சென்னை, ஜன.23 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் டிட்வா புயல் (ம) வடகிழக்கு பருவமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை ரூ.1503.78 கோடி செலவில் மறுசீரமைக்கும் பணிகளுக்காக நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.
ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தரமான மற்றும் பாதுகாப்பான சாலை வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. பல நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் வழங்கல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், சமீபத்திய டிட்வா புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாகவும் ஏராளமான சாலைகள் சேதமடைந்துள்ளன.
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களின் போதும், சிறப்பு வார்டு சபா கூட்டங்களின்போதும் சேதமடைந்த சாலைகளை மறுசீரமைக்கக் கோரி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து சேதமடைந்த நகர்ப்புர மறுசீரமைக்குமாறு கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளது. எனவே, அரசு மேற்காணும் கோரிக்கைகளை கவனத்துடன் கருத்தில் கொண்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் சேதமடைந்த சாலைகளை ரூ.1503.78 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
ஏற்கனவே அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.3750 கோடி செலவில் புதிய சாலைகளை அமைத்திடவும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும் பணிகள் மேற்கொள்ள அரசு ஆணை வெளியிடப்பட்டு பெரும்பாலான சாலைப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சில பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இதுவரை 2025-2026-ஆம் ஆண்டில் மட்டும் நகர்ப்புர சாலைகளின் மேம்பாட்டிற்காக ரூ.5,253.78 கோடியினை அரசு வழங்கி உள்ளது. இதன் காரணமாக நகர்ப்புர சாலைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு மேம்பட்டு, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். சாலைவழி பயணம் எளிதாக அமையும்.
“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாடு
தஞ்சையில் கனிமொழி எம்.பி. ஆய்வு!
தஞ்சாவூர், ஜன.23 தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகிலுள்ள திருமலைசமுத்திரத்தில், வரும் ஜனவரி 26, 2026 அன்று நடைபெறவுள்ள தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகளை, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. நேற்று (22.01.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் உள்ள பெண்கள் தி.மு.க. ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். பெண்கள் எப்போதும் தி.மு.க.-வைச் சார்ந்தே நிற்கிறார்கள். கடந்த காலங்களில் அ.தி.மு.க. அறிவித்த ஸ்கூட்டி போன்ற திட்டங்களையே மக்கள் மறந்துவிட்டனர். எனவே, அவர்களின் தேர்தல் அறிக்கையைப் பற்றிப் பேச எதுவும் இல்லை.”மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்:
தி.மு.க. கூட்டணி என்பது மக்களுடன் இணைந்த கூட்டணி. முதலமைச்சரின் சாதனைகளை மக்கள் உணர்ந்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் நிலை: ஒருவருக்கொருவர் உடன்பாடு இல்லாதவர்கள் இணைந்தால் அந்தக் கூட்டணி வெற்றி பெறாது. அ.தி.மு.க. பத்திரமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கவலை. தேர்தல் நெருங்குவதால் பிரதமர் அடிக்கடி தமிழ்நாடு வருவார் என்று கூறினார்.
சென்னையில் மூன்றாம் பாலினத்தவருக்கான சிறப்பு வாக்காளர் முகாம்
5 இடங்களில் நடைபெற்றது
சென்னை, ஜன.23 இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (2026) தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய ஒரு பகுதியாக, மூன்றாம் பாலினத்தவர்களுக்காக (Transgenders) பிரத்யேகமாக 5 இடங்களில் சிறப்பு வாக்காளர் பதிவு முகாம்கள் நேற்று (22.01.2026) நடத்தப்பட்டன. வாக்காளர் பட்டியலில் விடுபட்ட மூன்றாம் பாலினத்தவர்களின் பெயர்களைச் சேர்த்தல், பிழைகளைத் திருத்துதல், முகவரி மாற்றம் செய்தல் மற்றும் பெயர் நீக்கம் போன்ற பணிகளை எளிமைப்படுத்தும் நோக்கில் இந்தச் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பின்வரும் 5 முக்கிய இடங்களில் இந்த முகாம்கள் நேற்று (22.1.2026) நடைபெற்றன.
ரிப்பன் கட்டட வளாகம்: (மாநகராட்சி தலைமையகம்).
திருவொற்றியூர் மண்டலம்: வார்டு 10-க்குட்பட்ட மேற்கு மாதா தெரு.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி: வி.ஆர்.பிள்ளை தெருவில் உள்ள சமுதாயக் கூடம்.
சோழிங்கநல்லூர் மண்டலம்: கண்ணகி நகரில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளி.
திருவான்மியூர்: மாநகராட்சி பகுதி அலுவலகம். இந்த முகாம்கள் மூலம் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை உறுதி செய்யும் வகையில் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ள மாநகராட்சி நிர்வாகம் வழிவகை செய்துள்ளது. இது தவிர, மற்ற வாக்காளர்களுக்கான பொதுவான திருத்தப் பணிகளும் வாக்காளர் உதவி மய்யங்கள் வழியாகத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
