சென்னை, ஜன. 22- கடும் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட ஏழைத் தொழிலாளிக்கு, பெருந்தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சை (Aortic Arch Replacement) செய்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை
இது தொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன், மருத்துவக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், இதய அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் மாரியப்பன் ஆகியோர் கூறியதாவது:
சிதம்பரத்தைச் சேர்ந்த 54 வயதான முடிதிருத்தும் தொழிலாளிக்குக் கடுமையான நெஞ்சு வலி மற்றும் கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம் இருந்தது. எனவே, கடந்த நவம்பர் 23ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை இதய அறுவை சிகிச்சைத் துறையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனை செய்ததில், அவருடைய இதயத்தின் முக்கிய ரத்தக் குழாயான பெருந்தமனி (Aorta), அதன் மேல் பகுதி முதல் வளைவுப் பகுதி வழியாகக் கீழ் பகுதி வரை கிழிந்திருந்தது கண்டறியப்பட்டது. உடனே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு இருந்த ரத்தக் கொதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர், பெருந்தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த 6ஆம் தேதி இதய அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் மாரியப்பன் தலைமையிலான குழுவினர், பெருந்தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர். இந்தக் குழுவில் உதவிப் பேராசிரியர் மருத்துவர் ஜெயப்பிரகாஷ், மயக்க மருந்து வல்லுநர்கள் சுமதி, ஆஷா, முதுநிலை மருத்துவ மாணவர்கள், அறுவை சிகிச்சைச் செவிலியர் ஜமுனா மற்றும் ரத்த ஓட்ட வல்லுநர்கள் லாவண்யா, சுமதி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவாலான இந்த அறுவை சிகிச்சை சுமார் 10 மணி நேரம் நீடித்தது. அறுவை சிகிச்சையின்போது மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களும் மாற்றப்பட்டதால், மூளைக்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுச் சரிசெய்ய முடியாத நரம்பியல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருந்தது. உடலின் மற்ற உறுப்புகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் நின்று உறுப்புச் செயலிழப்பு அல்லது கை, கால் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
அதனால், மிகவும் கவனத்துடனும் துல்லியமான தொழில்நுட்பத்துடனும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிக்கு எந்தவிதமான நரம்பியல் அல்லது உறுப்பு பாதிப்புகளும் இன்றி குணமடைந்து வீடு திரும்பத் தயாராகி வருகிறார்.
அறுவை சிகிச்சை வெற்றி
தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் இத்தகைய சிக்கலான பெருந்தமனி மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த நுட்பமான அறுவை சிகிச்சையைத் தனியார் மருத்துவமனையில் செய்ய வேண்டுமென்றால் குறைந்தது ரூ.25 லட்சம் வரை செலவாகும். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை! ஒன்றிய அரசுக்கு
கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
சென்னை, ஜன.22- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
இலங்கை கடற்படை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை நேற்று (21-1-2026) சிறைபிடித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தொடர்ச்சியாக இலங்கை கடற்படை இத்தகைய கொடுமையான செயலை செய்து வருகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இலங்கை கடற்படையின் செயலை தடுத்து நிறுத்துமாறு பலமுறை கண்டித்து கூறியும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் மீனவ கிராமங்களிடைய பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து, இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மீன்பிடிப்பு முறையில் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் நீண்ட காலமாக இருக்கிற வரலாற்று ரீதியிலான உறவின் அடிப்படையிலும், இரு அண்டை நாடுகளிடையே நிலவ வேண்டிய நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் இந்த பிரச்சினையை அணுக வேண்டும்.
தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்தியா – இலங்கை இடையே பேச்சுவார்த்தை நடத்த கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும். இதுவரை கைது செய்திருக்கும் அனைத்து மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
