சென்னை, நவ.26 அய்ஏஎஸ், அய்பிஎஸ் போன்ற குடிமைப் பணிக்கான தேர்வுகளை அரசியல் சாசனத்தின் 8ஆ-வது பட்டியலில் உள்ள 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அய்ஏஎஸ், அய்பிஎஸ் போன்ற குடிமைப் பணிக்கான தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத் துவதால் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே, அரசியல் சாசனத்தின் 8-ஆவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்தத் தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கர வர்த்தி அடங்கிய அமர்வு, டிச.6-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.