் கூறினர். இது கண்டு வரகுண பாண்டியன் மிகவும் வருந்தினான். பார்ப்பனர் உறவினருக்கு நிரம்பப் பொருட்களைத் தந்து இறந்தவனுக்கு இறுதிக் கடனாற்றுமாறு கூறி அவர்களை அனுப்பி வைத்தான். இருந்தாலும் பார்பபனரைக் கொன்ற கொலைப் பழி பிரம்மஹத்தி தோஷமாக வந்து பாண்டியனைப் பிடித்துக் கொண்டது. பிரம்மஹத்தி நீங்க பாண்டியன் அந்தணர்கள் அறிவுரைப்படி பல வகையான தானங்களைச் செய்தான். அரசமரத்தைச் சுற்றினான். வேதியர்கள் கூறியபடி சோமசுந்தரப் பெருமாளை விரதத்துடன் தினசரி ஆயிரத்து எட்டு முறை சுற்றி வந்தான். இறைவன் பாண்டியனுக்கு அசரீரி மூலம் சோழன் படை எடுத்து வருவான்; அவனைத் துரத்திச் செல்வாய்; அப்போது திருவிடைமருதூர் என்னும் தலம் செல்வாய். இங்கு உன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றான்.

சில நாட்கள் சென்றபின் பாண்டிய நாட்டை நோக்கிச் சோழ வேந்தன் படைஎடுத்துச் சுற்றி வளைத்தான். வரகுணன் அவனைத் தோற்கடித்துத் துரத்திச் சென்று திருவிடைமருதூரை அடைந்து கிழக்குவாசல் வழியே உள்ள சென்றான். அவனைத் துரத்திய பிரம்மஹத்தி கிழக்குவாசலில் நின்றது. இறைவன் வரகுணனிடம் அசரீரி மூலம் “மன்னா! நீ மேற்குவாசல் வழியே வெளியேறு” என்றது. மேற்குவாசல் வழியே வந்தான். அவனைப் பிடித்த பிரம்மஹத்தி கிழக்கு வாசலிலேயே நின்றுவிட்டது. வரகுணன் இறைவன் கருணையை எண்ணி உள்ளம் பூரித்தான். சில காலம் திருவிடைமருதூரில் தங்கி இராஜகோபுரம்  கட்டி, பல திருப்பணிகள் செய்து மதுரை திரும்பினான்” என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. இருட்டில் குதிரை செல்லும் வழியில், சாலையில் பார்ப்பனர் படுத்திருந்தது அவரது குற்றம். படுப்பவர் வீட்டில் தானே படுக்க வேண்டும்? வீதியில் ஏன் படுத்தார்?

இந்த இறப்பில் குதிரைமீதும் தப்பில்லை, மன்னன்மீதும் தப்பில்லை. அப்படியிருக்க மன்னனை பிரம்மஹத்தி ஏன் பிடிக்க வேண்டும்? தப்பு செய்த பார்ப்பான் தன் தவற்றால் இறந்தான். இதற்கு தவறு செய்யாதவர்களுக்கு பாதிப்பு வருவது  எந்த வகையில் நியாயம்? பார்ப்பான் தப்பு செய்தால் கூட அதைத் தப்பு என்று சொல்லாத ஆன்மிகம் அறம் வளர்க்குமா? பார்ப்பானுக்கு மட்டும் இவ்வளவு உயர்வும், சிறப்பும் அளிப்பது நேர்மையாகுமா? அறமாகுமா?

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *