எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களின் அடாவடி தொடருகிறது!
ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தாதது ஆளுநரின் தவறு!
மதுரையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
மதுரை, ஜன.22 எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்க ளில் எல்லாம் ஆளுநர்களின் அடாவடி தொடருகிறது. ‘‘ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை இல்லாத சட்டமன்றத் தொடர்’’ என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்தை ஜனநாயக உணர்வு படைத்த அத்தனைப் பேரும் வரவேற்பார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க நேற்று (21.1.2026) மதுரைக்கு வந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
ஆளுநர்கள் ஆட்டி வைக்கப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது!
செய்தியாளர்: வழக்கம்போல ஆளுநர் சட்டமன்ற உரையைப் புறக்கணித்திருக்கிறாரே?
தமிழர் தலைவர்: வழக்கம்போல ஆளுநர்; ஆகவே தான், அந்த வழக்கத்தை மாற்றவேண்டும் என்கின்ற முதலமைச்சருடைய கருத்து என்பது, மக்களுடைய கருத்தாகும்.
சடங்கு, சம்பிரதாயம் தேவையில்லை. தமிழ்நாடு ஆளுநர் மட்டுமல்ல, கேரள மாநில ஆளுநரும் இது போன்றே நடந்து கொண்டிருக்கின்றார். இதனுடைய பின்னணி என்ன என்பது மிக முக்கியமாகும்.
எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் இதுபோன்று நடைபெறுகிறது என்றால், அது திட்டமிட்டு – ஆளுநர்கள் ஆட்டி வைக்கப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
எனவே, ஆளுநர் ‘His Master’s Voice!’
தன்னை ‘ஆஃப்’ செய்துவிட்டுத்தான்
ஆளுநர் சட்டமன்றத்திற்கு வருகிறார்!
செய்தியாளர்: ஆளுநரே, என்னுடைய மைக்கை ஆஃப் செய்திருந்தார்கள் என்கிற ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறாரே?
தமிழர் தலைவர்: அவர் பேசினால்தானே மைக்கை ஆன் செய்யவேண்டும்; அவர்தான் சட்டமன்றத்தில் பேசவே மாட்டேன் என்கிறார். வெளியில் வந்துதானே பேசுகிறார்.
எங்கேபேசவேண்டுமோ, அங்கே பேசமாட்டேன் என்கிறார்.
ஆளுநரின் குற்றச்சாட்டை பேரவைத் தலைவர் மறுத்திருக்கிறார்.
சட்டமன்றத்தில் பேசமாட்டேன் என்று சொல்ப வருக்கு, மைக் ஆனாகி இருந்தால் என்ன? ஆஃப் ஆகி இருந்தால் என்ன? இரண்டும் ஒன்றுதான்!
அவர் முதலில் ‘ஆனாகி’ இருக்கிறாரா? என்று பார்க்கவேண்டும். அவர் தன்னை ‘ஆஃப்’ செய்து விட்டுத்தான் சட்டமன்றத்திற்கு வருகிறார்!
ஆகவே, முதலில் அவர் தன்னை ‘ஆன்’ செய்து கொள்ளட்டும்!
முதலமைச்சரின் சட்டமன்ற அறிவிப்பு!
செய்தியாளர்: ஆளுநர் உரை இல்லாத சட்டமன்றம் என்பது சாத்தியமா?
தமிழர் தலைவர்: தாராளமாக சாத்தியமாகும். சட்டங்கள் மனிதர்களுக்காகத்தான். சண்டித்தனம் செய்யக்கூடியவர்களுக்குச் சட்டம் இல்லை. சட்ட சபையை சண்டித்தன சபையாக ஆக்கக்கூடாது. அப்படிப்பட்ட நிலைகள் இனியும் நீடிக்கக்கூடாது.
எனவே, ‘‘ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகளை இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணை யோடு இந்திய நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும்’’ என்ற முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு இருக்கிறதே, அது மக்கள் அத்தனை பேரும் வரவேற்கக்கூடியதாகும். ஜனநாயக உணர்வு படைத்த அத்தனை பேரும் வரவேற்பார்கள்.
அதுமட்டுமல்ல, ஆளுநர் வெளிநடப்பு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி அவர் எடுத்த பதவிப் பிரமாணம் கூறு 159 ஆவது பிரிவின்படி, தவறான நடத்தையாகும்.
கூறு 159 பிரிவு, ‘‘மக்கள் நலனுக்காகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்காகவும் நான், என்னுடைய வாழ்நாள் முழுவதும் கடமையைச் செய்கிறேன்’’ என்பதைத் தெளிவாகச் சொல்லித்தான் அவர் பதவிப் பிரமாணம் எடுத்திருக்கிறார். அந்தக் கடமையிலிருந்து அவர் தவறியிருக்கிறார்.
எனவே, அவர் தார்மீக முறைப்படி, அறவழிப்படி பதவி விலகுவது மட்டுமல்ல, தனது கடமையிலிருந்து தவறியவர் (‘‘Dereliction of Duty’’) ஆகிறார்.
‘திரிசூலத்தின்’ மகிமைதான்!
செய்தியாளர்: அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி.தினகரன், இப்போது பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்திருக்கிறார்; தமிழ்நாட்டு அரசியலில் இப்போது களம் மாறி யிருக்கிறதா?
தமிழர் தலைவர்: அவர் இதற்கு முன் என்னென்ன பேசினார்? யார் யாரை மாற்றவேண்டும் என்று சொன்னார்? யாருடைய தலைமையை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சொன்னார்? எல்லாமே அந்தத் திரிசூலத்தின் மகிமைதான்.
திரிசூலத்தின் மகிமைதானே தவிர, வேறொன்று மில்லை. யார் யார்மீது வழக்கு இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் அவர்களுடைய கூட்டணியை நோக்கிப் போவார்கள். கூட்டணியை நோக்கி வராதவர்கள்மீது வழக்கு வரும் என்கிற மிரட்டல் இருக்கிறது.
எனவேதான், அவருடைய நிலைப்பாட்டை எல்லோரும் புரிந்துகொள்வார்கள். நேற்றைக்கு ஒரு நிலைப்பாடு; இன்றைக்கு ஒரு நிலைப்பாடு என்பதை விட, ஒரே பாடு, அவர் பட்ட பாடுதான்.
தமிழ்நாட்டிற்கு மோடி வருவதால்,
பூ வியாபாரிகள்தான் லாபமடைவார்கள்!
செய்தியாளர்: 23 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு மோடி வருவதினால், இப்போது இருக்கின்ற தி.மு.க. அரசு மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கப்படும்; ஓர் அரசியல் மாற்றத்தையே மோடி கொண்டு வருவார் என்று சொல்கி றார்களே?
தமிழர் தலைவர்: ஏற்கெனவே பலமுறை தமிழ்நாட்டில் கொண்டு வந்துவிட்டார். மோடி, தமிழ்நாட்டில் வருவதினால் என்ன லாபம் என்றால், ‘ரோட் ஷோ’ நடத்துவார்கள். அவர் வரும்போது, நிறைய பூக்களைக் கொட்டுவார்கள். பூ வியாபாரிகள் லாபமடைவார்கள்.
ஆகவே, பூத்தொழில் நன்றாக சிறப்பாக இருக்கும்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.
