சட்டமன்றத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறை ஒழிவது மட்டும் முக்கியமல்ல!
ஆளுநர் பதவியே ரத்து செய்யப்படவேண்டும்; மக்கள் விரோத நடவடிக்கைக்குத்தான் அந்தப் பதவி பயன்படுத்தப்படுகிறது!
நாகர்கோவில், ஜன.23 ‘‘சட்டமன்றத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறை ஒழிவது மட்டும் முக்கியமல்ல; ஆளுநர் பதவியே ரத்து செய்யப்படவேண்டும். மக்கள் விரோத நடவடிக்கைக்குத்தான் அந்தப் பதவி பயன்படுத்தப்படுகிறது” என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க நேற்று (22.1.2026) நாகர்கோவிலுக்கு வந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
ஆளுநர் பதவிக்குத்
தகுதியில்லாத ஒருவர்!
செய்தியாளர்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொடர்ந்து பிரச்சினை செய்து கொண்டிருக்கிறாரே, அதுகுறித்து உங்கள் கருத்து?
தமிழர் தலைவர்: ஆளுநர் பதவிக்குத் தகுதியில்லாத ஒருவரை, ஆளுநராக ஆக்கியதினுடைய விளைவு – முதல் தவறு. இரண்டாவது, அந்த ஆளுநர், பொம்ம லாட்டத்திற்கு உரியவர்; ஆர்.எஸ்.எஸ்சை சேர்ந்த ஆளுநர். ஏனென்றால், அவர் ஆடுகிறார்; டில்லி ஆட்டுவிக்கிறது.
அதற்கு ஆதாரம் வேண்டுமென்றால், நான், சற்று நேரத்திற்கு முன்பு என்னுடைய உரையில் குறிப்பிட்டதைப்போல, தமிழ்நாட்டில் நடந்ததுபோன்றே கேரளாவில் நடக்கிறது; கருநாடகாவிலும் நடக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின்
நடைமுறைக்கு எதிரானது!
பி.ஜே.பி. ஆளுகின்ற மாநிலங்களில் இதுபோன்று நடைபெறவில்லையே! இது ஆளுநர்களுடைய சண்டித்தனம் மட்டுமல்ல; அது ஒரு பகுதி. இன்னொரு பகுதி என்னவென்றால், ஆளுநர்களுக்குச் சாவி கொடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு, மாற்றுவதற்கு ‘‘நீங்கள் சில்லறை விஷமத்தனத்தையும், சண்டித்தனத்தையும் செய்யுங்கள்’’ என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் நடைமுறைக்கு மிக மிக எதிரான ஒன்றாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 159 ஆவது பிரிவு என்பதில், ‘‘மக்கள் நலனுக்கு விரோதமாக எதையும் நான் செய்யமாட்டேன்; அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதுதான் என் வேலை’’ என்றுதான் ஆளுநர்கள் பதவியேற்கும் முன்பு உறுதிமொழி ஏற்க
வேண்டும்.
ஆளுநர்களுக்கென்று
தனியே உரிமை எதுவும் கிடையாது!
ஆகவே, மாநில அரசினுடைய ஊதியத்தை வாங்குபவர்தான் ஆளுநர். அவருக்கென்று தனியே உரிமை எதுவும் கிடையாது. எதை எழுதிக் கொடுக்கி றார்களோ, அதை அவர் படிப்பதுதான் முறை.
ஆனால், ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிறார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
ஆளுநர் பதவி என்பது….
ஆகவேதான், ஆளுநர் பதவியே இனி கூடாது என்பதற்காகத் தமிழ்நாடு வழிகாட்டவேண்டும். ஆளுநர் பதவி என்பது, முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கருவி யாக, கொடுங்கரமாகப் பயன்பட்டு வருகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தையே, அடிக்கட்டுமானத்தையே உருக்குலைக்கின்ற ஒன்றாகும்.
ஆகவேதான், எங்களுடைய கோரிக்கை, ஆளுந ருக்கு என்று உள்ள சில நடைமுறைகள் ஒழிவது மட்டும் முக்கியமல்ல; ஆளுநர் பதவியே ரத்து செய்யப்பட வேண்டும். மக்கள் விரோத நடவடிக்கைக்குத்தான் அந்தப் பதவி பயன்படுத்தப்படுகிறது.
மலிவாகக் கிடைத்த பூக்கள் விலையேறும்!
செய்தியாளர்: நாளைய தினம் (23.1.2026) தமிழ்நாட்டிற்குப் பிரதமர் மோடி வருகிறாரே, அதனால், தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்தை ஏற்படுமா?
தமிழர் தலைவர்: ஆம்! பெரிய மாற்றம் ஏற்படும்.
மோடி வருகின்ற வழியில், நிறைய பூக்களை வழி நெடுகிலும் கொட்டுவார்கள். அதனால், நிறைய பூக்கள் விற்பனையாகும். அவர் வருவதற்கு முன்பு மலிவாகக் கிடைத்த பூக்கள் எல்லாம், விலையேற்றம் ஏற்பட்டு, பெரிய மாற்றம் ஏற்படும்.
– இவ்வாறு செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கூறினார்.
