சென்னை, ஜன.23 தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகய்யா மற்றும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோர் சுகாதாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துப் பேசியதாவது:
புதிய சுகாதார நிலையங்கள்
கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, தமிழ்நாடு முழுவதும் 642 இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இவற்றை இன்னும் 10 நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தென்னிலை கிராமத்தில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையப் பணிகள் விரைவில் முடிவடையும்.
பேராவூரணி மருத்துவமனை
பேராவூரணி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே ரூ.5 கோடி செலவில் மேற்கொள் ளப்பட்ட கட்டடப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இதனையும் முதலமைச்சர் விரைவில் திறந்து வைப்பார்.
கட்டமைப்பு வசதிகள்
அய்ந்தாயிரம் மக்கள் தொகை அடிப்படையில் ஒரு துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. பாபநாசம் தொகுதி வீரமாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தேவையான 25 கேவி மின்மாற்றி மற்றும் இதர மருத்துவ உபகரணங்களை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
