ஒன்றிய அரசுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையே நிலவி வரும் நிதிப் பகிர்வு சிக்கல்கள் மற்றும் ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க, தென் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட கருநாடக முதலமைச்சர் சித்தராமையா முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வரவேற்கத்தக்கதாகும்.
கடந்த சில காலங்களாகவே தென் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், மாநில உரிமைகளில் ஆளுநர்கள் தலையிடுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த விவகாரங்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள, தென் மாநில முதலமைச்சர்களை ஒன்றிணைக்கச் சித்தராமையா திட்டமிட்டுள்ளார்.
1) வரிப் பகிர்வில் தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டிய நிதி நிலுவைகள் குறித்து விவாதித்தல்.
2) மாநில அரசின் முடிவுகளில் ஆளுநர்கள் குறுக்கிடுவது, தேவையற்ற முட்டுக்கட்டைகளை உருவாக்குவது போன்ற “அடாவடி” புகார்கள் குறித்து ஆலோசித்தல்.
3) கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கவும், மாநிலங்களின் உரிமைகளை (மாநில சுயாட்சியை) நிலைநாட்டவும் ஒருமித்த கருத்தை உருவாக்குதல்.
தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் சித்தராமையா விரைவில் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்க உள்ளார்.
இந்த முன்னெடுப்பு, இந்திய அரசியலில் தென் மாநிலங்களின் கூட்டுக் குரலை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வு என்பதில் அய்யமில்லை.
கேரளாவிலும் ஆளுநர் முழுமையான உரையைப் படிக்க மறுத்துவிட்டார். கருநாடகாவில் ஆளுநர் இன்று என்ன செய்தார்?
இன்று கருநாடக சட்டப் பேரவையில் உரை நிகழ்த்த வந்த ஆளுநர் அரசு தயாரித்துக் கொடுத்தவுரையைப் படிக்காமல், தானாக எழுதிக் கொண்டு வந்த உரையில் சில வரிகளைப் படித்துவிட்டு வெளிநடப்பு செய்துள்ளார்.
ஆளுநர் பதவி என்பது மரியாதைக்குரியது என்ற எண்ணம் இனி மேல் எடுபடாது!
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஆளுநர் பதவி என்பது பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டது.
பிரிட்டீஷார் வெளியேறி, இந்தியா சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பிரிட்டீஷார் முறையைப் பின்பற்றுவது – ஒரு வகையில் மனதளவில் அடிமைப்புத்தி இந்தியாவைவிட்டு அகலவில்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்; சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் முதலமைச்சர்; அமைசசர்களை தெரிவு செய்பவர் முதலமைச்சர்.
இதற்குப் பெயர்தான் ஜனநாயக ஆட்சி முறை என்பது. இந்த அமைச்சரவையின் ஆேலாசனைப்படி நடந்து கொள்பவர்தான் ஆளுநர்.
ஆனால் இப்பொழுது இது தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டுள்ளது. ஆளுநர் என்பவர் நியமனம் செய்யப்படும் ஒரு பதவியின் அலங்காரத் தலைவர் மட்டுமே. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் களைக் கொண்ட ஒரு சட்டமன்றம் நிறைவேற்றும் சட்ட முன் வடிவுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை இத்தகையவரிடம் ஒப்படைப்பது எப்படி?
சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு கிடையாது என்றால், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை அரசாங்கம் எப்படி செயல்படுத்த முடியும்?
அய்ந்தாண்டு கால வரையறை கொண்டது சட்டமன்றம்; 5 ஆண்டு காலமும், அந்த சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் சட்டமுன் வடிவுகளை ஆளுநர் கிடப்பில் போடலாம் என்றால் ஆட்சி என்ற ஒன்று எதற்கு?
மக்களாட்சியா? ஆளுநர் ஆட்சியா? என்ற கேள்விக்கு என்ன பதில்!
தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் ஓர் ஆளுநரை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சி நடத்த முடியும்?
கருநாடக மாநில முதலமைச்சர் தென் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார். அதில் ஒரே ஒரு எழுத்துக் கூடத் தவறானது என்று சொல்ல முடியுமா?
அதுவும் பிஜேபி ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு வந்த நாள் முதல், அய்.டி. ஈ.டி., சி.பி.அய்.களின் பட்டியலில் ஆளுநரையும் சேர்த்துக் கொண்டு மாநில அரசுகளை ஒடுக்கி, ஒரே கட்சி ஆட்சி என்ற அபாயச் சங்கிலியைத் தன் கைவசம் வைத்துள்ளது.
கடந்த ஜனவரி 20ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் வெளி நடப்பைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றையும் முன்மொழிந்து ‘ஆளுநர் உரை’ போன்றவை ஒரு ஜனநாயக நாட்டில் தேவைதானா! என்ற பொருளில் தமிழ்நாடு முதலமைச்சர் அழுத்தமாகப் பேசி இருந்ததைத் தொடர்ந்து, கருநாடக மாநில முதலமைச்சர் தென் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவிருப்பது மிகவும் பொருத்தமானதே!
